சனி8 .
அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.
(மாற்கு.6:34)
இயேசு தனது சீடர்களிடம்,
'' நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்" என்றார்."
"அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.
அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர்.
(மாற்கு நற்செய்தி 6:32,33)
இந்த வசனங்களை வாசிக்கும் போது மக்கள் அவர்களை ஓய்வு எடுக்க விட்டதாகத் தெரியவில்லை.
அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்ட மக்கள் அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர்.
அவர்கள் ஓய்வு எடுக்கவிருந்த இடத்துக்கு அவர்கள் வருமுன்பே மக்கள் வந்து விட்டார்கள்.
அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் இயேசு அவர்கள் மீது பரிவு கொண்டார்.
அவர்களுக்குப் போதித்தார்.
சீடர்கள் இயேசுவிடம் வந்து ,
"நேரமாகி விட்டபடியால் அவர்களைச் சாப்பிட அனுப்பி விடும்" என்று கூறியதிலிருந்து சீடர்களும் அங்கே இருந்தார்கள் என்று தெரிகிறது.
இயேசு முக்காலமும் அறிந்தவர். அவரது கண்ணோக்கிலிருந்து இந்த வசனங்களைத் தியானிப்போம்.
கடலைக் கடந்து போகுமுன் மக்கள் அங்கு வந்து மக்கள் தனக்காகக் காத்திருப்பார்கள் என்று இயேசுவுக்கு நித்திய காலமாகவே தெரிந்தும்.
தெரிந்தும் ஏன் இயேசு சீடர்களை ஓய்வு எடுக்கப் போகச் சொன்னார்.
நமக்குப் பாடம் கற்பிக்க.
என்ன பாடம்?
ஓய்வு எடுக்க வேண்டிய அத்தியாவசியமான நேரத்திலும் ஒரு ஆன்மாவின் மீட்புக்கு அவசியம் ஏற்பட்டால்,
ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, நாம் செயலில் இறங்க வேண்டும்.
ஒரு குருவானவர் காலையிலிருந்து இரவு பதினொரு மணி வரை ஓய்வில்லாமல் உழைத்து விட்டு, மிகவும் களைப்பானவராய்,
இராச் செபத்தை முடித்து விட்டு, 11.30 க்கு உடை மாற்றிக் கொண்டு, படுக்கையில் சாய்ந்து கொண்டிருந்த போது phone அலரியது.
phone ஐ எடுத்து காதில் வைத்தார்.
அவஸ்தைப் பூசுதலுக்கு அழைப்பு.
அந்த ஊருக்கு பைக்கில் போக கால் மணி நேரம் ஆகும.
படுக்கையில் படுக்காமல் எழுந்து, திரும்பவும் உடை மாற்றிக் கொண்டு,
கோவிலுக்குச் சென்று நற்கருணை நாதரை அழைத்துக் கொண்டு,
ஊருக்கு விரைந்து,
நோயாளிக்கு பாவ மன்னிப்பு அளித்து விட்டு,
இயேசுவையும் கொடுத்து விட்டு, அவஸ்தைப்
பூசுதலும் கொடுத்து விட்டு, குடும்பத்தினருக்கு ஆன்மீக ஆலோசனைகள் கொடுத்து விட்டு,
பைக்கில் ஏறி,
அவரது அறைக்கு வந்து
படுக்கும் போது மணி இரண்டு.
காலையில் 6 மணி பூசைக்கு 5 மணிக்கு எழ வேண்டும்.
குருவானவர் தனது உடல் நலத்தை விட மக்களின் ஆன்மீக நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கு இயேசுவின் முன்னுதாரணமே காரணம்.
திருத்தந்தை பிரான்சிஸ்
ஆயராக இருந்த போது நிகழ்ந்த நிகழ்வு ஒன்றைப் பற்றி அவரே எழுதிய குறிப்பு ஒன்று அவர் பாப்பரசர் ஆன போது வெளியாகியிருந்தது.
ஒரு முறை குருக்களுடைய கூட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டார்.
கோவிலுக்கு வந்து நற்கருணை நாதரைச் சந்தித்து விட்டு கோவிலுக்கு வெளியே வந்தபோது, ஒரு ஆள் வந்து,
"ஆண்டவரே, பாவசங்கீர்த்தனம."
"நான் அவசரமாக குருக்களின் கூட்டத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.
கோவிலுக்குள் போங்கள்.
இப்போது ஒரு சுவாமியார் வருவார். அவரிடம் பாவ சங்கீர்த்தனம் செய்யுங்கள்" என்று கூறிவிட்டுப் புறப்படும்போது அவரது உள்ளத்தில் ஒரு குறல் ஒலித்தது.
"மனுமகன் நினையாத நேரத்தில் வருவார். வரும்போது நமது ஆன்மா தயாராக இருக்க வேண்டும்"
உடனே பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டுமென்று கேட்டவருடைய ஆன்மா நினைவுக்கு வந்தது.
உடனே திரும்பி கோவிலுக்குள் வந்து, அவரிடம் பாவ சங்கீர்த்தனம் கேட்டு,
பாவமன்னிப்பு கொடுத்தார்.
"இப்போது ஒரு சுவாமியார் வருவார். அவரிடம் பாவ சங்கீர்த்தனம் செய்யுங்கள்"
என்று அவர் சொன்னது அவரது மனதை உறுத்தியது.
உடனே அவர் அதற்காக மனஸ்தாபப் பட்டு,
கொஞ்ச நேரத்தில் வந்த குருவானவரிடம் பாவ சங்கீர்த்தனம் செய்து விட்டு,
குருக்கள் கூட்டத்துக்குப் போனார்.
நமது ஆன்மீக வழிகாட்டிகள்
(Spiritual Directors)
தங்கள் பொறுப்பில் உள்ள மக்களின் ஆன்மாக்களை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.
இதற்கெல்லாம் இயேசுவின் வழிகாட்டுதலும், முன்னுதாரணமும், அருளுதவியும் தான் காரணம்.
இயேசு முன்னுதாரணமாக நடந்து கொண்டது அவரது சீடர்களின் வாரிசுகளுக்காக மட்டுமா?
நாமும் பொதுக் குருத்துவத்தைச் சேர்ந்தவர்கள் தானே.
நமக்கும் நமது உடலை விட ஆன்மாவே முக்கியமானது.
உடலுக்கான ஓய்வை விட ஆன்மீக நலனே முக்கியமானது.
இயேசு நம்மை அழைக்க எந்த நேரத்திலும் வருவார்.
இரவில் ஓய்வு எடுப்பதற்காக நல்ல உடல் நலனோடு படுத்தாலும், இரவில் எந்த வினாடியும் மனு மகன் வரலாம்.
ஆகவே நாம் படுக்கு முன்பே நமது ஆன்மாவை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
பரிசுத்தமான ஆன்ம நிலையில் தான் படுக்க வேண்டும்.
அப்போதுதான் நள்ளிரவில் ஆண்டவர் வந்தாலும்,
"இதோ வருகிறேன், ஆண்டவரே, " என்று கூறிக் கொண்டே இயேசுவோடு விண்ணத்துக்குள் நுழையலாம்.
நாம் எவ்வளவு களைப்பாக இருந்தாலும், நமது ஆன்மாவை விண்ணக வாழ்வுக்கு தயார் நிலையில் வைத்து விட்டு தான் ஓய்வு எடுக்க வேண்டும்.
நமது ஓய்வை விட ஆன்மாவின் நலனே முக்கியம்.
சிலர் ஞாயிற்றுக்கிழமை பூசைக்குப் பிந்தி வருவார்கள்.
காரணம் கேட்டால்,
"வாரத்தில் ஆறு நாட்கள் கட்டப் பட்டு உழைக்கிறோம். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து, இரவில் வெகு நேரம் கழித்துத் தூங்க வேண்டியிருக்கிறது.
ஞாயிற்றுக் கிழமை தான் நிம்மதியாக தூங்க முடிகிறது.
ஆகவே காலையில் எழ நேரமாகிறது." என்று கூறுவார்கள்.
காலையில் வேலைக்குப் பிந்திப் போனால் நிர்வாகி விளக்கம் எழுதித் தரச் சொல்லுவார்.
பூசைக்குப் பிந்தி வந்தால் யாரும் விளக்கம் கேட்க மாட்டார்கள்.
இது அவர்களுடைய எண்ணம்.
ஆனால் இறுதி நாளில் கடவுள் விளக்கம் கேட்பார்.
நமது உலகக் காரணம் அப்போது எடுபடாது.
உடல் நலத்தை விட ஆன்மீக நலமே அதிக முக்கியம்.
உடல் நலம் பாதிக்கப் பட்டால் மரணத்தோடு பாதிப்பு சரியாகி விடும்.
ஆன்மீக நலம் பாதிக்கப் பட்டால், அது வாழ் நாளில் சரி செய்யப்
படாவிட்டால் பாதிப்பு மரணத்துக்குப் பின்னும் தொடரும்.
ஆன்மீக வாழ்வுக்கு ஓய்வு கிடையாது என்பதை நினைவில் கொள்வோம்.
பைபிள் வசனங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்டிருந்தாலும் நமது இன்றைய வாழ்வுக்கும் அவைதான் வழிகாட்டி.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment