Sunday, January 19, 2025

செவ்வாய் 21"ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே" என்றார்."(மாற்கு நற்செய்தி 2:28)

செவ்வாய் 21

"ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே" என்றார்."
(மாற்கு நற்செய்தி 2:28)

ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர். 

அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், "பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?" என்று கேட்டனர். 

பரிசேயர்கள் திருச் சட்டத்தை அதன் எழுத்துப்படி மட்டும் பின்பற்றி வந்தவர்கள்.

வயலில் அறுவடை செய்வது,
 திருச் சட்டத்தில் ஓய்வு நாளில் விலக்கப் பட்ட செயல்.

பரிசேயர்கள் சீடர்கள் கதிர்களைக் கொய்ததை அறுவடையாக எடுத்துக் கொண்டு அவர்கள் செய்தது திருச்சட்டத்துக்கு எதிரான செயல் என்று குற்றம் சாட்டினார்கள்.

சீடர்கள் கதிர்களைக் கொய்தது அறுவடை செய்வதற்காக அல்ல, தங்கள் பசியைப் போக்க.

இயேசு தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் 
கொடுத்ததைச் சுட்டிக் காட்டி பசியின் நிமித்தம் சீடர்கள் செய்ததில் தவறு ஏதும் இல்லை என்பதை விளக்கினார்.

ஓய்வு நாளில் கடினமான வேலை செய்யக் கூடாது.

பசியைப் போக்குவது கடினமான வேலையா?

சீடர்கள் தங்கள உடைமைகள் யாவற்றையும் விட்டுவிட்டு 
இறைப் பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்தவர்கள்.

இரவு பகலும் இயேசுவுடன் இருந்தவர்கள்.

அன்று இயேசுவும் சாப்பிட்டிருக்க மாட்டார்.  சீடர்களும் சாப்பிட்டிருக்க மாட்டார்கள்.

இயேசுவுக்கும் பசியாகத்தான் இருந்திருக்கும்.

அவருக்குப் பணி செய்து கொண்டிருந்த போது அவர்களுக்கு ஏற்பட்ட பசியைப் போக்கவே கதிர்களைக் கொய்தார்கள்.

ஆகவேதான் இயேசு "ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே" என்றார்.

இயேசுவின் வார்த்தைகளைத் தியானித்தால் நமக்கு சில ஆன்மீக உண்மைகள் புலப்படும்.

நமக்கு இயேசு அளித்திருக்கும் ஓய்வு நாள் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஓய்வு நாளைப் போன்றதல்ல.

அவர்களைப் பொறுத்த மட்டில் ஆறு நாட்கள் உழைப்பு, ஒரு நாள் ஓய்வு.

கிறித்தவர்களைப் பொறுத்த மட்டில் ஓய்வு நாள் ஆண்டவருக்கான நாள்.

எல்லா நாட்களுமே ஆண்டவருக்காக வாழ வேண்டிய நாட்கள்தான்.

ஆறு நாட்களும் நாம் உலகில் வாழ்வதற்கான உலகைச் சார்ந்த பணிகளை ஆண்டவருக்காகச் செய்ய வேண்டும்.

ஏழாம் நாளில் இறை வழிபாடு சார்ந்த பணிகளை ஆண்டவருக்காகச் செய்ய வேண்டும்.

இறை வழிபாடு சார்ந்த பணிகளில் திருப்பலியும். பிறரன்புப் பணிகளும் அடங்கும்.

அநேகருக்கு ஞாயிற்றுக் கிழமை மட்டன் சாப்பாட்டு நாள்.

நல்ல மட்டன் வேண்டும் என்பதற்காகச்  திருப்பலி முடிந்தும் முடியாமலிருக்கும் போதே எழுந்து மட்டன் கடைக்குப் போய் விடுபவர்கள் இருக்கிறார்கள்.

மதிய உணவு உண்டபின் நன்கு தூங்கி விடுவார்கள். அதுதான் அவர்களுக்கு ஓய்வு.

ஆனால் ஆண்டவருடைய விருப்பம் அது அல்ல.

திருப்பலிக்குப் பின் 

ஏழைகளைச் சந்தித்து உதவுதல்,
சுகமில்லாதவர்களுக்கு ஆறுதல் கூறுதல் போன்ற பிறர் அன்புப் பணிகளை நாம் செய்ய வேண்டும் என்பது தான் இறைமகனின் ஆசை.

பழைய ஏற்பாட்டில் வாரத்தின் இறுதி நாளான சனிக் கிழமை ஓய்வு நாளாக இருந்தது.

இயேசு உயிர்த்த ஞாயிற்றுக் கிழமை நமக்கு ஓய்வுநாள். 

நமக்கு ஞாயிற்றுக் கிழமை தான் வாரத்தின் முதல் நாள்.

நாம் ஒவ்வொரு வாரத்தையும் இறை வழிபாட்டுடனும், பிறர் அன்புப் பணிகளுடனும் தான் ஆரம்பிக்கிறோம்.

ஆகவே, நம்மைப் பொறுத்த மட்டில்

ஓய்வு = இறைவழிபாடு.

 இறைவழிபாடு   = திருப்பலியும்,  பிறரன்புப் பணிகளும்.

இறைப்பணியும், பிறன்புப் பணியும் செய்து வாழ்பவர்களுக்கு வாழ்க்கையே இறை வழிபாடுதான்.

என் மனதில் ஓய்வு என்ற வார்த்தையில் ஒரு மிக முக்கிய மறையியல் உண்மை அடங்கியிருப்பது போல் தெரிகிறது.

பணிக்குப் பின்பு தானே ஓய்வு.

அப்படியானால் இவ்வலகில் நாம் செய்து கொண்டிருக்கும் இறைப்
பணிக்குப் பின் நாம் எதிர் பார்க்கும் ஓய்வு எது?

மோட்சம். நமது நிரந்தர ஓய்வு, பேரின்பம் நிறைந்த ஓய்வு. நிரந்தரமாக இறை வழிபாடு செய்யும் ஓய்வு.

மோட்சத்தில் நாம் அனுபவிக்க இருக்கும் நிரந்தர ஓய்வின் முன் அடையாளம்தான் உலகில் நாம் அனுசரிக்கும் ஞாயிற்றுக் கிழமை ஓய்வு.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை ஆரம்பிக்கிறது.

ஒவ்வொரு வாரமும் இறை வழிபாட்டில் ஆரம்பித்து நமது வார வாழ்க்கையைத் தொடர்வது போல 

உலகில் வாழும் வாழ்க்கையை விண்ணக நித்திய பேரின்ப நிரந்தர ஓய்வில் தொடர்கிறோம்.

வழிபாடு ---> வேலை ---> வழிபாடு

ஞாயிறு வழிபாடு நமது நித்திய வழிபாட்டை நினைவூட்டுகிறது.

ஞாயிறு வழிபாடு செய்யாதவர்கள் நித்திய வழிபாட்டை எதிர்பார்க்க முடியாது.

ஞாயிறு வழிபாட்டை மறந்து அன்றும் உலக வேலையைச் செய்பவர்கள் நித்திய மோட்ச வழிபாட்டையும் மறந்து விட வேண்டியதுதான்.

இயேசு பத்து  கட்டளைகளையும் இரண்டு கட்டளைகளாகச் சுருக்கித் தந்ததில் கூட இறை வழிபாட்டின் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது.

1. கடவுளை முழு இருதயத்தோடு நேசித்த வேண்டும்.

முழு இருதயத்தையும் 
இறைவன்பால் திருப்புவது இறை வழிபாடு.

2. நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நேசித்து வாழ வேண்டும்.

நம்மையும், அயலனையும் நேசித்து வாழ்வது நமது வாழ்க்கை

இறைவனை வழிபட்டு வாழ்வர்கள் நித்திய காலம் இறைவனை வழிபட மோட்சம் செல்வது உறுதி.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நமக்கு இதை ஞாபகப் படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

நாம் ஞாயிறு திருப்பலிகுச் செல்லும்போதும் விண்ணகத்துக்கு இறைவனை வழிபடச் செல்வதாக நினைத்துக்  கொள்ள வேண்டும்.

அந்த நினைவோடு ஞாயிறு திருப்பலியில் பங்கேற்பவர்கள் வாரம் முழுவதும் மோட்சத்துக்குச் செல்லும் நல்ல கிறித்தவர்களாக வாழ்வார்கள்.

நமக்கு மிகவும் வேண்டியவர்களின் வீட்டில் ஒரு விழா என்றால், நாம் ஏதாவது ஒரு பரிசுப் பொருளை வாங்கிச் செல்கிறோம்.

எதற்காக?

அவர்கள் அப்பொருளைப் பார்க்கும்போது நம்மை நினைத்துக் கொள்வார்கள் என்பதற்காக.

இயேசு தான் உயிர்த்த ஞாயிற்றுக் கிழமையை ஏன் ஒரு பரிசாக, (அவரை வழிபடும் நாளாக) தந்திருக்கிறார்?

ஞாயிற்றுக் கிழமை வரும் போதெல்லாம் நாம் விண்ணக ஓய்வுக்காகவே உலகில் வாழ்கிறோம் என்பதை நாம் நினைத்துக் கொள்வதற்காகத் தான்.

ஞாயிறு திருப்பலிக்குச் செல்லும் போது நாம் விண்ணகத் திருவிருந்தில் பங்கேற்கச் செல்கிறோம் என்ற நினைவோடு செல்ல வேண்டும்.

ஓய்வு நாள் மனு மகனுக்குக் கட்டுப்பட்டது என்ற நினைவோடு உலகில் வாழ்வோம்.

மனு மகன் விண்ணிலிருந்து இறங்கி வந்தது நம்மை விண்ணுலகுக்கு அழைத்துச் செல்வதற்கே என்ற உணர்வோடு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment