புதன்19.
பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.
(மாற்கு நற்செய்தி 8:34)
நாம் பிறந்து வளர்கின்ற அதே உலகில் தான் இயேசுவும் பிறந்து வளர்ந்தார்.
நாம் நடக்க வேண்டிய வாழ்க்கைப் பாதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
அவர் நடந்த பாதை வழியாகத் தான் நாம் நடக்க வேண்டும் என்பது அவர் விருப்பம்.
அவர் நடந்த பாதை சிலுவைப் பாதை.
சிலுவைப் பாதை தன்னலம் துறந்த பாதை.
அவர் கடவுள். அளவில்லாத வல்லமை உள்ளவர். பேரின்ப நிலையில் வாழ்பவர். துவக்கமும் முடிவும் இல்லாதவர்.
ஆனால் நம்மை மீட்பதற்காக மனிதனாய்ப் பிறந்த போது தனது இறைத் தன்மையில் உள்ள இத்தனை அம்சங்களையும் மனித சுபாவத்தில் துறந்தார்.
மனித சுபாவத்தில் சாதாரண மனித சக்தியோடு தான் வாழ்ந்தார். துன்பங்களை அனுபவிக்கும் உடலோடு வாழ்ந்தது மட்டுமல்ல, துன்பங்களை அனுபவித்தார்.
அவருக்கு மனித சுபாவத்தில் நம்மைப் போல துவக்கமும் (பிறப்பும்) முடிவும் (இறப்பும்) இருந்தது.
ஒரே வாக்கியத்தில்
தன்னலம் துறந்து, தன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு நடந்தார்.
சர்வவல்வ கடவுள் வல்லமை இல்லாத மனிதனாய்ப் பிறந்தார்.
பேரின்ப வாழ்க்கை வாழ்பவர்
துன்ப வாழ்க்கை வாழ மனிதனாய்ப் பிறந்தார்.
ஆதியும் அந்தமும் இல்லாத கடவுள் பிறப்பும் இறப்பும் உள்ள மனிதனாய்ப் பிறந்தார்.
இவையெல்லாம் நமக்காக.
"கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.
ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,
சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.
(பிலிப்பியர் 2:6-8)
"உண்டாகுக" என்ற ஒரே வார்த்தையால் உலகை உண்டாக்கிய கடவுளுக்கு,
அவர் நினைத்தால் "அழிக" என்றே ஒரே வார்த்தையால் அழிக்கவும் முடியும்.
ஆனால் அதே கடவுள் பிலாத்துவின் அரண்மனையில் அடிக்கப்பட்ட அடிகளையும், தலையில் வைத்து அடிக்கப்பட்ட முள்முடியையும், செய்யப்பட்ட அவமானங்களையும், துப்பப்பட்ட எச்சிலையும் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டார்,
யாருக்காக?
நமக்காக
நாம் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக நமது நலனைத் துறந்து சிலுவையாகிய துன்பங்களைச் சுமக்கக் கூடாதா?
நமது சிலுவையை நாம் சுமந்து கொண்டு அவரைப் பின் தொடர்ந்தால்தான் நம்மைத் தன் சீடராக ஏற்றுக் கொள்வார்.
சாதாரண தலைவலி வந்தால் கூட அதைத் தாங்கிக் கொண்டு அதை அவருக்கு ஒப்புக் கொடுக்க மனதில்லாதவர்கள் எப்படி அவரது சீடராக இருக்க முடியும்?
சிறு நோய் நொடி வர்தாலும் மருத்துவ மனைக்கு ஓடும் நாம் ஒரு முறையாவது அதை கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கக் கோவிலுக்குப் போயிருக்கிறோமா?
குணமாக்கும்படி கேட்க கோவிலுக்கு போயிருக்கிறோம்,
ஒப்புக் கொடுக்க போயிருக்கிறோமா?
ஒரு ஐந்து நிமிடமாவது வலியை ஆண்டவருக்காக தாங்கிக் கொண்டிருக்கிறோமா?
துன்பங்களை தேடிப் போக வேண்டாம், வரும் துன்பங்களை ஏற்றுக் கொள்ளலாமே.
எப்போதாவது வகுப்பில் நாம் செய்யும் தவறுக்காக ஆசிரியர் நம்மை அடிக்கும் போது ஏற்படுகின்ற வலியை நமது பாவத்திற்குப் பரிகாரமாக ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறோமா?
என்ன துன்பம் வந்தாலும் அதை தனது பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசுவிடம் கொடுப்பவன்தான் அவருடைய உண்மையான சீடன்.
துன்பமே வேண்டாம் என்று சொல்பவன் இயேசுவின் சீடனாக இருக்க முடியாது.
இயேசு சிலுவையைத் தேடி வந்தார். நாம் தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை.
வரும் சிலுவைகளை மகிழ்ச்சியுடன் சுமந்தாலே போதும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment