அவர் அவர்களிடம், "வந்து பாருங்கள்;; "என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.
(அரு. 1:39)
திருமுழுக்கு அருளப்பர் அந்திரேயாவிடமும், மற்றொரு சீடரிடமும் இயேசுவைக் காண்பித்து, "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி" என்றார்.
உடனே அவர்கள் இருவரும் இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.
இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, "என்ன தேடுகிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார்.
அவர்கள், "ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்று கேட்டார்கள்.
அவர் அவர்களிடம், "வந்து பாருங்கள்;; "என்றார்.
அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள்.
அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.
இயேசுவோடு தொடர்புடைய எந்த நிகழ்வை நினைத்துப் பார்த்தாலும் அவர் சர்வமும் அறிந்த கடவுள் என்பது நினைவில் இருக்க வேண்டும்.
அப்போதுதான் அந்நிகழ்விலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் புரியும்.
இயேசுவின் முன்னோடி தனது சீடர்கள் இருவரிடமும் அவரைக் காண்பித்து விட்டார்.
ஆகவே இருவரும் இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள்.
அவர்கள் தன்னைப் பின் தொடர்வது இயேசுவுக்குத் தெரியும்.
அவர்கள் பின்தொடர்வதின் காரணமும் தெரியும்.
ஆனாலும் அவர் அவர்களை நோக்கி,
"என்ன தேடுகிறீர்கள்?" என்று கேட்டார்.
அவர்கள், "ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்று கேட்க,
அவர் அவர்களிடம், "வந்து பாருங்கள்;; "என்றார்.
உரையாடலில் இயேசு தனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக் கொள்ளவில்லை.
மனிதர்களோடு பேசும்போது அவர்களைப் போலவே பேசுகிறார்.
அதனால்தான் உரையாடல்
இயல்பாக இருக்கிறது.
அந்திரேயா அடுத்த மூன்று ஆண்டுகளும் இயேசுவோடு தங்க வேண்டியவர்.
அவர்கள் அவரைப் பற்றி அறிய வேண்டுமனால் அவரோடு அமர்ந்து மனம் விட்டுப் பேச வேண்டும்.
ஆகவேதான் தான் தங்கியிருந்த இடத்தைச் சொல்லாமல்
"வந்து பாருங்கள்." என்றார்.
தியானித்தல் என்றால் வெறுமனே நிகழ்வைப் பற்றி அறிவதல்ல.
வரலாற்றைப் படிப்பவர்கள் நிகழ்வுகளை மட்டும் பார்ப்பார்கள்.
தங்களை நிகழ்வுகளோடு இணைத்துப் பார்க்க மாட்டார்கள்.
நாம் நற் செய்தியைத் தியானிக்கும் போது தியானிக்கும் நிகழ்வு நம்மை எந்த அளவுக்குப் பாதிக்கப் போகிறது என்பதை சிந்திக்க வேண்டும்.
நாம் தேர்வு எழுத நற்செய்தியைப் படிக்கவில்லை, வாழ்வதற்காகத் தியானிக்கிறோம்.
"வந்து பாருங்கள்" என்கிறார் ஆண்டவர்.
ஆண்டவர் எங்கே இருக்கிறார்?
எங்கும் இருக்கிறார்.
முதலில் நம் உள்ளத்தில் இருக்கும் ஆண்டவரை நம் நினைவுக் கண்களால் உற்றுப் பார்க்க வேண்டும்.
நம் உள்ளம் ஒரு ஆலயம், உன்னதரின் இருப்பிடம்.
ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆண்டவரின் பிரசன்னத்தில் ஒவ்வொரு வினாடியும் வாழ வேண்டும்.
அவரை நினைத்துக் கொண்டு தான் உறங்க வேண்டும்,
விழிக்க வேண்டும்,
குளிக்க வேண்டும்,
உடுத்த வேண்டும்,
உண்ண வேண்டும்,
பணிமனை செல்ல வேண்டும்,
பணி புரிய வேண்டும்.
"வந்து விட்டேன், ஆண்டவரே, இனி உம்மை விட மாட்டேன்.
உம் அருகே நான் இருக்க,
என் அருகே நீர் இருக்க,
வேறெங்கே நான் செல்ல?" என்று நாம் கேட்டால்,
அவர் சொல்வார்,
"ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் நான் இருக்கிறேன். நான் இருக்கும் இடத்திற்கு வந்து என்னைப் பார்."
அவரால் படைக்கப்பட்ட அனைவரும் அவரது பிள்ளைகள்.
பிள்ளைகளில் நல்லவர்களும் இருக்கலாம். கெட்டவர்களும் இருக்கலாம்.
அனைவரின் உள்ளங்களிலும் அவர் இருக்கிறார்.
நல்லவர்கள் அவரை ஏற்றுக் கொண்டு அவர் வழி நடக்கிறார்கள்.
கெட்டவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளாமல் அவருக்கு எதிராக நடக்கிறார்கள்.
நமது குடும்பங்களில் கூட பெற்றோர் சொல் கேளாத பிள்ளைகளும் இருக்கிறார்களே.
ஆனால் பெற்றோர் அவர்களை வெறுப்பதில்லையே.
அதுபோல் தான் இயேசு தன்னை வெறுப்பவர்களையும் நேசிக்கிறார்.
அவர்கள் உள்ளங்களிலும் தங்கி அவர்களுக்கு அறிவுரை கூறுகிறார். அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை.
இயேசு அவர்களை நேசிப்பது போல நாமும் அவர்களை நேசிக்க வேண்டும்.
அனைவரும் நமக்கு அயலான்கள் தான்.
அனைவரிலும் ஆண்டவரைக் காண வேண்டும். அவர்களை நேசிக்கும்போது ஆண்டவரை நேசிக்கிறோம்.
அவர்களுக்கு உதவும் போது இயேசுவுக்கு உதவுகிறோம்.
யாராவது உண்ண உணவு கிடைக்காதவர்களாக இருந்தால், அவர்கள் நாத்திகர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு உணவு கொடுத்து உதவ வேண்டும்.
அவர்களுக்கு உதவும் போது அவர்களுள் வசிக்கும் இயேசுவுக்கே உதவுகிறோம்.
யாருக்கும் சுகமில்லையா?
அவர்களைச் சென்று பார்ப்போம்.
யாரும் சிறையில் உள்ளார்களா? அவர்களையும் சென்று பார்ப்போம்.
யாரைப் பார்த்தாலும் இயேசுவைத்தான் பார்க்கிறோம்.
வந்து பாருங்கள் என்று வேறு எங்கு அழைக்கிறார்?
இரவும் பகலும், எந்நேரமும் திவ்ய நற்கருணைப் பேழையில் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.
நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரைச் சென்று பார்ப்போம்.
அவரை ஆராதிப்போம்.
அவரோடு பேசுவோம்.
ஒரு விவசாயி வயலுக்குப் போகும் போதெல்லாம் கோவிலுக்குச் சென்று, மாடுகளை வெளியே கட்டிப் போட்டுவிட்டு,
உள்ளே சென்று ஐந்து நிமிடங்கள் திவ்ய நற்கருணைப் பேழையைப் பார்த்துக் கொண்டே நின்று விட்டு, மாடுகளை அவிழ்த்துக் கொண்டு போய்விடுவான்.
இதைத் தினமும் கவனித்த அவனுடைய பங்குத் தந்தை ஒரு நாள் அவனிடம்,
"கோவிலுக்குள் சென்று என்ன செபம் சொல்வீர்கள்?"
"சுவாமி, நான் எதுவும் சொல்ல மாட்டேன். கொஞ்ச நேரம் ஆண்டவரையே பார்த்துக் கொண்டிருப்பேன். அவர் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பார்.
எங்களுடைய உள்ளங்கள் பேசும்.
உள்ளங்கள் பேச மொழி தேவையில்லை. வயலில் வேலை செய்யும் போதும் இயேசு என் உள்ளத்தில் இருப்பார்."
இதுதான் இயேசுவைச் சென்று பார்ப்பது."
"வேறு எங்கும் இயேசு வரச் சொல்லவில்லையா?'"
'"மோட்சத்துக்கு வந்து பாருங்கள் என்றும் சொல்கிறார்.
காலம் வரும் போது அங்கு சென்று பார்ப்போம்.
நமது வாழ்க்கைப் பயணமே அதற்காகத் தானே!"
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment