Sunday, January 12, 2025

கடவுள் மாறாதவர்.

செவ்வாய் 14-01-25

கடவுள் மாறாதவர்.

"தாத்தா, கடவுள் மாறாதவர் என்று சொல்கிறார்களே, அது எனக்குப் புரியவில்லை."

"' முதலில் மாற்றம் என்றால் என்ன என்று புரிகிறதா?"

"அது எப்படி புரியாமல் இருக்கும்?
நாம் தான் ஒவ்வொரு வினாடியும் மாறிக்கொண்டிருக்கிறோமே.

கொஞ்ச நேரத்துக்கு முன்னால் எங்கள் வீட்டில் இருந்தேன். இப்போது உங்கள் முன் இருக்கிறேன்."

"'உன்னைப் பொறுத்த மட்டில் எதெல்லாம் மாறியிருக்கிறது?"

"நேரமும், இடமும் மாறியிருக்கிறது"

"' காலத்துக்கும், இடத்துக்கும் உட்பட்டது எல்லாம் மாறிக் கொண்டிருக்கும். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் வயதில் மாறியிருப்பாய். வயது மாறும் போது உருவம் மாறும்.

நாம் ஒரு இடத்திலேயே எப்போதும் இருப்பதில்லை.

வீட்டில் இருந்தால் கூட ஒரே இடத்தில் தொடர்ந்து இருப்பதில்லை."

'' அதாவது காலத்துக்கும், இடத்துக்கும் உட்பட்டவர்களால் மாறாமலிருக்க முடியாது."

"'கரெக்ட். கடவுள் காலத்துக்கும், இடத்துக்கும் அப்பாற்பட்டவர்.

நமக்கு ஆரம்பமும், முடிவும் இருக்கிறது.

கடவுள் துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

அவர் வாழும் விண்ணகம் இடம் கிடையாது."

"கடவுள் எங்கும் இருக்கிறார் என்று சொல்கிறோம்?"

"'நமது மொழியும் காலத்துக்கும், இடத்துக்கும் உட்பட்டது.

அதனால்தான் வினைச் சொல்லுக்கு மூன்று காலங்கள் இருக்கின்றன.

நாம் பிறந்தோம், வாழ்கிறோம், இறப்போம்.

நமது மொழியில் எங்கும் இடத்தைக் குறிக்கும்.

உலகமெங்கும் என்றால் உலகின் எல்லா இடங்களிலும் என்று பொருள்.

உன்னால் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடியுமா?''

''முடியாது. வீட்டில் இருக்கும் போது பள்ளியில் இருக்க முடியாது. வீட்டில் கூட, கட்டிலில் படுத்திருக்கும் போது நாற்காலியில் இருக்க முடியாது."

"'அப்போது ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மைப் பற்றி பேசப் பயன்படுத்தும் மொழியால் கடவுளைப் பற்றி பேச முடியாது.

ஆனால் வேறு வழி இல்லாததால் கடவுளைப் பற்றி பேச நமது மொழியைப் பயன் படுத்துகிறோம். ஆனால் புரிந்து கொள்ள வேண்டிய விதமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

கடவுள் எங்கும் இருக்கிறார், ஆனால் நம்மைப் போல் அல்ல.

நாம் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறோம். நான் இருக்கும் இடத்தில் நான் இருக்கும் போது உன்னால் இருக்க முடியாது.

கடவுள் இருக்க இடம் தேவை இல்லை.

எல்லா இடங்களிலும் கடவுள் தனது வல்லமையால், ஞானத்தால், அன்பினால் அதாவது அவருடைய பண்புகளால் இருக்கிறார்.

நமது மொழிப் படி எல்லா இடங்களிலும் உள்ள எல்லா பொருட்களையும் தனது வல்லமையால் படைத்தவர் அவர்.

அவற்றை அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆகவே வல்லமையால் எங்கும் இருக்கிறார்.

எல்லா இடங்களிலும் உள்ள பொருட்களைப் பற்றியும் அவர் நன்கு அறிவார். ஆகவே ஞானத்தால் எங்கும் இருக்கிறார்.

அவர் தனது படைப்பை அன்பு செய்கிறார். ஆகவே தனது அன்பினால் எங்கும் இருக்கிறார்.

அதே போல் தான் நமது உள்ளத்திலும் இருக்கிறார்.

நம் மீது கொண்ட அன்பாலும், வல்லமையாலும் நம்முள் இருக்கிறார்.

நம்மைப் போல இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கவில்லை.
God does not occupy space. 

புரிகிறதா?"

"புரிகிறது. அவரே அன்பு தானே.
அன்பாகிய அவர் நம்முள் இருப்பதால் தான் நம்மால் அன்பு செய்ய முடிகிறது.''

"' அவர் எப்போதும் நம்மை நினைத்துக் கொண்டு இருப்பதால் தான் நாம் இருக்கிறோம். கடவுளால் யாரையும், எதையும் மறக்க முடியாது.

நாம் அளவுள்ளவர்கள். அளவுள்ள பொருள் வளர வாய்ப்பு இருக்கிறது. 

கடவுள் அளவில்லாதவர். அவரால் இருப்பதை விட பெரியவராகவோ, சிறியவராகவோ மாற முடியாது.

அவரது அளவில்லாத அன்பு கூடவும் செய்யாது, குறையவும் செய்யாது.''

''ஆனால், தாத்தா, கடவுள் ஆவி (Spirit) தானே. ஆவியான கடவுள் உடலும் ஆன்மாவும் உள்ள மனிதனாகப் பிறந்தாரே,  அது மாற்றமில்லையா?"

"'நீ அமெரிக்காவுக்கு Flightஅ போக திட்டமிட்டிருக்கிறாய் என்று வைத்துக் கொள்வோம்.

ஆனால் புறப்படக் கூடிய நேரம் வந்ததும் உன் திட்டத்தை மாற்றி கப்பலில் பயணிக்கிறாய்.

நீ உன் திட்டத்தில் மாறியிருக்கிறாய்.

ஆனால் திட்டமிடும்போதே பாதி தூரம் Flight லும், பாதி தூரம் கப்பலிலும் போகத் திட்டமிட்டிருக்கிறாய் என்று வைத்துக் கொள்வோம்.

பாதி தூரம் Flight ல் பயணித்த பின் நீ கப்பலில் ஏறினால், நீ மாறியிருக்கிறாயா?"

"இல்லை. நான் முதலில் போட்ட திட்டப் படிதான் பயணிக்கிறேன்.

ஒரு வேளை கப்பலில் பயணிக்காமல் நடந்து பயணித்தால் நான் மாறியிருக்கிறேன்."

"' Very good. கடவுள் திட்டப்படி செயல் படுகிறார். அவரது திட்டத்தை மாற்ற மாட்டார். 
மாற்ற முடியாது, மாற முடியாதது அவர் இயல்பு.

அவருடைய திட்டம் நித்தியமானது.

கடவுள் நித்தியர், அவருடைய திட்டமும் நித்தியமானது.

அவரைப் பற்றி பேசும் போது வினைச் சொற்கள் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும்.

இருக்கிறவர் கடவுள்.

ஆனால் நம்மைப் பொறுத்த மட்டில் நாம் பேசுவதற்கு முன்பு செய்யப்பட்டதை குறிக்க இறந்த கால வினைச் சொல்லைப் பயன்படுத்துகிறோம்.

அதனால் கடவுள் உலகைப் படைத்தார் என்று கூறுகிறோம்.

கடவுள் அளவில்லாத ஞானம் உள்ளவர்.

நம்மைப் பொறுத்த மட்டில் நமக்கு முன் கோடிக்கணக்கான ஆண்டுகள் கடந்து போய் விட்டன.

இன்னும் கோடிக்கணக்கான ஆண்டுகள்  வரயிருக்கின்றன.

நம்மால் கடந்த ஆண்டுகளைப் பார்க்க முடியாது.
 வரும் ஆண்டுகளையும் பார்க்க முடியாது. நிகழ்வதை மட்டும் பார்க்க முடியும்.

ஆனால் கடவுளுக்கு முக்காலமும் ஒரே நோக்கில் எப்போதும் தெரியும்.

மனிதனைப் படைக்கத் திட்டமிடும் போதே மனிதன் பாவம் செய்வான் என்று அவருக்குத் தெரியும்.

ஆகவே பாவத்திலிருந்து மனிதனை மீட்க மனிதனாகப் பிறக்க வேண்டும் என்பது அவரது நித்திய காலத் திட்டம்.

திட்டப்படி மனிதனாகப் பிறந்தார்.
திட்டப்படி நற்செய்தி அறிவித்தார்.
திட்டப்படி பாடுகள் பட்டார்.
திட்டப்படி மரித்தார்.
திட்டப்படி உயிர்த்தார்.

அவரது நித்திய காலத் 
திட்டத்திலிரிந்து அவர் மாறவேயில்லை.

மாற முடியாது.''

" நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தப்பு செய்கிறேன் என்று வைத்துக் கொள்வோம்.

உங்களுக்கு என் மேல் கோபம் ஏற்படுகிறது.

நான் மன்னிப்பு கேட்கிறேன். கோபம் மாறி மன்னிக்கிறீர்கள்.
அதாவது நான் மன்னிப்பு கேட்கும் போது நீங்கள் மாறுகிறீர்கள்.

நாம் பாவம் செய்யும் போது கடவுளை நோகச் செய்கிறோம். நாம் மன்னிப்புக் கேட்கும் போது கடவுள் மனம் மாறினால் தானே நம்மை மன்னிக்க முடியும்.

ஒவ்வொரு முறை நம்மை மன்னிக்கும்போதும் கடவுள் மனம் மாறுகிறார் என்று நான் சொல்கிறேன்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

"'கடவுள் மனம் மாறவில்லை என்று நான் சொல்கிறேன்.''

"தாத்தா, பழைய ஏற்பாட்டில் இஸ்ரேல் மக்கள் தங்கத்தால் செய்யப்பட்ட கன்றுக் குட்டியை வணங்கியபோது அவர்கள் மீது தடவுள் கோபமாக இருந்தார் என்றும், மோயீசன் அவர்களுக்காக மன்றாடிய பின் 

கடவுள் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார். 
(விடுதலைப் பயணம் 32:14)
என்றும் பைபிள் சொல்கிறதே."

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment