உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.
(லூக்கா நற்செய்தி 6:28)
நாம் உலகில் வாழ்ந்தாலும் உலகத்துக்காக வாழவில்லை.
ஆவி (Spirit)யாகிய இறைவன் சடப்பொருளாலான உலகைப் படைத்தார்.
உலகிலுள்ள மண்ணால் ஒரு உருவம் செய்து, அதில் தன் உயிர் மூச்சை ஊதி மனிதனைப் படைத்தார். மனிதன் இரண்டு எதிர்ப்பொருட்களின் சங்கமம்.
சடப்பொருள் + ஆவிப் பொருள்.
மண்ணிலிருந்து எடுக்கப் பட்ட உடல் மண்ணுக்கே திரும்பி விடும். விண்ணகக் கடவுளின் மூச்சிலிருந்து உருவான ஆன்மா விண்ணுக்கே திரும்ப வேண்டும்.
எதிர் எதிரான இரண்டு பொருட்கள் இணைந்து,
எதிர் எதிர் பக்கம் செல்லவிருப்பதால்
அதன் செயல் பாடுகளும் எதிர் எதிராகத் தான் இருக்கின்றன.
உலகில் பாவம் பிறந்ததால் உலகம் = தீமையின் உருவகம்.
விண்ணிலிருந்து மீட்பு வந்ததால்
விண்ணகம் = நன்மையின் உருவகம்.
உலகம் தீமையைத் தான் செய்யும், நன்மை செய்தவர்களுக்கும் கூட அது தீமையையே செய்யும்.
நம் ஆண்டவர் சென்றவிடமெல்லாம் நன்மையையே செய்தார், உலகம் அவரைச் சிலுவையில் அறைந்தது.
விண்ணகம் நன்மையை மட்டுமே செய்யும், தீமை செய்பவர்களுக்கும் அது நன்மையையே செய்யும். நம் ஆண்டவர் அவரைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார்.
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்-- இதுதான் உலகம்.
தருவதைக் கொடு.
அன்பைத் தந்தால் அன்பைக் கொடு.
அடி தந்தால் அடி கொடு.
"ஏன்டா அவனைத் திட்டினாய்?"
."அவன் என்னைத் திட்டினான். நான் அவனைத் திட்டினேன்."
பழிக்குப் பழி வாங்குவது உலகம்.
இது உடலைச் சார்ந்தது.
ஆன்மா விண்ணிலிருந்து வந்து விண்ணுக்கே செல்ல வேண்டியது.
தீமைக்கு நன்மை செய்.
இதுதான் விண்ணக விதி
அடித்தால் அடியை வாங்கிக் கொண்டு பதிலுக்கு அரவணைப்பைக் கொடு.
திட்டினால் பதிலுக்கு அன்பாய்ப் பேசு.
யாராவது சாபம் போட்டால், அவனை ஆசீர்வதி.
நாம் பாவம் செய்த போது பதிலுக்கு நம்மை மீட்க வந்த இயேசு தந்த விதி இது.
தீமைக்கு நன்மை என்ற
விண்ணக விதிப்படிதான் இயேசு சொல்கிறார்,
"உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்."
"என்னைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தேன்,
நீங்களும் உங்களுக்குத் துன்பம் கொடுப்பவர்களை மன்னியுங்கள்.
நான் அவர்களுக்காகத் தந்தையிடம் பரிந்து பேசினேன்.
நீங்களும் உங்களுக்குத் தீமை செய்பவர்களுக்காக தந்தையிடம் செபியுங்கள்."
நாம் விண்ணிலிருந்து இறங்கி வந்த இயேசுவின் விருப்பப்படி செயல்படுகிறோமா?
அல்லது,
உலகினர் செயல்படுவது போல செயல்படுவோமா?
நம்மைத் துன்புறுத்துவோர்க்காக,
நமது ஆலயங்களை எரிப்பவர்களுக்காக,
நாம உரிமைகளை பறிப்பவர்களுக்காக
இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோமா?
அன்று இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது அவரை அறைந்தவர்களை மன்னித்தது போல
இன்று நம்மை துன்புறுத்துவோரை மன்னிக்கிறோமா?
சிந்திப்போம்.
நம் ஆண்டவர் அறிவுரைப் படி செயல்படுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment