ஆன்மீக உணவு.
(தொடர்ச்சி)
"கடவுள் சுயமாக வாழ்கிறார். அவர் வாழ வேறு யாருடைய உதவியும் தேவையில்லை.
அவர் உலகத்தையும், அதிலுள்ள தாவரங்களையும், பிராணிகளையும் படைத்து விட்டு தான் மனிதனைப் படைத்தார்.
அவற்றை உணவாக உண்டுதான் மனிதன் வாழ வேண்டும் என்பது அவரது திட்டம்.
அவற்றை உண்பதால் மனிதனுடைய உடல் வளரும், வாழும்.
ஆனால் அவருடைய சாயலில் படைக்கப்பட்ட ஆன்மாவுக்குத் தன்னையே உணவாக அளிக்க நித்திய காலமாகத் தீர்மானித்தார்.
அவரது எந்த தீர்மானமும் நித்தியமானது.
ஒரு தாய் குழந்தை உற்பவித்த வினாடியிலிருந்து அதைத் தன் சதையாலும், இரத்தத்தாலும் வளர்க்கிறாள்.
குழந்தை பிறந்த பிறகும்கூட பாலாக மாறிய தன் இரத்தத்தால் தான் அதை வளர்க்கிறாள்.
கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவள் அவள்.
கடவுள் தனது அருளால் தன்னால் படைக்கப்பட்டவர்களை வளர்ப்பது போல, தாய் தனது இரத்தத்தால் தன் குழந்தையை வளர்க்கிறாள்.
ஆனாலும் தன்னை முழுவதும் அப்படியே உணவாகக் கொடுப்பதில்லை.
ஆனால் கடவுள் தன்னையே நமக்கு உணவாகத் தர நித்திய காலமாகத் தீர்மானித்தார்.
மனிதன் செய்த பாவத்தை அதற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய மனிதனாகப் பிறந்த அவர்
அதற்காக மரணம் அடைந்து விண்ணகம் எய்திய பின்னும் நம்மோடு வாழத் தீர்மானித்து, அதற்காகத் திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.
முதலில் தன் சீடர்களுக்குத் தன்னையே உணவாகக் கொடுத்தார்.
தொடர்ந்து உலகம் முடியும் மட்டும் வாழ்பவர்களுக்குத் தன்னை உணவாகக் கொடுக்கத் தீர்மானித்து குருத்துவத்தை ஏற்படுத்தினார்.
கத்தோலிக்கத் திருச்சபையின் குருக்கள் திருப்பலியின் போது அப்பத்தையும், இரசத்தையும் இயேசுவாக மாற்றி,
அன்று உலகில் பிறந்து, 33 ஆண்டுகள் வாழ்ந்து நமக்காக மரித்த அதே இயேசுவை (The very same Jesus) நமக்கு உணவாகத் தருகிறார்கள்.
நமக்காக இரவும் பகலும் திவ்ய நற்கருணைப் பேழையில் வாழ்ந்து கொண்டிருப்பவரும் அதே இயேசுதான்.
நாம் திவ்ய நற்கருணை வாங்கும் போது அருளின் ஊற்றாகிய இறைவனையே உணவாக உண்கிறோம்.
அவர்தான் நமது ஆன்மீக உணவு."
" ஆனால், தாத்தா, இயேசுதான் திவ்ய நற்கருணை என்ற உணர்வோடு அவரை உணவாக வாங்குகிறோமா?
நம்மைப் படைத்த கடவுள் அவர்.
கடவுள் முன் முழந்தாள்படியிட நமக்கு விருப்பம் இல்லை.
தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்டுவது போல, குருவானவர் இயேசுவை நமக்கு உணவாக ஊட்டுகிறார்.
நமது உணவு இயேசு என்ற உணர்வு இருந்தால் அவரைத் ஆரஞ்சு மிட்டாயை வாங்குவது போல கையில் வாங்குவோமா?
அதுவும் இடது கையால்!
ஒவ்வொரு நற்கருணைத் துகழும் இயேசு தானே.
கையில் வாங்கும் போது எத்தனைத் துகழ்கள் கீழே விழும்.
எத்தனை கால்களால் இயேசு மிதிபடுவார்!
இதெல்லாம் கடவுளுக்குக் கொடுக்கும் மரியாதையா ?"
"'அது மட்டுமல்ல, பேரப் புள்ள. திவ்ய நற்கருணை வாங்குபவர்கள் சாவான பாவ நிலையில் இருக்கக் கூடாது.
யூதாஸ் சாவான பாவத்தோடு நற்கருணை உட்கொண்டான்.
விளைவு?
"அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்."
(அரு. 13:27)
பாவ சங்கீர்த்தனம் செய்யாமல் சாவான பாவ நிலையில் இயேசுவை உட்கொள்பவர்கள் யூதாஸ்கள் .
ஆன்மீகச் சுத்தம் இன்றி திவ்ய நற்கருணை உட்கொள்பவர்கள் விண்ணக வாழ்வைச் சம்பாதிக்க மாட்டார்கள், பேரிடர் வாழ்வைச் சம்பாதிப்பார்கள்.
திவ்ய நற்கருணை வாங்க விரும்பும் ஒவொருவரும் இதை நினைவில் கொள்ள வேண்டும்.
குருக்கள் மக்களுக்கு இதை அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு திருப்பலிக்கு முன்பும் குருக்கள் பாவ சங்கீர்த்தனத் தொட்டியில் அமர வேண்டும்."
"ஆக, ஆன்மீக உணவைத் தகுந்த தயாரிப்பின்றி உண்பவர்கள்,
உணவை அல்ல, விசத்தை உண்கிறார்கள்.
"ஆகவே, எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால், அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார்.
எனவே ஒவ்வொருவரும் தம்மையே சோதித்தறிந்த பின்பே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருக வேண்டும்.
ஏனெனில், ஆண்டவருடைய உடல் என உணராமல் உண்டு பருகுபவர் தம் மீது தண்டனைத் தீர்ப்பையே வருவித்துக் கொள்கிறார்.
(1கொரிந்தியர் 11:27-29)
திருப்பலியின் போது திவ்ய நற்கருணையை உட்கொண்டால் மட்டும் போதாது,
நேரம் கிடைக்கும் போதெல்லாம் திவ்ய நற்கருணைப் பேழையில் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கும் அவரைச் சந்தித்து அவரோடு உரையாட வேண்டும்.
இயேசு நமது மீட்பர் மட்டுமல்ல, நமது சகோதரரும் கூட.
நம்மீது அளவு கடந்த பாசமும் அக்கறையையும் உள்ளவர்.
அவரைச் சந்தித்து நமது அன்பைத் தெரிவிக்க வேண்டும்.
நமக்கு வேண்டியதைக் கேட்க வேண்டும்.
நாம் வீட்டில் இருக்கும் போதும்
"இயேசுவே, உம்மை நேசிக்கிறேன்."
"Jesus, I love you."
என்று அடிக்கடி சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு வினாடியும் அவரோடு ஒன்றித்து இருக்க வேண்டும்.
அவரது கரம் பிடித்து விண்ணகப் பாதையில் நடக்க வேண்டும்.
அவரோடு விண்ணக வாழ்வுக்குள் நுழைவதுதான் நமது இவ்வுலக வாழ்வின் நோக்கம்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment