Tuesday, February 11, 2025

வியாழன்13 .இயேசு அவரைப் பார்த்து, "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்றார். (மாற்கு நற்செய்தி 7:27)

வியாழன்13                                                                          .

இயேசு அவரைப் பார்த்து, "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்றார். 
(மாற்கு நற்செய்தி 7:27)


யூதர்கள் அல்லாதாரை புற இனத்தார் என்று அழைப்பது அன்றைய வழக்கம்.

இயேசு யூத இனத்தில் பிறந்தார். யூதர்கள் மற்றவர்களைப் புற இனத்தார் என்று அழைத்தார்கள்.

ஆனால் இயேசுவுக்கு யாரும் புற இனத்தார் கிடையாது.

எல்லோரும் அவரால் படைக்கப்பட்டவர்களே.

இயேசு பிறந்தது யூதேயாவிலுள்ள பெத்லகேமிலில் என்றாலும் முதல் மூன்று ஆண்டுகள் யூதர்கள் 400 ஆண்டுகளாக அடிமைகளாக வாழ்ந்த எகிப்தில் வாழ்வதற்கான
சூழ்நிலையை அனுமதித்தார்.

அந்த சூழ்நிலையை உருவாக்கியவர் இஸ்ரயேலின் மூத்த சகோதரர் ஏசாவின் வம்சத்தில் பிறந்த ஏரோது மன்னன்.

பொது வாழ்வின் போது புற இனத்தார் வாழ்ந்த பகுதியிலும் நற்செய்தி அறிவித்திருக்கிறார்.

இன்றைய வாசகமும் இயேசு அனைவருக்கும் பொதுவானவர் என்பதைத் தெளிவு படுத்துகிறது.


சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு இயேசுவை வேண்டினார். 

அவள் ஆழமான விசுவாசத்துடன் தான் இயேசுவைத் தேடி வந்தாள்.

இயேசு நமது ஆழ் மனதில் உள்ளதையும் அறியக் கூடிய கடவுள்.

ஆனாலும் விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தை மற்றவர்களும் புரிந்து  கொள்ளும் அறிக்கையிட வேண்டும் என்று விரும்பினார்.

ஏனெனில் அது ஒரு நற்செய்திப் பகிர்வாக மாறும்.

அதற்காக இயேசு அவரைப் பார்த்து, "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்றார். 

அதற்கு அப்பெண், "ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே" என்று பதிலளித்தார். 

அந்தப் பெண் இயேசுவுக்கு மிகவும் பிடித்தமான தாழ்ச்சியோடு தனது ஆழமான விசுவாசத்தை அறிக்கையிட்டாள்.

இயேசுவும் அப்பெண்ணின் வேண்டுதலின் படி அவள் மகளைக் குணமாக்கினார்.

அப்பெண்ணின் தாழ்ச்சியும், ஆழமான விசுவாசமுமே நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

உலக ரீதியாக நமக்கு அமைச்சரைப் போன்ற ஒரு பெரிய மனிதரோடு பேசும் உரிமை கிடைத்தால் நம்மை அறியாமலேயே நமக்குள் தற்பெருமை உணர்வு ஏற்பட்டு விடும்.

ஆனால் எல்லாம் வல்ல இறைவனோடு பேசும் போது நமக்கு அத்தகைய உணர்வு வரக்கூடாது.

அவர் நம்மை படைத்தவர் என்று எண்ணம் நமது மனதில் இருக்க வேண்டும்.

சுயமாக நாம் ஒன்றுமே இல்லாதவர்கள் என்ற உண்மையான உணர்வு இருக்க வேண்டும்.

இதுவே  தாழ்ச்சி.

ஒன்றும் இல்லாத நமக்கு இறைவன் கேட்டதைத் தருவார் என்ற ஆழமான விசுவாசம் இருக்க வேண்டும்.

தாழ்ச்சியும், விசுவாசமும் சேர்ந்துதான் நமது வேண்டுதலை வல்லமை உள்ளதாக மாற்றும்.

இந்த இரண்டும் இல்லாமல் எத்தனை முறை வேண்டினாலும் பயனில்லை.

நமது உண்மை நிலையை உணர்வோம்.

விசுவசிப்போம்.

வேண்டுவோம்..

பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment