திங்கள் 17.
இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.
(லூக்கா நற்செய்தி 6:21)
கடவுள் நம்மை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகப் படைத்தாரா, அழுது கொண்டிருப்பதற்காகப் படைத்தாரா?
நமது உலக வாழ்வின் நோக்கம் வாழ்வின் இறுதியில் விண்ணகத்திற்குள் நுழைய நம்மையே தயாரிப்பதுதான்.
விண்ணக வாழ்க்கை மகிழ்ச்சியும், பேரின்பமும் நிறைந்தது.
விண்ணக பேரின்ப வாழ்வுக்காக படைக்கப் பட்டிருக்கும் நம்மைப் பார்த்து ஏன் இயேசு,
"அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்" என்கிறார்?
எப்போதெல்லாம் அழுகை வரும்?
எதற்காகவாவது வருத்தப் படும்போது அழுகை வரும்.
துன்பப் படும் போது அழுகை வரும்.
எதையாவது இழக்கும் போது அழுகை வரும்.
உலகில் அநீதியைப் பார்க்கும் போது அழுகை வரும்.
பரிசுத்தமானவர்களால் மட்டும் விண்ணகத்துக்குள் நுழைய முடியும்.
பாவிகளால்?
பாவ நிலையில் விண்ணகத்துக்குள் நுழைய முடியாது.
அவர்கள் மரிக்கு முன் பாவ மன்னிப்பு பெற்றால் விண்ணகத்துக்குள் நுழைய முடியும்.
பாவ மன்னிப்பு பெற வேண்டுமென்றால் பாவங்களுக்காக மனத்தாபப்
பட வேண்டும்.
அதாவது, வருந்த வேண்டும்.
பாவங்களுக்காக வருந்தி அழுதால் பாவ மன்னிப்பு கிடைக்கும்.
பாவ மன்னிப்பு கிடைத்தால் விண்ணகம் செல்லலாம்.
அதனால் செய்த பாவங்களுக்காக அழுபவர்கள் பேறு பெற்றவர்கள்.
ஏனெனில் அவர்கள் விண்ணகத்தில் சிரித்து, மகிழ்ந்து வாழ்வார்கள்.
**********
துன்பப்படும் போதும் அழுகை வரும். ஆனால் அந்த அழுகையினால் ஆன்மீக ரீதியாக என்ன இலாபம்?
நமக்கு மீட்பு எப்படிக் கிடைத்தது?
இயேசு நமக்காகப் பாடுகள் பட்டு,
அதாவது, துன்பப்பட்டு,
மரித்ததனால்.
இயேசு அனுபவித்த துன்பங்கள் தான் நமக்கு மீட்பைப் பெற்றுத் தந்தன.
இயேசு தனது துன்பங்களை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக விண்ணகத் தந்தைக்கு ஒப்புக் கொடுத்தார்.
நாமும் நமது துன்பங்களையும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக விண்ணகத் தந்தைக்கு ஒப்புக் கொடுத்தால்
- நாம் பட்ட துன்பங்கள் விண்ணகத்தில் பேரின்பமாக மாறும்.
நமது துன்பங்கள் நமக்கு விண்ணக வாழ்வைப் பெற்றுத் தரும் ஆசீர்வாதங்கள்.
**********
எதையாவது இழக்கும் போது அழுகை வரும்.
ஒன்றைப் பெற வேண்டுமானால் ஒன்றை இழக்க வேண்டும்.
முழுத் தேங்காயை இழக்காமல் சட்ணி வைக்க முடியாது.
விதை தன்னை இழந்தால் தான் மரமாக முடியும்.
கையிலுள்ள காசை இழக்காமல் கடையில் பொருள் வாங்க முடியாது.
இவ்வுலகப் பொருட்கள் மீதுள்ள பற்றை இழக்காமல் விண்ணகத்துக்குள் நுழைய முடியாது.
அருவியில் குளிப்பதற்காகக் குற்றாலத்துக்குப் போயிருக்கிறோம்.
அருவிக் குளிப்பு எவ்வளவு ஆனந்தமாக இருந்தாலும் அருவியை விட்டு வெளியேறி வீட்டுக்கு வரவேண்டும்.
வீடுதான் நிரந்தர உறைவிடம், குற்றால அருவி அல்ல.
அருவியை இழக்காவிட்டால் வீட்டை இழந்து விட வேண்டியது தான்.
உலக வாழ்வைப் பொறுத்த மட்டில் என்றாவது ஒரு நாள் அதை இழந்து தான் ஆக வேண்டும்.
வாழும் போதே பற்றின்மையைப் பயன் படுத்தி, உலக இன்பங்களை இழந்து வாழ்ந்தால் விண்ணகப் பேரின்பம் உறுதி.
*****
உலகில் அநீதியைப் பார்க்கும் போது அழுகை வரும்.
நீதி x அநீதி
உலகில் நாட்டின் சட்டங்களை மீறுபவர்களை நீதி மன்றங்கள் விசாரிக்கின்றன.
அப்படியானால் சட்டப்படி வாழ்வதுதான் நீதி.
ஆன்மீகத்தில் இறைவன் விருப்பப்படி வாழ்வதுதான் நீதி.
இறைவனுடைய விருப்பம் அவருடைய கட்டளைகளில் அடங்கியிருக்கிறது.
இறைவன் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்பவன் நீதிமான்.
நாம் நீதிமான்களாக இருந்தால்,
அதாவது,
இறைவனது கட்டளைகளை ஒழுங்காகக் கடைபிடித்து வாழ்பவர்களாக இருந்தால்,
கட்டளைகளை மீறி வாழும் மற்றவர்களைப் பார்க்கும் போது அழுகை வரும்.
ஏன்?
ஏனெனில் அவர்கள் தங்கள் நடத்தையால் நமது அன்பு தந்தையை மனம் நோகச் செய்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களை நாம் பார்த்தால்
எல்லோரையும் படைத்த,
எல்லோரையும் அளவு கடந்து அன்பு செய்கிற
விண்ணகத் தந்தையை மனம் நோகச் செய்யக் கூடாது என்று
அன்புடன் எடுத்துரைக்க வேண்டும்.
அவர்களை நமது தந்தையிடம் அழைத்து வர வேண்டும்,
அதாவது,
அவர்களை மனம் திருப்ப வேண்டும்.
இவ்வாறு செய்யும் போது நமது அழுகை சந்தோசமாக மாறும்.
அவர்களும், நாமும் விண்ணகத்தில் தந்தையின் மகிழ்ச்சியில் பங்கு பெறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment