Sunday, January 5, 2025

செவ்வாய் 07-01-25"இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று."(மத்தேயு நற்செய்தி 2:4)(தொடர்ச்சி)

.செவ்வாய் 07-01-25


"இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று."
(மத்தேயு நற்செய்தி 2:4)
(தொடர்ச்சி)

யூதர்களின் அரசர் பிறந்திருப்பதைக் கேட்டு ஏரோது கலங்கினான்.

ஆனால் எதற்கும் கலங்காதவர் இயேசு.  கலக்கத்துக்குக் காரணம் பயம். கடவுள் யாரைக் கண்டு பயப்பட வேண்டும்?

கடவுள் நல்லவர், அளவில்லாத நன்மைத்தனம் உள்ளவர்.

நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் மனிதர்களைப் படைக்கிறார்.

மனிதனுக்குப் பரிபூரண சுதந்திரத்தைக் கொடுத்திருப்பதால் அவன் சுதந்திரத்தைப் படுத்தி தீமை செய்யும் போது அவனை அவர் தடுப்பதில்லை.

ஆனால் தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க அவரால் முடியும்.

பரிசேயர்களும், யூத மத குருக்களும் அவரைக் கொன்றது பாவம், அதாவது, தீமை.

ஆனால் இயேசு அதிலிருந்து ஆன்மீக மீட்பு என்ற நன்மையை வரவழைத்தார்.

ஏரோது குழந்தை இயேசுவைக் கொல்லத் திட்டமிட்டது தீமை.

இயேசு அதைத் தனது எகிப்திய பயணத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார்.

அவர் சாகப் பயப்படவில்லை. அவர் பிறந்ததே சாவதற்காகத்தான்.

ஆனால் அவர் சாகத் திட்டமிட்ட நேரம் அது அல்ல.

ஏரோதுவின் ஆட்சி காலத்தில் எகிப்தில் வாழ வேண்டும் என்பது அவரது நித்திய காலத் திட்டம்.

ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் திருக் குடும்பம் அங்கு தங்கியிருந்திருக்கலாம் என்று அங்குள்ள பாரம்பரிய நம்பிக்கைகள் கூறுகின்றன.

குழந்தை இயேசு அங்கு புதுமைகள் செய்ததாக எழுதப்படாத பாரம்பரியம் கூறுகிறது.

ஒரு வகையில் பிற்காலத்தில் இயேசுவின் சீடர் மாற்கு அங்கு நற்செய்தியை அறிவிப்பதற்கு குழந்தை இயேசு அடித்தளம் இட்டு விட்டு வந்ததாகக் கூறலாம்.

எகிப்தில் மூன்று ஆண்டுகள் இயேசு தங்க ஏரோதுவின் அதிகார மோகம் உதவியிருக்கிறது.

அது மட்டுமல்ல ஆயிரக்கணக்கான குழந்தைகள் விண்ணகம் செல்ல ஏரோது உதவியிருக்கிறான்.

நாம் இயேசுவின் எகிப்திய பயணத்திலிருந்து என்ன பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்?

நாம் நம்மை விட பலம் குறைந்த ஒருவர் நமக்கு எதிராக எழுந்தால் நாம் அவரை அடக்கி ஒன்றுமில்லாதவர் ஆக்கி விடுவோம்.

நம்மை எதிர்ப்பவரைப் பழி வாங்கக் கூடாது என்ற பாடத்தை இயேசு நமக்குக் கற்பிக்கிறார்.

ஒரு பள்ளியில் பணி புரியும் ஆசிரியருக்கு எதிராக இன்னொருவர் நிவாகியிடம் சென்று புறணி பேசி அவருக்கு பணிமாறுதல் (Transfer) கிடைக்க செய்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம்.

அவர் பதிலுக்குப் பதில் புறணி பேசாமல் மாற்றத்தை பணிவோடு ஏற்றுக் கொண்டால் அது அவருக்கு ஆன்மீக ரீதியாக நன்மை பயக்கும்.

புறணி பேசியவருக்குப் பயந்து அல்ல, கடவுளுக்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இயேசு குழந்தைப் பருவத்திலிருந்து மரணம் வரை தனக்கு எதிராக செயல் புரிந்தவர்களுக்கு எதிராக எதுவுமே செய்யவில்லை.


ஒரு முறை அவரது எதிரிகள் அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். 

ஆனால் அவர் அவர்களை ஒன்றும் செய்யாமல் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார். 

அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசை "நண்பனே" என்று அழைத்தார்.

யூதாசைப் பற்றிக் கருத்து கூறும் சிலர் இயேசுவின் நல்ல குணத்தின் அடிப்படையில் தான் அவரைக் காட்டிக் கொடுத்ததாகக் கூறுகிறார்கள்.

இயேசு கடவுள், அவரால் மற்றவர்களுக்குத் தீங்கு எதுவும் ஏற்படாது, மற்றவர்களால் அவரை எதுவும் செய்ய முடியாது என்று அவன் எண்ணினான் என்றும், 

அவரைக் காட்டிக் கொடுத்தால் தனக்கும் பணம் கிடைத்து விடும், அவரையும் யாராலும் கொல்ல முடியாது என்றும்

எண்ணித்தான் காட்டிக் கொடுத்தான் என்கிறார்கள்.

அதனால் அவருக்கு மரணத் தீர்ப்பு கிடைத்தவுடனே

"மாசில்லா இரத்தத்தைக் காட்டிக் கொடுத்து விட்டேனே" என்று மனம் வருந்தி, பணத்தைத் தூர எறிந்து விட்டான் என்கிறார்கள்.

அந்த வருத்தத்தில் நாண்டு கொண்டாலும் மரணத்தின் இறுதி வினாடியில் மனம் திரும்பி மன்னிப்புக் கேட்டிருப்பான் என்கிறார்கள்.

யாரையும் தீர்ப்புக் கூற நமக்கு அதிகாரம் இல்லை.

நல்லதையே நினைப்போம்.

இயேசுவும் சிலுவையில் தொங்கும் போது தனது மரணத்துக்குக் காரணமானவர்களை மன்னித்து விட்டார்.

அவர் தனது வாழ்நாளில் கெட்டவர்களை எதிர்த்துப் போராடவில்லை.

ஏரோது அவரைக் கொல்ல முயன்றபோது அவனை ஒன்றும் செய்யாமல் அவர் ஒதுங்கிக் கொண்டார்.

அவரைக் கொல்லத் தேடிய பரிசேயர்களை எதிர்த்துப் போராடவில்லை.

கெத்சமனித் தோட்டத்தில் தன்னைக் கைது செய்ய வந்தவர்களிடம் தன்னையே கையளித்தார்.

கல்தூணில் கட்டி அடித்த போது அடிகளை எல்லாம் மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்.

முள் முடி சூட்டியவர்களுக்குத் தன் தலையைக் கொடுத்தார்.

சுமத்தப்பட்ட சிலுவையை மறுக்காமல் சுமந்தார்.

தன் உடையை உரியும் போது தடுக்கவில்லை.

எதிரிகள் விருப்பப்படி கடைசி துளி இரத்தத்தையும் கொடுத்து விட்டார்.

இயேசுவிடமிருந்து பாடம் கற்க வேண்டுமானால் நாம் மற்றொரு இயேசுவாக மாற வேண்டும்.

இயேசுவாக மாறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment