வியாழன் 16-01-25
உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு, கடின உள்ளத்தினர் ஆகாதவாறு, ஒவ்வொரு நாளும் "இன்றே" என எண்ணி, நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள்.
(எபிரேயர் 3:13)
எபிரேயர்கள் யூதர்கள். அவர்களது விசுவாச வாழ்க்கையில் ஏதோ பிரச்சினைகள் ஏற்பட்டிருக்க வேண்டும்.
அதனால் தான் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டு வந்த இஸ்ரேலர்கள்
பாலைவன பயணத்தின் போது கடவுளுக்கு எதிராக செய்த கிளர்ச்சிகளை ஞாபகப்படுத்தி
"நீங்கள் அப்படியே நடந்து கொள்ளாதீர்கள்'' என்று புனித சின்னப்பர் அறிவுரை கூறுகிறார்.
கடவுளே இஸ்ரேலர்களை எகிப்திலிருந்து வழிநடத்தி வந்தார்.
சரியாக உணவும் தண்ணீரும் கிடைக்கவில்லை என்று அவர்கள் கிளர்ச்சி செய்தார்கள்.
விசுவாச வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும். அவைகளுக்கு கடவுளுக்கு ஏற்ற வகையில் தீர்வு காண வேண்டுமே தவிர பாவத்திற்கு இடம் கொடுத்து விடக்கூடாது.
"பாலை நிலத்தில் சோதனை நாளன்று கிளர்ச்சியின்போது இருந்ததுபோல, உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
அங்கே உங்கள் மூதாதையர் நாற்பது ஆண்டுகள் என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்."
(எபிரேயர் 3:8,9)
இஸ்ரேலர்கள் நடந்து கொண்டது போல கிறிஸ்தவர்கள் நடக்கக் கூடாது என்று அறிவுரை கூறுகிறார்.
'பாவத்தால் ஏமாற்றப்பட்டு, கடின உள்ளத்தினர் ஆகாதவாறு' பார்த்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் ஒருவருக்கு ஒருவர் அறிவுரை கூறுங்கள்." என்கிறார்.
"ஒவ்வொரு நாளும் "இன்றே" என எண்ணச் சொல்கிறார்."
"அறிவுரைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும், நாளைக்கு என்று தள்ளிப் போடக்கூடாது.'' என்கிறார்.
'இன்றே' என்ற ஒற்றைச் சொல்லில் பொதிந்து கிடக்கும் பொருளைத் தியானிப்போம்.
உடல் நலம் இல்லாத காரணத்தால் மருத்துவரைப் பார்க்கிறோம்.
மருத்துவர் பரிசோதித்துப் பார்த்து விட்டு என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவ ஆலோசனை கூறுகிறார்.
உடல் நலம் பெற வேண்டுமானால் அவர் கூறுவதை உடனடியாகச் செய்ய வேண்டும்.
"இப்போது வேறு வேலை இருக்கிறது. சில நாட்கள் கழித்துப் பார்த்துக் கொள்ளலாம்" என்று நாளைத் தள்ளிப் போட்டால் சுகமாக முடியாத நிலைக்கு நோய் முற்றிவிடும்.
பாவ நிலையில் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
சுவாமியார் பிரசங்கத்தில் பாவ நிலையில் உள்ளவர்கள் உடனடியாக நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து, பாவ மன்னிப்பு பெற்று, புண்ணிய வாழ்வை ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்கிறார்.
நாம் செய்வதை 'இன்றே' செய்ய வேண்டும்.
நமக்கு நாளை வருமோ, வராதோ தெரியாது.
நாளை வருமா என்று நாளைக்கு தான் தெரியும்.
தெரியாத நாளுக்காகக் காத்திருக்காமல் கண் முன் இருக்கும் நாளைக் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
முன்பு சினிமா தியேட்டர்களில் 'இன்றே இப்படம் கடைசி' என்று போஸ்டர் ஒட்டியிருந்தால் அன்று முதல் நாள் போல கூட்டம் இருக்கும்.
'இன்று கடைசி' என்ற சொற்றொடருக்கு அவ்வளவு வலிமை.
நமது வாழ்வில் ஆரம்ப நாள் (Birthday) எது என்று கேட்டால் சொல்லி விடுவோம்.
இறுதி நாள் எது என்று கேட்டால் நமக்குத் தெரியாது.
இறுதி நாளில் சொல்ல இருக்க மாட்டோம்.
இன்றே இறுதி எண்ணி செயல்பட வேண்டும்.
இன்று இறுதி என உறுதியாகத் தெரிந்தால் விண்ணகப் பயணத்தில் முழுக் கவனத்தையும் செலுத்துவோம்.
ஒவ்வொரு நாளையும் இறுதி நாள் என்று எண்ணி வாழ்ந்தால் பாவம் செய்ய மாட்டோம்.
செய்த பாவத்துக்குப் மன்னிப்புப் பெற்று விடுவோம்.
விண்ணக வாசல் திறந்த உடனே உள்ளே நுழைய ஒவ்வொரு
வினாடியையும் இறுதி வினாடியாக எண்ணி எதிர் பார்த்த நிலையில் இருப்போம்.
திருமணத் தம்பதியர் தாலி கட்டும் நேரத்தை எவ்வளவு ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களோ அதை விட அதிக ஆர்வத்தோடு விண்ணக மணாழனைக் காணத் தயாராக இருப்போம்.
இன்றே இறுதி என்று எண்ணி வாழ்ந்தால் இறுதி வினாடி மிகவும் மார்ச்சிகரமானதாக இருக்கும்.
ஏனெனில் மண்ணக வாழ்வின் இறுதி தான் விண்ணக வாழ்வின் ஆரம்பம்.
ஆரம்ப மகிழ்ச்சி இறுதியிலேயே ஆரம்பித்து விடும். ,
ஆரம்பமும் முடிவும் இல்லாத கடவுள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாரோ அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்போம் இறுதியில் ஆரம்பத்தைப் பார்த்தால்.
''ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள் '
(மத்தேயு நற்செய்தி 5:48)
என்ற இறைவாக்கு நம்மில் நிறைவேறும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment