Wednesday, January 29, 2025

வெள்ளி31"அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார்."(மாற்கு நற்செய்தி 4:33)

வெள்ளி31


"அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார்."
(மாற்கு நற்செய்தி 4:33)

ஆண்டவர் விண்ணெய்து முன்பு சீடர்களிடம் கூறியது,

உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்,

விசுவசித்து, திருமுழுக்கு பெறுபவர்கள் மீட்புப் பெறுவார்கள்.

நற்செய்தி அறிவிப்பதன் நோக்கம்?

விசுவாசம்.
திருமுழுக்கு.

திருமுழுத்தின் நோக்கம்?
பாவ மன்னிப்பு.

பாவ மன்னிப்பின் நோக்கம்?
பாவமில்லாமல் வாழ்வது.

பாவமில்லாமல் வாழ்வதன் நோக்கம்?
மீட்பு.

இரத்தின சுருக்கமாக,


நற்செய்தி அறிவிப்பதன் நோக்கம்?

பாவமின்றி வாழ்ந்து மீட்புப் பெறுதல்.

நற்செய்தியை அறிவதனால் மட்டும் ஒருவன் மீட்புப் பெற முடியாது.

சாப்பிட்டால் பசி நீங்கி விடும் என்று அறிந்தால் பசி நீங்கி விடுமா?

சாப்பிட்டால் தான் நீங்கும்.

பைபிளை வாசிப்பதனால் மட்டும் ஒருவன் மீட்பு பெற முடியாது.

கணிதத் தேர்வில் நூற்றுக்கு நூறு எடுப்பது போல ஒருவன் பைபிள் தேர்வில் நூற்றுக்கு நூறு எடுத்தால்.

அதனால் மட்டும் அவனால் மீட்புப் பெற முடியாது.

அதாவது பைபிளைப் பற்றிய அறிவு நமக்கு மீட்பைப் பெற்றுத் தராது.

அதன்படி வாழ்வதுதான் மீட்பைப் பெற்றுத் தரும்.

ஆனால் எழுத வாசிக்கத் தெரியாத ஒருவன் பைபிளை வாசிக்கா விட்டாலும்

பாவம் இல்லாமல் வாழ்ந்தால் உறுதியாக மீட்பு பெறுவான்.

நற்செய்தி அறிவு மிகுந்தவன் பாவத்தோடு வாழ்ந்தால் மீட்புப் பெற முடியாது.

ஆக மீட்பு பெறுவதற்கு அத்தியாவசியத் தேவை பாவம் இல்லாமல் வாழ்வது மட்டும்தான்.

இயேசு சாதாரண படிப்பறிவு இல்லாத மக்களுக்குப் போதிக்கும் போது கதைகள் மூலம் போதித்தார்.

கதைகள் அறிவுக்குத் தீனி போடாது. ஆனால் பாவம் இல்லாத வாழ்க்கைக்கு வழி  காட்டும்.

ஆகவேதான்  தத்துவங்களை அறிய முடியாத பாமர மக்களுக்கு இயேசு கதைகள் மூலமாகப் போதித்தார்.

அறிவை விட பாவமற்ற வாழ்க்கை தான் முக்கியம்.

மக்களின் திறமைக்கு ஏற்ப அவர்களுக்குப் புரிகிற அளவுக்கு அவர்களுக்கு கதைகள் மூலம் போதித்தார்.

அவர்கள் நல்லவர்களாக வாழ்ந்து மோட்சத்துக்குப்   போனால் போதும்.

நற்செய்தி அறிவிப்பதன் நோக்கம் மீட்புப் பெறுவதுதான், அறிவு பெறுவது அல்ல.

என்னுடைய அம்மா பள்ளிக்கூடம் பக்கத்திலேயே போனதில்லை.

எழுத வாசிக்கத் தெரியாது.

ஆகவே ஒரு நாளும் பைபிளை வார்த்ததில்லை.

அவர்களுக்கு பைபிள் பங்குச் சுவாமியாரின் ஞாயிற்றுக் கிழமை பிரசங்கம் தான்.

அவர்களுடைய வாழ்க்கையே செப வாழ்க்கைதான்.

செபம் என்றால் இறைவனோடு ஒன்றித்திருத்தல்.

அதற்கு மொழி தேவையில்லை.

உள்ளங்கள் ஒன்றித்து வாழ்வது தான் செபம்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு திருப்பலிக்கு முன் பாவ சங்கீர்த்தனம்.

வாரம் முழுவதும் பாவம் இல்லாமல் வாழ்வது.

பாவம் இல்லாமல் கடவுளையும், பிறரையும் நேசித்து வாழ்வது தான் ஆன்மீக வாழ்க்கை, ‌அதாவது மீட்பைப் பெற்றுத் தரும் வாழ்க்கை.

எழுத வாசிக்கத் தெரியாத, பைபிளே வாசிக்காத, செபத்தையே வாழ்வாக் கொண்ட ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர் தான் அருட்தந்தை G. மிக்கேல் பெர்க்மான்ஸ் சே.ச. அடிகளார்.

தன் வாழ்வை சர்வ சமய ஐக்கியப் பணிக்காக அர்ப்பணித்தவர்.

இயேசு நம்மிடம் எதிர் பார்ப்பது அறிவை அல்ல, ஞானத்தை.

ஆனாலும நற்செய்தியை அறிவிப்பவர்களுக்கு அதைப் பற்றிய ஆழமான அறிவு தேவை.

ஆகவேதான் இயேசு பாமர மக்களுக்கு கதைகள் மூலம் போதித்த பிறகு அந்த கதைகளில் உள்ள ஆழமான கருத்தை தன்னுடைய சீடர்களுக்கு 
அவர்கள் தனியாக இருக்கும் போது விளக்கினார்.

ஏனெனில் அவர்கள் போதிக்க வேண்டியவர்கள்.

ஆகவேதான் நமது தாய் திருச்சபை குருக்களுக்கு 14 ஆண்டுகள் தத்துவ சாத்திரரும், தேவ சாத்திரமும் கற்பிக்கப்படுகிறது.

அவர்கள் ஆழமாகப் படிப்பது அப்படியே நம்மிடம் சொல்வதற்கு அல்ல.

யாருக்கு எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சொல்வதற்கு.

இயேசு போதித்தது போல போதிப்பதற்கு.

யார் யாருக்கு எப்படிப் போதிக்க வேண்டுமோ அப்படிப் போதிப்பதற்கு அறிவை விட ஞானம் அதிகம் வேண்டும்.

இறை ஞானத்துக்கும் உலக அறிவுக்கும் சம்பந்தம் இல்லை.

இறை ஞானம் தெய்வ பயத்திலிருந்தும், இறை அன்பிலிருந்தும் பிறக்கிறது.

அப்படியானால் பைபிள் அறிவுக்கும், இறை ஞானத்துக்கும் சம்பந்தம் இல்லையா?

இருக்கிறது.

வாழ்வாக மாறும் பைபிள் அறிவிலிருந்து ஞானம் பிறக்கும்.

தெய்வ பயமும், இறையன்பும் உள்ளவர்கள் தான் பைபிள் அறிவை வாழ்வாக்குவார்கள்.

பயமும் பக்தியும் இல்லாதவர்களுக்கு பைபிள் அறிவினால் எந்த ஆன்மீகப் பயணம் இல்லை.

பைபிள் அறிவு இல்லாவிட்டாலும் பயமும் பக்தியும் உள்ளவர்கள் மீட்பு பெறுவது உறுதி.

பாமக மக்களின் நோய்களை குணமாக்கிய போது இயேசு,

"உனது விசுவாசம் உன்னைக் குணமாகிற்று" என்றுதான் சொன்னார்.

கடவுள் எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக படைக்கவில்லை.

எல்லோருக்கும் ஒரே மாதிரியான திறமைகளை கொடுக்கவில்லை.

தாலந்து உவமையில் பத்து தாலந்துகள் பெற்றவர்களும் இருந்தார்கள்,

 ஐந்து தாலந்துகள் பெற்றவர்களும் இருந்தார்கள்,

 ஒரு தாலந்து பெற்றவனும் இருந்தான்.

 அவரவருக்குக் கொடுத்ததை அவரவர்கள் பயன்படுத்த வேண்டும்.

அதிகம் பெற்றவர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படும்.

குறைவாக பெற்றவர்களிடமிருந்து குறைவாக  எதிர்பார்க்கப்படும்.

பாமர மக்களாக இருந்தாலும் சரி,
படிப்பறிவு பெற்ற ஞானிகளாக 
இருந்தாலும் சரி

அவரவர் தகுதிக்கு ஏற்ப விசுவாச வாழ்வு வாழ வேண்டும்.

இயேசு சாதாரண மக்களுக்கு கதைகள் மூலமே போதித்தார்.

சீடர்களுக்கு ஆழமான அறிவைக் கொடுத்தார்.

இரு வகையினருக்கும் அத்தியாவசியமானது விசுவாசம்.

விசுவாசம் உள்ளவர்கள் தங்களிடம் இருப்பதை இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்வார்கள்.

உலக வாழ்க்கையில் ஏழைகளை விட செல்வந்தர்கள் அதிக மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள் என்று நினைக்கிறோம்.

ஆனால் உண்மை அது அல்ல.

ஏழைகளைப் பொருத்தமட்டில் உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இருப்பிடமும் குறைந்த அளவு இருந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
அவர்களுக்கு தேவைகள் அதிகம் இருக்காது.

ஆனால் அளவுக்கு மீறிய செல்வம் உடையவர்களுக்கு அதை ஈட்டவும் காக்கவும் அவர்கள் படுகிற சங்கடங்கள் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

தேவைகளும் பொறுப்புகளும் அதிகமாக அதிகமாக கவலைகள் தான் அதிகமாகும்.

ஒரு ஏழை எங்கு வேண்டுமானாலும் நிம்மதியாகத் தூங்குவான். அவரிடம் திருடப்படுவதற்கு எதுவும் இருக்காது.

ஆன்மீக வாழ்விலும் இறைவனைப் பற்றி அதிகமாக அறிந்தவர்களுக்கு குறைவாக அறிந்தவர்களை விட பொறுப்புக்கள் அதிகம்.

சாதாரண மக்களாகிய நாம் கீழ்ப்படிந்து வாழ்ந்தாலே போதும்.

குருக்கள் அவர்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு கீழ்ப்படியவும் வேண்டும், நம்மை வழி நடத்தவும் வேண்டும்.

ஆகவே நம்மை விட அவர்களுக்கு பொறுப்புகள் அதிகம்.

நம்மிடம் இருப்பதை வைத்து பெரியவர்களுக்குக் கீழ் படிந்து வாழ்ந்தாலே நமக்கு மீட்பு உறுதி.

நமக்காகத்தான் இயேசு அனேக கதைகளைக் கூறியிருக்கிறார்.

கதைகளின் கருத்துப்படி நடந்தாலே போதும், நாம் விண்ணகம் செல்வது உறுதி.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment