Sunday, February 2, 2025

செவ்வாய்4 "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்" என்று கூறினார். (மாற்கு நற்செய்தி 5:36)

செவ்வாய்4

 "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்" என்று கூறினார். 
(மாற்கு நற்செய்தி 5:36)

யாகீர் என்ற தொழுகைக் தலைவனின் மகள் சாகும் தருவாயில் இருக்கிறாள்.

அவளைக் குணமாக்கப் போய்க் கொண்டிருந்த போது அவள் இறந்து விட்டாள் என்ற செய்தி வருகிறது.

இயேசு யாகீரை நோக்கி
  "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்" என்று கூறிவிட்டு

இறந்த பெண்ணினுடைய வீட்டுக்குச் செல்கிறார்.

அங்கு அழுது கொண்டிருப்பவர்களிடம்,

"சிறுமி இறக்கவில்லை. உறங்குகிறாள்"  என்று கூறிவிட்டு வீட்டிற்குள் சென்று இறந்தவளுக்கு உயிர் கொடுக்கிறார்.

சிறுமியை உயிரோடு எழுப்பி விட்டு பெற்றோரிடம்

"இதை யாரிடமும் சொல்ல வேண்டாம்" என்று கூறுகிறார்.

இந்தப் புதுமையிலிருந்து நாம் இரண்டு பாடங்களைக் கற்க வேண்டியிருக்கிறது.

1. எந்த சூழ்நிலையிலும் மாற முடியாத விசுவாசம்.

பிரச்சினைகளே ஏற்படாமல் இருக்கும் போது விசுவசிப்பது எளிது.

வாழ்க்கை வளம் பெற ஒரு நல்ல வேலைக்கு ஆசைப் படுவது இயல்பு.

விசுவாசத்தோடு அதற்காக இறைவனிடம் வேண்டுவதும் இயல்பு.

வேலைக்காக நேர்காணலுக்குச் செல்லும் போது தேர்ந்தெடுக்கப் படாவிட்டால் விசுவாசம் ஆட்டம் காண்பது நமது விழுந்த இயல்புக்கு (Fallen nature) இயல்பு.

ஆனால் பாவத்தில் விழுந்த நம்மைத் தூக்கி விடத்தான் இயேசு பாடுகள் பட்டு மரித்தார்.

அதன் பின்பும் நமது விசுவாசம் ஆட்டம் கண்டால் நமது இயல்புக்கு நாம்தான் பொறுப்பு.

எந்த சூழ்நிலையிலும் நமது விசுவாசம் உறுதியாக இருக்க வேண்டும்.

எந்த மகன் வழியாக ஒரு பெரிய சந்ததியைத் தருவேன் என்று இறைவன் வாக்களித்தாரோ,

அதே மகனைத் தனக்குப் பலியிடும்படி அதே இறைவன் சொல்லும் போது மறுவார்த்தை சொல்லாமல் கீழ்ப்படிந்த அபிரகாமின் விசுவாசமே அசைக்க முடியாத விசுவாசம்.

சுகமில்லாத மகளைக் குணமாக்கும் படி யாகீர் இயேசுவைக் கூட்டிக் கொண்டு போகும்போது 

அந்த மகள் இறந்த செய்தியைக் கேட்ட பின்னும்

இயேசு விசுவாசத்தில் உறுதியாக இரு என்கிறார்.

யாகீர் விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்.

மகள் உயிர் பெற்றதை விட யாகீர்
விசுவசித்தது பெரிய புதுமை.

இறந்தவளை உயிரோடு காண்போம் என்று விசுவசிப்பது உண்மையிலேயே அசாத்தியமான சாதனை. 

அதை யாகீர் செய்தார்.

நாம் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

விசுவாசம் இறைவனின் நன்கொடை.

நன்கொடையை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டியவர்கள் தான் நாம்.

ஒவ்வொரு புதுமைக்கு முன்னும் முதலில் இயேசு சம்பந்தப்பட்ட ஆளுக்கு விசுவாசத்தை நன்கொடையாக அளிக்கிறார்.

அந்த ஆள் அதை முழு மனதோடு ஏற்றுக் கொண்டால் அவருடைய பாவங்களுக்கு மனஸ்தாபத்தை நன்கொடையாக அளிக்கிறார்.

அதையும் அவர் ஏற்றுக் கொண்டால் பாவ மன்னிப்பை அளிக்கிறார்.

அதன் பின் அவரது நோயைக் குணமாக்கிறார்.

தொடர்ந்து அவருக்கு நற்செய்தியையும் அளிக்கிறார்.

பொதுவாழ்வில் மூன்று ஆண்டுகளும் இயேசு சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்ததோடு, அவர்
 செய்த நன்மைகள் இவைதான்.

நமது ஆன்மீக வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் நம்மை வழி நடத்துபவர் அவரே.

அவர் நடத்தும் வழியில் செல்ல வேண்டியது தான் நமது வேலை.

விசுவாசம் ---> மனஸ்தாபம் ---> பாவமன்னிப்பு ---> ஆன்மீக சுகம் ---> மீட்பு .

இதுதான் நமது விசுவாச வாழ்வு.

இயேசுவின் புதுமைகளை தியானிக்கும் போதெல்லாம் இந்த உண்மைகள் நமது மனதில் இருக்க வேண்டும்.

உலக மருத்துவர் நமது உடல் நோய்க்கு மட்டுமே மருந்து தருகிறார்.

ஆன்மீக மருத்துவராகிய இயேசு ஆன்மீக நோயைக் குணமாக்கிய பின்பே உடல் நோயை குணமாக்குகிறார்.

2. இந்த புதுமையைத் தியானிக்கும் போது மனதில் மற்றொரு உண்மையும் புலன் ஆகிறது.

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு 
கெரசேனர் பகுதியில்
தீய ஆவிகளிடமிருந்து குணம் பெற்ற இளைஞனிடம்,

 "உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்" என்றார். 

ஆனால் இன்றைய வாசகத்தில், 

சிறுமியை உயிரோடு எழுப்பிய பின் அவளுடைய பெற்றோரிடம்

"இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது" என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.

இவ்வளவுக்கும் அவர்  சிறுமிக்கு உயிர் கொடுத்தது அந்த வீட்டில் குழுமியிருந்த அத்தனை பேருக்கும் தெரியும்.

சிறுமியை மற்றவர்கள் 
பார்ப்பார்கள்.

அவர்கள் சிறுமியின் பெற்றோரிடம் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிப்பார்கள்.

இப்போது நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை,

இயேசு கடவுள். அவர் நமது அறிவுக்கு அப்பாற்பட்டவர்.

நமது அற்ப அறிவால் அளவில்லாத கடவுளின் செய்கைகளைப் புரிந்து கொள்ள முடியாது.

அவர் சொல்வதை, நமக்குப் புரிகிறதோ புரியவில்லையோ, அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியது அவரால் படைக்கப்பட்ட நமது கடமை.

இதற்கு அன்னை மரியாளும், புனித சூசையப்பரும் நமக்கு முன் உதாரணம்.

''கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்று கபிரியேல் தூதர் சொன்னவுடன்,

அதற்கு விளக்கம் கேட்காமல்


 மரியாள், "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று சொல்லி விட்டார்.

மரியாளை மறைவாக விலக்கிவிட திட்டமிட்டுக் கொண்டிருந்த சூசையப்பர்,


 "யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்."

என்று ஆண்டவரின் தூதர் சொன்னவுடன் மறு வார்த்தை பேசாமல் ஏற்றுக்கொண்டார்.

நாமும் பைபிளில் உள்ள இறை வாக்குகளை நமக்கு புரிந்ததனால் அல்ல, இறைவன் வார்த்தைகள் என்பதால் மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நமது அசைக்க முடியாத நம்பிக்கை தான் நமக்கு மீட்பை பெற்று தரும்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment