"அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்றார்.
(மாற்கு நற்செய்தி 9:35)
இயேசுவின் சீடர்களுக்குள் ஒரு போட்டி,
"நம்முள் பெரியவர் யார்?"
இதை அவர்கள் இயேசு விடம் கேட்க வில்லை.
அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பேசியது இயேசுவின் காதுகளில் விழுந்தது.
அவர்களுடைய கேள்விக்கு அவர்கள் கேட்காமலேயே இயேசு பதில் சொன்னார்.
உலகினர் யாரைப் பெரியவர் என்பார்கள்?
உயர்ந்த பதவியில் உளளவர்களை .
அந்த வகையில் இந்தியாவில் மிகப் பெரியவர் யார்?
பிரதம மந்திரி.
தமிழ்நாட்டில் மிகப் பெரியவர் யார்?
முதலமைச்சர்.
குடும்பத்தில்?
தந்தை.
நாம் யாரிடம் அதிகம் சொத்து இருக்கிறதோ, யாருக்கு அதிகம் வருமானம் வருகிறதோ அவரைப் பெரியவர் என்போம்.
இது உலகியல் ரீதியாக, நிரந்தரமற்ற வாழ்க்கை ரீதியாக.
ஆனால் இயேசுவின் பார்வை உலகியலுக்கு நேர் எதிர்மாறானது.
தாழ்ச்சியைப் புண்ணியங்களின் அரசி என்போம்.
யார் தங்களைப் பற்றி தாழ்வாகக் கருதுகிறார்களோ அவர்கள் தான் பெரியவர்கள்.
தாழ்ச்சியை இயேசுவே வாழ்ந்து காண்பித்தார்.
எல்லாம்வல்ல கடவுளாகிய அவர் உலகில் மனிதனாகப் பிறந்த போது ஒரு ஏழைப் பெண்மணியைத் தனது தாயாகத் தேர்வு செய்தார்.
அந்தத் தாய் தன்னை ஆண்டவரின் அடிமையாகக் கருதினாள்.
உலகத்துக் கே அதிபதியான அவர் ஒரு மாட்டுத் தொழுவில் பிறந்தார்.
அவரது பிறப்பைப் பற்றி ஏழை இடையர்களுக்கே முதலில் அறிவித்தார்.
யூதர்களின் அரசராகிய அவர் குற்றவாளிகளின் தண்டனைக் கருவியாகிய சிலுவையைத் தனது சிம்மாசனமாகத் தேர்ந்தெடுத்தார்.
இரும்பாலான மூன்று ஆணிகள் தான் அவருடைய அணிகலன்கள்.
அவரை அடக்கம் செய்த கல்லறை கூட அவருடையது அல்ல.
ஆக கருவரை முதல் கல்லறை வரை அவர் தாழ்ச்சியில் தான் வாழ்ந்தார்.
அவர் தான் உலகிலேயே பெரியவர்.
"ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராக இருக்கட்டும்." என்ற அவருடைய போதனையை சாதனையாக்கினார்.
லௌகீகமும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று எதிர் மாறானவை.
லௌகீம் நிலையற்ற உலகையும், அழியும் உடலையும் சார்ந்தது.
ஆன்மீகம் ஆன்மாவையும், நிலை வாழ்வையும் சார்ந்தது.
லௌகீகத்தில் பொருள் பற்றுடன் நிறைய பொருள் ஈட்டுபவன் செல்வந்தன்.
ஆன்மீகத்தில் பொருள் பற்று அற்று, அருள் ஈட்டுபவனே அருளாளன்.
லௌகீகத்தில் அதிகாரமும், செல்வாக்கும் படைத்தவனே பெரியவன்.
ஆன்மீகத்தில் உலகில் தாழ்ந்திருந்து விண்ணக வாழ்வுக்கு ஏற்றவனே பெரியவன்.
"மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
(மத்தேயு நற்செய்தி 11:11)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment