"பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்."
(லூக்கா நற்செய்தி 6:37)
நீதி மன்றத்தில் நீதிபதி எப்படி ஒருவர் குற்றவாளியா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறார்?
சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் .
சாட்சிகளின் வாக்குமூலம் தவறாக இருந்தால் தீர்ப்பும் தவறாகிவிடும்.
நாம் நீதிபதிகள் அல்ல. யாரையும் பற்றி விசாரிக்கவோ, தீர்ப்பளிக்கவோ நமக்கு அதிகாரம் இல்லை.
ஆனால் அநேக சமயங்களில் நமக்கு இல்லாத அதிகாரத்தை நாமே கையில எடுத்துக் கொள்கிறோம்.
சாட்சிகள் செய்ய வேண்டிய வேலையையும் நாமே செய்து கொள்கிறோம்.
நாமே தீர்ப்பையும் அளித்துக்
கொள்கிறோம்.
நம்முடைய அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டு செயல்படுவது சட்டப்படி குற்றம்.
நீதிமன்றத்தில் சாட்சி கண்ணால் பார்த்ததன் அடிப்படையில் தான் சாட்சி சொல்ல வேண்டும்.
நாம் மற்றவர்ளுடைய வெளியரங்க நடவடிக்கைகளை மட்டும்தான் பார்க்க முடியும்.
உள்ளரங்கத்தை நம்மால் பார்க்க முடியாது.
ஆனால் நாமே யூகித்துக் கொள்கிறோம்,
நமது யூகம் சரி என்று கூற முடியாது.
ஒருவன் மதுக்கடை இருக்கும் தெரு வழியே போனாலே அவனைக் குடிகாரன் என்று தீர்மானித்து விடுகிறோம்.
ஆனால் யூகிக்கவோ, தீர்ப்பிடவோ நமக்கு அதிகாரம் இல்லை.
நாமே கடைக்கும் தெருவுக்கும் முடிச்சி போட்டு வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் யூகிக்கிறோம்.
ஒருவன் குற்றவாளியா, நிரபராதியா என்று தீர்மானிக்க வேண்டியது கடவுள் மட்டுமே.
ஒருவன் மரணிக்கும் போது அவனது ஆன்மா என்ன நிலையில் இருந்தது அவருக்கு மட்டுமே தெரியும்.
ஒருவரது நற்குணங்களை யூகிக்கலாம், அதைப் பற்றி பேசலாம், தப்பில்லை.
எதிர்மறைக் குணங்களை யூகிக்கவோ, அவற்றைப் பற்றி மற்றவர்களிடம் பேசவோ நமக்கு உரிமை இல்லை.
ஒருவரின் பெயரைக் கெடுப்பது எளிது, ஆனால் அதைச் சரி செய்வது மிகவும் கடினம்.
தண்ணீரைக் கொட்டுவது எளிது, கொட்டியதை அள்ளுவது முடியாத காரியம்.
பேப்பரைக் கிழித்துப் போடுவது எனது , ஒட்டுவது கடினம்.
ஒருவரது பெயரைக் கெடுத்தால் அதன் விளைவுகளுக்கு நாம்தான் பொறுப்பு.
இறுதி நாளில் இயேசுவின் தீர்ப்பு நமக்குச் சாததமாக இருக்க வேண்டுமென்றால்,
வாழும்போது நாம் யாரையும் பாதகமாகத் தீர்ப்பிடக் கூடாது.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment