வியாழன்6
"ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்."
(மாற்கு நற்செய்தி 6:9)
இயேசு தனது சீடர்களை இருவர் இருவராக நற்செய்தியை அறிவிக்க அனுப்பும் போது அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில அறிவுரைகளைக் கூறுகிறார்.
பொதுவாக நற்செய்தி வசனங்களை இரு வகைகளில் தியானிக்கலாம்.
1. வசனம் கூறப பட்ட சூழ்நிலையை (Context) மையமாக வைத்து தியானிக்கலாம்.
2. நமது சூழ்நிலையை மையமாக வைத்து தியானிக்கலாம்.
முதல் வகையில் வசனத்தின் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.
இரண்டாவது வகையில் குறிப்பிட்ட வசனம் நம்மை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.
உதாரணத்துக்கு, இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தது பற்றிய வசனங்களை முதல் வகையில் தியானித்தால்
உலகையும், அதிலுள்ள அனைத்துப் பொருட்களையும் படைத்த சர்வ வல்லப கடவுள் நம் மீது கொண்ட அன்பின் காரணமாக நம்மை மீட்க தன்னை நம்மை விடவும் தாழ்த்தினார்,
எல்லாம் உரியவர் நமக்காக எதுவுமே இல்லாதவராகப் பிறந்தார்,
எல்லாம் வல்லவர் எதுவுமே இயலாதவராகப் பிறந்தார் என்று அவரது அன்பை மையமாக வைத்து தியானிப்போம்.
இது நம்மை யாரையாவது வாழ்த்திப் பேசச் சொன்னால் அவரது பெருமைகளைப் பற்றிப் பேசும் போது, அவற்றில் ஒன்றாவது நம்மிடம் இருக்கிறதா என்று சிந்தியாமல் பேசுவதைப் போல.
காமராஜரைப் புகழ்ந்து மணிக் கணக்காய் பேசுவோம். ஆனால் தியாகம் நிறைந்த தேசப்பற்றில் சிறிது கூட நம்மிடம் இல்லாதது பற்றிக் கவலைப் பட மாட்டோம்.
இயேசுவின் பிறப்பைப் பற்றி முதல் வகையில் தியானிக்கும் போது அவரது அன்பையும், ஏழ்மையையும் பற்றித் தியானிப்போம். ஆனால் நம்மிடம் ஏழ்மை இல்லையே என்பது பற்றி நினைக்கவே மாட்டோம்.
நினைத்தால் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த மன்னருக்கு அவரது போதனைக்கு எதிராக இலட்சங்கள் செலவழித்து குடில் கட்டுவோமா?
மார்கழிப் பனியில் தீவனத் தொட்டியில் நடுங்கிக் கொண்டு படுத்திருப்பவரைப் பார்க்க வர விலை உயர்ந்த Christmas dress அணிந்து வருவோமா?
இது அவரை கேலி செய்வதுபோல் இருக்காதா?
இயேசுவைப் பின்பற்றுபவர்களாக இருந்தால் நாம் கிறிஸ்துமஸ் அன்று மட்டன் பிரியாணி உணவு அருந்தி விழா கொண்டாடுவோமா?
இது விஸ்கிப் பாட்டிலை வாயில் வைத்துக் கொண்டு,
"மதுவை ஒழிப்போம்" என்று கோசம் போடுவது போலிருக்காது?
எளிய உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்டால் தான் அது கிறிஸ்மஸ் விழா உணவு.
இரண்டாம் வகையில் இயேசுவின் பிறப்பை பற்றிய வசனங்களைத் தியானித்தால் உலகப் பொருட்கள் மீது பற்று இல்லாத ஏழ்மை நிறைந்த வாழ்வை வாழ்வோம்.
இயேசு நம்மை நேசிப்பது போல நாமும் மற்றவர்களை நேசிப்போம்.
இயேசு தனது படைப்புப் நம்மோடு பகிர்ந்து கொண்டிருப்பது போல நம்முடைய பொருட்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வோம்.
இறை வசனங்கள் நம்மை மாற்றும்.
இறை வசனங்களை இரு வகைகளிலும் தியானிக்க வேண்டும்.
நமது மாற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இப்போது இன்றைய வசனத்தை எடுத்துக் கொள்வோம்.
"ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்"
நற்செய்தி அறிவிப்பவர்கள் தங்களுக்கு அத்தியாவசியமாக தேவையானவற்றை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
நடந்து செல்லும் பாதை நல்ல பாதையாகவும் இருக்கலாம். கற்களும், முட்களும் நிறைந்த பாதையாகவும் இருக்கலாம்.
ஆகவே மிதியடி காலுக்கு அத்தியாவசியமானது.
அந்தக் காலத்தில் நாம் இப்போது பயன்படுத்தும் நவீன வாகனங்கள் கிடையாது.
இப்போது நற்செய்தி அறிவிக்கச் செல்வோர் நடந்து தான் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பேருந்தில் போகலாம், பைக்கில் போகலாம் காரில் போகலாம். ஆனால் லட்சாதிபதிகள் பயன்படுத்தக்கூடிய விலை உயர்ந்த நவீன வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது.
கோடி ரூபாய் வருமான வாகனங்களில் சென்று,
"ஏழைகள் பேர் பெற்றோர்." என்று மக்களுக்கு அறிவித்தால்
மக்கள் அறிவிப்பவர்களை எதிர்மறையாக விமர்சிப்பார்கள்.
உடை அத்தியாவசியம். நற்செய்தியைக் கேட்க வருபவர்கள் கந்தலுடை அணிந்து வந்திருந்து,
அறிவிப்பவர்கள் Tip top உடையணிந்து வந்தால்,
வந்தவர்கள் நற்செய்தியைக் கேட்க மாட்டார்கள், அறிவுப்பவர்களுடைய உடையையே பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
நற்செய்தியை அறிவிப்பவர்கள் மட்டுமல்ல வாசித்து தியானிப்பவர்களும் ஆடம்பரமற்ற சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும்.
ஆன்மீக வாழ்க்கைக்கு தேவைப்படுவது அருள்,
பொருள் அல்ல.
"ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது."
(மத்தேயு நற்செய்தி 5:3)
"அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்"
நாம் நமது வீட்டு பீரோவில் அடுக்கி வைத்திருக்கும் உடைகளின் எண்ணிக்கையை இயேசுவின் வார்த்தைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால்
நாம் எந்த அளவுக்கு இயேசுவின் வார்த்தைகளைப் பின்பற்றுகிறோம் என்பது நமக்கு புரியும்.
தினமும் நற்செய்தியை வாசிப்போம். நற்செய்தி நம்மை மாற்ற அதற்கு நாம் அனுமதி வழங்க வேண்டும்.
சிலர் நற்செய்தியை வாசிப்பதையே ஆடம்பரமாகக் கொண்டுள்ளார்கள்.
ஆடம்பரம் ஆபத்தானது.
எளிமையே மீட்பிற்கான வழி.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment