Monday, January 6, 2025

புதன் 08-01-25நமது அயலான் யார் என்ற கேள்விக்கு நல்ல சமாரியன் உவமையில் இயேசு விடை தருகிறார்.

புதன் 08-01-25

நமது அயலான் யார் என்ற கேள்விக்கு நல்ல சமாரியன் உவமையில் இயேசு விடை தருகிறார்.

யார் இந்த சமாரியர்கள்?

யாக்கோபின் பன்னிரு புதல்வரில் அவருடைய செல்லப் பிள்ளையான யோசப்பின் மக்களான எப்ராய்ம், மனேசா ஆகியோரின் வழிவந்தவர்கள்.

அவர்களும் இஸ்ரேலர்கள் தான்.

அசீரியப் படையெடுப்பின் போது அவர்கள் அசீரியர்களோடு கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் அவர்கள் கலப்பின
இஸ்ரேலர்களாக மாறிவிட்டார்கள்.

கறக்கப் பட்ட சுத்தமான பாலோடு தண்ணீர் சேர்க்கப் பட்டால் எப்படி தரம் குறைந்ததாக மாறிவிடுகிறதோ 

அதே போல அவர்கள்  சுத்தமான இஸ்ரேலர்களுக்கு தரம் குறைந்தவர்களாகக் காணப்பட்டார்கள்.

கலிலேயாவிலும், யூதேயாவிலும் தூய இஸ்ரேலர்களும்,

சமாரியாவில் கலப்பின இஸ்ரேலர்களும் வாழ்ந்து வந்தார்கள்.

சமாரியா கலிலேயாவுக்கும், யூதேயாவுக்கும் மத்தியில் உள்ளது.


கலிலேயாவிலிருந்து யூதேயாவுக்கு வரும் யூதர்கள் சமாரியா வழியாக வருவதில்லை.

யூதர்களும், சமாரியர்களும் ஒருவரையொருவர் வெறுத்தனர்.

நல்ல சமாரியன் உவமையில் ஒருவர் எருசலேமிலிருந்து எரிக்கோவுக்குப் பயணிக்கிறார்.

இதில் ஆண்டவர் நமக்குச் சொல்ல விரும்பும் ஒரு ஆன்மீகச் செய்தி இருக்கிறது.

எருசலேம் ஆண்டவரின் ஆலயம் இருக்கும் நகரம். அது இறை வழிபாட்டு நகரம்.

எரிக்கோ ஒரு வியாபார நகரம். உலக வாழ்வு சார்பான நகரம்.

எருசலேமிருந்து எரிக்கோவுக்குச் செல்கிறார் என்றால் ஆன்மீக வாழ்வை விட்டு லௌகீக வாழ்வை நோக்கிப் பயணிக்கிறார் என்று பொருள்.

பயணத்தில் கள்வர் கையில் அகப்படுகிறார்.

அதாவது கட்டத்தில் மாட்டிக் கொள்கிறார்.

அவ்வழியே சென்ற அவர் இனத்தவர்களான குருவும், லேவியரும் அவருக்கு உதவி செய்யவில்லை.

ஆனால் அவரால் வெறுக்கப் படுகின்ற சமாரியர் அவருக்கு உதவுகிறார்.

இந்த உவமையை தியானித்தால் பின்வரும் எண்ணங்கள் மனதில் எழும்.

1. நாம் கடவுளை விட்டுப் பிரிந்து போகும்போது நாம் திருந்துவதற்காக கடவுள் கட்டங்களை அனுமதிக்கிறார்.

2. பிறரின் கட்டங்களின் போது பார்த்தும் பார்க்காதது போல் போவது தவறு.

3. சமாரியர் தன்னை வெறுக்கும் யூதருக்கு உதவி செய்கிறார். அப்படி உதவி செய்பவர் தான் உண்மையான அயலான்.

மற்றவர்கள் கடமையைச் செய்யாத அயலான்கள். எழுத முடியாத பேனா 
அப்பெயருக்கு அருகதை அற்றது.

4. நாம் வேண்டியவர், வேண்டாதவர் எனப் பார்க்காமல் உதவி தேவைப் படுபவர்களுக்கு உதவ வேண்டும்.

5. உதவி செய்தவர் பிரதிபலன் எதிர்பார்க்கவில்லை. இன்னும் உதவி செய்வேன் என்கிறார்.

"மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, "இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" என்றார்." 
(லூக்கா நற்செய்தி 10:35)

6.பாவிகளாகிய நம்மை மீட்கப் பரிசுத்தாராகிய இறைவன் விண்ணிலிருந்து மண்ணுக்கு வரவில்லையா?

நாமும் அவரைப் பின்பற்றி இருக்கின்ற நாம் இல்லாதோருக்கு உதவ வேண்டாமா?

தொடர்ந்து தியானிக்கும் போது இந்த எண்ணங்களைப் பிரதிபலிக்கும் சில பைபிள் நிகழ்வுகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

இயேசுவின் குழந்தைப் பருவத்தின் போது அவரது நாட்டைச் சேராத கீழ்த் திசை ஞானிகள் அவரை வழிபட நாடு விட்டு நாடு வந்தார்கள்.

ஆனால் அவர் பிறந்த நாட்டை ஆண்ட ஏரோது அவரைக் கொல்லத் தேடினான்.

இயேசு ஏரோதுவைப் பழி வாங்கவில்லை.

அவராக எகிப்துக்குச் சென்று விட்டார்.

யூதர்களின் மெசியாவான இயேசு யூதர் அல்லாத மக்களுக்கும் நற்செய்தியை அறிவித்ததன் மூலம் தான் அனைவருக்கும் ஆண்டவர் என்பதை நிரூபித்தார்.


"ஆகவே கலிலேயா, தெக்கப்பொலி, எருசலேம், யூதேயா, யோர்தானுக்கு அக்கரைப் பகுதி ஆகிய இடங்களிலிருந்து வந்த மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர் "
(மத்தேயு நற்செய்தி 4:25)

தெக்கப்பொலி யூதர் அல்லாத மக்கள் வாழ்ந்த பகுதி. அங்கிருந்தும் பெருந்திரளான மக்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள். 

அவர்களுக்கும் இயேசு நற்செய்தியை அறிவித்தார். அங்குள்ள நோயாளிகளையும் குணமாக்கினார்.

இயேசு குணமாக்கிய பத்து தொழு நோயாளிகளுள் ஒருவன் ஒரு சமாரியன்.

அவன் தான் வந்து இயேசுவுக்கு நன்றி கூறினான்.

ஒரு கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த சமாரியப் பெண்மணிக்கும் இயேசு நற்செய்தியை அறிவித்தார்.

அப்பெண்மணி தான் பெற்ற செய்தியைத் தன் நாட்டாருக்கும் அறிவித்தாள்.

புனித சின்னப்பருக்கு முன்பே
பிற இனத்தவருக்கான அப்போஸ்தலியாகச் செயல் பட்டாள்.

ஒரு முறை சமாரியா வழியே பயணிக்க இயேசுவுக்கு அங்குள்ளோர் அனுமதி மறுத்தனர்.

அப்போது அருளப்பர் அவரை அனுமதியாத மக்கள்மீது நெருப்பை வர விடுவோமா என்று கேட்டார். இயேசு அவரைக் கடிந்து கொண்டார்.

இயேசு அம்மக்களையும் நேசித்தார்.

ஒரு முறை தான் வளர்ந்த நசரேத் ஊர் மக்களுக்கு இயேசு நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த போது

அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். 

ஆனால் இயேசு கோபப்படாமல் அவர்களை விட்டு நடந்து போய் விட்டார்.

இயேசு நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் யூதர் அல்லாத ரோமைப் படை வீரனாகிய செந்தூரியனின் சுகமில்லாதிருந்த பணியாளைத் தன் வார்த்தையால் குணமாக்கினார்.



இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது அவர் சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ரோமைச் செந்தூரியன் அவர் இறந்து விட்டதை உறுதி செய்ய அவர் விலாவை ஈட்டியால் குத்தினான்.

வெளிவந்த இரத்தத்தின் ஒரு துளி இரத்தம் சுகமில்லாதிருந்த அவனுடைய கண்ணில் விழுந்தது. 

கண் சுகமாயிற்று.

தான் கொலை செய்யப்பட தலைமை வகித்தவனையே இயேசு தான் இறந்த பின்னும் ஒரு புதுமை செய்து குணமாக்கினார்.

"இவர் உண்மையாகவே இறைமகன்" என்று அவன் சாட்சி கூறினான்.

அவர்தான் பிற்காலத்தில் நற்செய்திப் பணிக்காக உழைத்த புனித லோஞ்சினுஸ்.(St. Longinus.)

இயேசு தனது இரத்த உறவினர்களான யூதர்களை மட்டுமல்ல, தன்னால் படைக்கப்பட்ட அனைத்து மக்களையும் நேசிக்கிறார்.

யூதர்களுக்கு மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருக்கும் அவர் மீட்பர்.

அவரைக் கொலை செய்தவர்களுக்கும் அவர்தான் மீட்பர்.

அவருக்கு மரணத் தீர்ப்பளித்த பிலாத்துவின் மனைவி கிறிஸ்தவளாக மனம் திரும்பினாள். அவள் புனித சின்னப்பரின் சீடத்தி.

2 திமொத்தேயு 4:21 வில் வரும் கிளாதியா பிலாத்தின் மனைவி.

பிலாத்து மனம் திரும்பியது மட்டுமல்ல, வேத சாட்சியாகவும் மரித்தார் என்று வரலாறு கூறுகிறது.

இறுதித் தீர்ப்பின் போது தான் நல்லவர்களைப் பார்த்து,

 "நான் அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்"
 
என்று சொல்லப் போவதாக இயேசுவே கூறுகிறார்.
(மத்தேயு நற்செய்தி 25:35)

நம்மவர்களை நேசிப்பது போலவே அன்னியர்களையும் நேசிக்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார்.

தான் குழந்தையாக இருந்த போதே யூதர் அல்லாத மக்கள் வாழ்ந்த,

ஒரு காலத்தில் யூதர்களை அடிமைகளாக நடத்திய

எகிப்துக்கு இயேசு பயணித்தார்.

வாழ்க்கையின் 33 ஆண்டுகளில் முதல் மூன்று ஆண்டுகள் இயேசு வாழ்ந்தது எகிப்தில்.

இதுவரை வாசித்ததிலிருந்து ஒன்று புரிந்திருக்கும்,

ஒரு வசனத்தைத் தியானிக்கும்போது அதோடு தொடர்புடைய  அத்தனை வசனங்களும் ஞாபகத்துக்கு வரும்.

கிறிஸ்துவையும், கிறிஸ்தவர்களையும் நேசிப்பது போல கிறிஸ்துவின் விரோதிகளையும் நேசிப்போம்.

நம்மைப் பகைப்பவர்களை நேசிப்பதில் தான் உண்மையான கிறிஸ்தவம் அடங்கியிருக்கிறது.

கடவுள் அனைவரையும் நேசிக்கிறார்.

நாமும் அனைவரையும் நேசிப்போம்.

லூர்து செல்வம்.


.

No comments:

Post a Comment