Sunday, January 26, 2025

செவ்வாய் 28தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, "இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. (மாற்கு நற்செய்தி 3:34)

செவ்வாய் 28

தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, "இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. 
(மாற்கு நற்செய்தி 3:34)

இயேசு போதித்துக் கொண்டிருந்த போது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள். 

 மக்கள் அவரிடம் "அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள்" என்றார்கள்.

அவர் தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்த. சீடர்களைக் காண்பித்து 

"இதோ! என் தாயும் என் சகோதரர்களும்.

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்றார். 

இயேசு சொன்தைன் பொருளைப் புரிந்து கொள்ளாத நமது பிரிவினைச் சகோதரர்கள் அவரது வார்த்தைகளை அவர்களுக்குப் பிடிக்காத அன்னை மரியாளுக்கு எதிரான ஆயுதமாகப் பயன் படுத்துகிறார்கள்.

இயேசுவின் சகோதரர்கள் என்று கூறப்படுபவர்கள் அன்னை மரியாளின் தங்கை மக்கள்.

இயேசு தனது வார்த்தைகளால் தனது தாயைக் குறைத்து மதிப்பிடவில்லை.

இறைவனின் சித்தப்படி நடப்பவர்களும் தனது பெற்ற தாய்க்குச் சமமானவர்களே என்கிறார்.

மரியாளை ஏன் இயேசுவின் தாய் என்கிறோம்?

கபிரியேல் தூதர் இறைவனின் விருப்பத்தை மரியாளுக்குத் தெரிவித்த போது,

"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது சொற்படியே எனக்கு ஆகட்டும்"  என்ற வார்த்தைகளால் இறைவனின் சித்தத்தை ஏற்றுக் கொண்டு, அதன்படியே இயேசுவைக் கருவுற்றுப் பெற்றெடுத்தாள்.

இறைவனின் சித்தப் படி நடந்ததால் தான் அவருக்குத் தாயானாள்.

அதைப் போல இறைவனின் சித்தத்தை ஏற்று, அதன் படி வாழ்பவர்கள் அனைவரும் அவரது தாய் போன்றவர்கள்தான்.

இறைவனின் சித்தப் படி நடப்பதின் மகிமையை விளக்கும் வகையில் அப்படிச் சொன்னாரே தவிர தன் தாயைக் குறைத்து மதிப்பிட அப்படிச் சொல்லவில்லை.

நாம் இயேசுவின் வார்த்தைகளிலிருந்து அவர் விரும்பும் பாடத்தைக் கற்றுக் கொளவோம்.

தாயைப் போல பிள்ளை என்பது தமிழ் மொழி.

நாம் அன்னை மரியை நமது அன்னையாக ஏற்றுக் கொள்கிறோம்.

அப்படியானால் நாம் அவளைப் போல நம்மை இறைவனின் அடிமைகளாக அர்ப்பணிக்க வேண்டும்.

அதாவது நமது விருப்பப்படி அன்று இறைவன் விருப்பப்படி மட்டுமே வாழ வேண்டும்.

அவரது விருப்பம் இயேசு அறிவித்த நற்செய்தியில் அடங்கியிருக்கிறது.

நற்செய்தியின்படி இறைவனையும் பிறரையும் நேசித்து, 
நமக்கு எதிராகக் குற்றம் செய்வர்களை மன்னித்து, அவர்களுக்கு நன்மை செய்து,
நம்மிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு வாழ்ந்தால்

நாம் இயேசுவின் தாய்க்குச் சமமானவர்கள்,

இயேசுவைப் போல நாமும் இறைத் தந்தையின் பிள்ளைகள்,

இயேசுவின் சகோதரர்கள்,

நித்திய பேரின்ப வாழ்வுக்கு ஏற்றவர்கள்.

இயேசு என்று சொன்னவுடனே நமது ஞாபகத்துக்கு வருவது,

ஒரு சிலுவை..

அதில் மூன்று ஆணிகளால் அறையப்பட்டு தொங்குபவர்,

உடல் முழுவதும் இரத்தம் வடிந்த வண்ணம் இருக்கும் காயங்கள்,

ஆடை இல்லை,

விலாவில் ஈட்டியால் குத்தப்பட்டு இரத்தமும், தண்ணீரும் வடியும் காயம்.

தலையில் முள்முடி.

இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு நிற்கும் அன்னை மரியாள் .

விண்ணகத் தந்தையின் விருப்பப்படி வாழ்ந்த இயேசு,  அப்படியே வாழ்ந்த அன்னை மரியாள்,

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றிய மகனும், தாயும்.


கடவுளின் திருவுளப்படி வாழ்வது ரோஜாப்பூ மெத்தை அல்ல,

கல்லும, முள்ளும் நிறைந்த பாதை.

நாமும் மரியாளைப் சிலுவைப் பாதையில் நடந்தால் தான் அவளுடைய பிள்ளைகள்.

குழந்தையின் முகத்தைப் பார்க்க வேண்டுமென்றால் தாய் பிரசவ வேதனையை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

விண்ணகப் பேரின்ப வாழ்வுக்குள் நுழைய வேண்டுமென்றால் சிலுவைப் பாதையில் நடந்து தான் ஆக வேண்டும்.

இதுதான் விண்ணகத் தந்தையின் திருவுளம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment