Monday, January 13, 2025

புதன் 15-01-25. கடவுள் மாறாதவர்.(தொடர்ச்சி)

புதன் 15-01-25

கடவுள் மாறாதவர்.
(தொடர்ச்சி)

"'பைபிள் செய்தி கடவுளுடையது.
எழுதியது மனிதன், மனித மொழியில்.

மனித மொழியால் கடவுளைப் பற்றி உள்ள படியே எழுத முடியாது. வேறு வழி இல்லாமல் மனித மொழி பயன் படுத்தப் பட்டிருக்கிறது.

நாம் புரிந்து கொள்ள வேண்டிய விதமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

"மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது. 
(தொடக்கநூல் 6:6)
என்று பைபிளில் எழுதப்பட்டிருக்கிறது.

ஆனால் கடவுளால் மனம் வருந்த முடியாது.

அன்பு, மகிழ்ச்சி போன்ற நேர்முகப் பண்புகள் அளவில்லாத விதமாய் உள்ள கடவுளிடம்

கோபம், வருத்தம் போன்ற எதிர்மறைப் பண்புகள்  இருக்க முடியாது.

மனித பாவத்தின் கனாகனத்தின் அளவை நமக்கு விளங்க வைக்க ஆசிரியர் அவ்வாறு எழுதியிருக்கிறார்.

ஒரு வேலையும் செய்யாத சோம்பேறி மகனைப் பார்த்து,

"உன்னைப் பெற்றதுக்குப் பதில் ஒரு விளக்கு மாற்றைப் பெற்றிருக்கலாம். பெருக்கவாவது உதவும்" என்று தாய் கூறுவது போல.

சீனாய் மலையில் இறைவனின் வார்த்தைகள் பற்றி:

மோசே  செபித்த பின் கடவுள் மனம் மாறவில்லை.

தனது படைப்புகளைப் பற்றிய கடவுளின் அறிவும் நித்தியமானது.

அவைகளைப் பற்றி அவர் எடுக்கும் முடிவும் நித்தியமானது.

சீனாய் மலை அடிவாரத்தில் இஸ்ரேல் மக்கள் சிலை வழிபாடு செய்வார்கள் என்று கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

அவர்களை மன்னிக்கும் படி மோசே செபிப்பார் என்றும் கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

அவருடைய செபத்தின் அடிப்படையில் மன்னிப்பு நித்திய காலமாகத் தயார்.

அது எப்போது கொடுக்கப்பட வேண்டும் என்ற திட்டமும் நித்திய காலமாகத் தயார்.

திட்டப்படி சீனாய் மலையில் வைத்து மோசே செபித்தவுடன்  கொடுக்கப் பட்டது.

கடவுள் மாறவில்லை.

பைபிளில் பயன்படுத்தப் பட்ட மனித மொழியை கடவுளின் பார்வையிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும்.
(We must understand the human language used in the Bible from God's point of view)''

"இப்போது நாம் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு?"

"'நாம் என்ன பாவம், எப்போதெல்லாம் செய்வோம் என்று கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

நாம் செய்யும் பாவங்களுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்போமா, கேட்க மாட்டோமா என்பதும் கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

நாம் இன்று பாவசங்கீர்த்தனம் செய்தாலும் அதன் பலனாகிய மன்னிப்பு நித்திய காலமாகத் தயார்.

நித்திய காலமாகத் தயாராக இருக்கும் மன்னிப்பு குருவானவர் மூலம் இப்போது வருகிறது."

"இப்போது புரிகிறது.  கடவுள் அவரது அளவற்ற அன்பிலும், இரக்கத்திலும் மாறவில்லை.

ஆதாம் ஏவாளை அளவு கடந்த அன்புடன் படைத்தார்.

அவர் அந்த அன்பிலிருந்து கொஞ்சம் கூட எப்போதும் மாறவில்லை.

பாவம் செய்யும் போது மனிதன் தான் இறை அன்பை விட்டு விலகுகிறான். மன்னிப்புப் பெற்றவுடன் அவன்தான் இறைவன் அன்புக்குள் வருகிறான்.

இறைவன் மாறாது இருக்கிறார்.

அவரை ஒட்டி வாழ்வதும், விலகி வாழ்வதும் மனிதன் தான்.

அப்போ சாத்தானையும் கூட கடவுள் அளவு கடந்த விதமாய் நேசிக்கிறார் என்று தானே அர்த்தம்.''

"' உறுதியாக.

ஒரு மனிதன் விபரம் தெரிந்த நாள் முதல் மரணம் வரை எப்படி வாழ்வான் கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

அவர் மாறாதவராய் இருப்பதால் மனிதனுக்குக் கொடுத்த சுதந்திரத்தில் தலையிடுவதில்லை.

மனிதன் பாவம் செய்யும் போது அவன் மனம் திரும்ப அருள் வரங்களை நித்திய திட்டப்படி கொடுக்கிறார்.

அவற்றைப் பயன் படுத்தி அவன் மனம் திரும்ப வேண்டும்.

அதற்குத் தான்  சுதந்திரம்.

அவன் மனம் திரும்பாவிட்டால் அதற்கு அவன்தான் பொறுப்பு.''

"பாவிகள் மனம் திரும்ப நாம் ஏன் வேண்ட வேண்டும்?"

"'நாம் வேண்டும் போது நமக்கு செவிமடுத்து பாவி மனம் திரும்ப அதிகமாக அருள் வரங்களை அள்ளிக் கொடுக்கிறார்.

அவற்றை ஏற்று அவன் மனம் திரும்ப வேண்டும். அதையும் மீறி அவன் பிடிவாதமாக இருந்தால் அதற்கு அவன் தான் பொறுப்பு."

''நமக்குக் கடந்த காலமும், எதிர்காலமும் தெரியாது. ஆனால் கடவுளுக்கு அனைவரும் ஒரே நோக்கில் தெரிவதால் கடவுளைப் பொறுத்தவரை அனைவரும் சம காலத்தவர் தானே."

""நமது பார்வையில் ஆதாமும், நாமும் ஆயிரக் கணக்கான ஆண்டு வித்தியாசத்தினர்.

ஆனால்  கடவுள் ஆதாமைப் பார்க்கும் போது நம்மையும் பார்த்திருப்பார்.

உலகில் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப் போகின்ற அத்தனை கோடி மக்களும் ஒரே நோக்கில் இறைவன் பார்வையில்.  

நித்தியத்தில் கால இடைவெளியே கிடையாது.

ஒரு முறை ஐந்து காய வரம் பெற்ற புனித லியோ தன் இறந்து போன உறவினருடைய நல்ல மரணத்துக்காக வேண்டினாராம்.
அதற்கு அவர் கொடுத்த விளக்கம்,  தனது செபம் கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

அவர் உறவினர் வாழ்ந்தது காலத்தில். ஆகவே அவரது செபத்தின் பலனைக் கடவுள் அவருக்குக் கொடுத்திருப்பார்.

ஆகவே எனது இன்றைய செபத்தின் காரணமாக எனது உறவினர் நல்ல மரணம் அடைந்திருப்பார் என்றார்."

"அப்போ நாம் யாருக்காக வேண்டுமானாலும் செபிக்கலாம்.

கடந்த கால, நிகழ்கால ஆட்களுக்காகவும் செபிக்கலாம்.

எதிர்கால ஆட்கள் நமக்குத் தெரியாது. எதிர்காலத்துக்காக செபிக்கலாம்.

சரியா?"

"'சரி.  நம்மைப் போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும் என்பதன் பொருள் 
அதுதானே.

நாம் மட்டும் மோட்சத்துக்குப் போனால் போதுமா? மனிதர்கள் அனைவரும் நம்முடன் வர வேண்டாமா?''

"தாத்தா, கடவுளால் முடியாதது ஒன்றுமில்லை தானே."

"'அதில் என்ன சந்தேகம்."

"அவர் நினைத்தால் அனைவருடைய அனைத்துப் பாவங்களையும் யாரும் கேட்காமலேயே மன்னித்து, அவரையும் மோட்சத்துக்குக் கூட்டிக் கொண்டு போகலாமல்லவா?"

"'அவர் நினைத்தால் அனைவரையும் நேரடியாக மோட்சத்திலேயே படைத்திருக்கலாம்.

ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லை.

அவர் தரும் அருள் உதவியோடு நாமே மோட்சத்தை சம்பாதிக்க வேண்டும் என்று தான் அவர் ஆசைப் படுகிறார்.

படைத்தவரின் விருப்பப்படி நடப்பதுதான் நமது கடமை.

சந்தேகம் தீர்ந்ததா?"

''அதிபுத்திசாலிக்கும், அடிமுட்டளுக்கும் சந்தேகம் வராது. சந்தேகம் வராவிட்டால் கல்வி கற்க முடியாது' என்று எங்கள் ஆசிரியர் சொல்வார்.

நான் அதி புத்திசாலியும் அல்ல, அடி முட்டாளும் அல்ல. 

தற்க ஆசைப் படுகிறேன்.

நீங்கள் ஆசிரியர். சந்தேகம் வரும் போது நானும் வருவேன்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment