ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?
(மாற்கு நற்செய்தி 8:36)
"For how does it benefit a man, if he gains the whole world, and yet causes harm to his soul?"(Mark 8:36)
புனித சவேரியாரை வேத போதகராக மாற்றிய இறைவாக்கு:
"மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் அவனுக்கு வரும் பயன் என்ன?"
என்ற இறை வசனம்தான் பொது மொழி பெயர்ப்பில்,
"ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?''
"ஆன்மாவை" "வாழ்வையே" யாக மாறியிருக்கிறது.
"ஆன்மா" என்ற வார்த்தைக்கு ஒரு பொருள்தான் இருக்கிறது. இறைவனால் படைக்கப் பட்ட நமது ஆன்மா.
பாவத்திலிருந்து ஆன்மாவை மீட்கவே இறை மகன் மனுமகனாகப் பிறந்தார்.
மீட்கப் பட வேண்டியது நமது ஆன்மா.
ஆன்மாவை இழந்தால் = நாம் மீட்புப் பெறாவிட்டால்.
நாம் மீட்புப் பெறாவிட்டால், இந்த உலகத்தையே வென்று அதை நமதாக்கிக் கொண்டாலும் அதில் எந்தப் பயனும் இல்லை.
***
ஆனால் வாழ்வு என்றால் இவ்வுலக வாழ்வையும் குறிக்கலாம்,
மறுவுலக நிலை வாழ்வையும் குறிக்கலாம்.
மொழி பெயர்த்தவர்கள்
"நிலை வாழ்வையே இழப்பாரெனில்"
என்றாவது மொழி பெயர்த்திருக்கலாம்.
உலகையெல்லாம் வெல்வதை விட தாங்கள் வாழ்வதே மேல் என்று இவ்வுலக வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்
இந்த வசனத்தைத் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்வர்.
இவ்வுலக வாழ்வை விட நிலை வாழ்வே மேல் என நம்புபவர்களுக்கு
"மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் அவனுக்கு வரும் பயன் என்ன?"
என்ற பழைய மொழி பெயர்ப்புதான் ஆதாரம்.
"I will put enmities between you and the woman, between your offspring and her offspring. She will crush your head" (Genesis 3:15)
"உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்; அவள் உன் தலையை நசுக்குவாள்."
(ஆதியாகமம். 3:15 )
இது பழைய மொழிபெயர்ப்பு
உனக்கும் = சாத்தானுக்கும்.
பெண் = மரியாள்.
தலையை நசுக்குவாள் = உன்னால் அவளைத் தீண்ட முடியாது, அதாவது, பாவம் அவளை அணுகாது.
அன்னை மரியாள் சென்மப் பாவ மாசின்றி உற்பவித்தாள் என்பது இந்த இறை வசனம் ஆதாரம்.
ஆனாது பொது மொழிபெயர்ப்பில்,
உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்" என்றார்.
(தொடக்கநூல் 3:15)
இதில் அவள் உன் தலையை நசுக்குவாள் என்ற வார்த்தைகள் இல்லை.
"நானே அமலோற்பவம்" என்ற அன்னை மரியாளின் வார்த்தைகளை நம்பாத பிரிவினை சபையாருக்கு பொது மொழிபெயர்ப்பு ஆதாரம்.
இப்போது சொல்லுங்கள்
பொது மொழி பெயர்ப்பு யாரைத் திருப்திப்படுத்த?
இது மட்டுமல்ல,
கபிரியேல் தூதரின்
"அருள் நிறைந்தவரே வாழ்க"
என்ற வாழ்த்துரை
"அருள் மிகப் பெற்றவரே வாழ்க"
என்று மாற்றப் பட்டுள்ளது.
இதுவும் மரியாளின் மாசின்மையை நம்பாதவர்களுக்குச் சாதகமான மொழி பெயர்ப்பு.
கத்தோலிக்கர்களின் மிக முக்கியமான விசுவாச உண்மைக்கு பொது மொழி பெயர்ப்பு உலை வைத்திருக்கிறது.
புதுமை விரும்பிகளுக்கு ஒரு வேண்டுகோள்,
மாற்றங்கள் நமது விசுவாசத்தை பலப் படுத்துபவையாக இருக்க வேண்டும். விசுவாசம் குறைவதற்குக் காரணமாக இருக்கக் கூடாது.
நாவில் வாங்கிய நற்கருணை நாதரை கையில் வாங்குவதால் நற்கருணை பக்தி வளர்ந்து விடாது,
முழந்தாள் படியிட்டு ஆராதித்த நற்கருளை நாதரை தலை குனிந்து ஆராதிப்பதால் நற்கருணை பக்தி வளர்ந்து விடாது.
பீடத்தின் மையத்தில் இருந்த நற்கருணை நாதரை ஒரு பக்கத்துக்கு மாற்றுவதால் நற்கருணை பக்தி வளர்ந்து விடாது.
நமது ஆன்மீக வாழ்வின் மையம் திவ்ய நற்கருணைதான் என்பதில்
எந்த மாற்றமும் இல்லை.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment