ஞாயிறு 26
"உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்."
(மாற்கு நற்செய்தி 16:15)
(தொடர்ச்சி)
"'பேரப்புள்ள, கேள்வியைத் திரும்பச் சொல்லு."
"அவரே ஏழை. மற்றவர்கள் கொடுத்ததைத்தான் சாப்பிட்டார். அவர் எப்படி மற்றவர்களுக்குக் கொடுத்துப் போதித்தார்?"
"' முதலில் ஏழை என்ற வார்த்தையை எடுத்துக் கொள்வோம்.
ஏழை என்றால் யார்?"
"எதுவும் இல்லாதவன்."
"'எதுவும் இல்லாதவர்களெல்லாம் ஏழைகள் அல்ல. கையில் ஒரு பைசா இருக்காது.
ஆனால் மனதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு ஆசைப் பட்டுக் கொண்டிருப்பான்.
அவன் எதுவும் இல்லாத செல்வந்தன்.
இயேசு ஏழை என்ற வார்த்தையை உலகப் பொருட்கள் மீது பற்றில்லாதவர் என்ற பொருளில் தான் பயன்படுத்துகிறார்.
ஒருவன் மாதம் ஐந்து லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறான் என்று வைத்துக்கொள்வோம்.
அவனுக்கு அவன் வாங்கும் சம்பளத்தின் மீது பற்று இருந்தால் அதை யாருக்கும் கொடுக்காமல் தனக்காக மட்டும்
பயன்படுத்துவான்.
பற்று இல்லாதவன் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காகவும் பயன்படுத்துவான்.
பற்று இல்லாதவன் என்ற
பொருளில் தான் இயேசு ஏழை எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.
இப்போ சொல்லு, இயேசு எந்த அர்த்தத்தில் ஏழை?'
"தாத்தா, இயேசு கடவுள். நாம் வாழும் பிரபஞ்சத்தைப் படைத்தவர் அவர்தான்.
அப்படியானால் நாம் வாழும் உலகமும் அதில் உள்ள அத்தனை பொருட்களுக்கும் உரிமையாளர் அவர்தான்.
ஆனால் அவர் அவற்றை தான் பயன்படுத்துவதற்காகப் படைக்கவில்லை.
அவரால் படைக்கப்பட்ட நாம் பயன்படுத்துவதற்காக அவற்றை படைத்தார்.
நாம் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் அவர் உலகப் பற்றற்ற ஏழை.
நம் மீது அவர் கொண்டுள்ள அளவு கடந்த அன்பின் காரணமாகத் தனக்கு உரியதை நாம் பயன்படுத்த நமக்கு தந்திருக்கிறார்."
'"இப்போ சொல்லு, இயேசு கொடுத்தாரா?"
"கொடுத்தார், கொடுக்கிறார், கொடுப்பார்.
அவர் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமல்ல, அவருக்கு முன்னால் வாழ்ந்தவர்களுக்கும்
உயிர் கொடுத்தவர் அவர், உணவு கொடுத்தவர் அவர், வாழ இருப்பிடம் கொடுத்தவர் அவர்.
இன்றும் நமக்கும் கொடுத்துக் கொண்டிருப்பவர் அவர் தான்.
அவர் நம்மைப் பார்த்து "கொடுங்கள்" என்று சொல்லும் போது அவர் நமக்கு கொடுத்ததைத் தான் மற்றவர்களுக்குக் கொடுக்கச் சொல்கிறார்.
அவர் சென்ற இடம் எல்லாம் மக்களுக்கு நற்செய்தியைக் கொடுத்தார்,
நோயாளிகளுக்கு சுகம் கொடுத்தார்,
பாவிகளுக்கு மன்னிப்புக் கொடுத்தார்,
இவ்வுலக வாழ்வின் இறுதியில் சிலுவையில் தொங்கிய போது நமது பாவங்களுக்கு பரிகாரமாக தன் உயிரையே விண்ணகத்தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுத்தார்.
நித்திய காலமும் கொடுத்தே வாழ்கிறவர், மனிதனாகப் பிறந்தது கொடுப்பதற்காகத்தான்.
முக்கியமாக பாவ மன்னிப்பைக் கொடுத்து, அதன் விளைவாக மீட்பைக் கொடுப்பதற்காக."
"'திருக் குடும்பத்தில் வாழ்ந்து கொண்டிருந்த போது தச்சு வேலை செய்து உழைத்து தான் சாப்பிட்டார்.
ஆனால் பொது வாழ்வின் போது அப்பங்களைப் பலுகச் செய்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு கொடுத்தார்.
இன்றும் நமக்கு அவரது உடலையும் இரத்தத்தையும் உணவாகத் தந்து கொண்டிருக்கிறார்.
அவர் தந்ததையும், தருவதையும், தரப்போவதையும் சொல்லிக் கொண்டே போனால் சொல்லி முடிக்க நமது வாழ்வு பற்றாது."
"இப்போ புரிகிறது, தாத்தா, இயேசு என்றாலே கொடுப்பவர் தான்.
அப்படியானால் அவரைப் பின் பற்றும் நாமும் கொடுப்பவர் களாகத்தானே வாழ வேண்டும்!"
"' ஆமா. முதலில் அனைவருக்கும் அன்பைக் கொடுப்போம்.
கட்டப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கொடுப்போம்.
உணவு இல்லாதவர்களுக்கு உணவு கொடுப்போம்.
உடை இல்லாதவர்களுக்கு உடை கொடுப்போம்.
நம்மிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வோம்."
"நம்மிடம் இல்லையென்றால்?"
"' இருக்கிற மற்றவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்வார்கள்.
எல்லாம் இருக்கிற கடவுள் மனிதனாகப் பிறந்த போது பிறக்கக் கூட இடம் இல்லாதவராய்த்தான் இருந்தார்.
யாருக்கோ சொந்தமான மாட்டுத் தொழுவம் கிடைத்தது. அங்கே பிறந்தார்.
அவர் இறந்த போது யோசேப்பு அரிமத்தியா தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார்.
(மத்தேயு நற்செய்தி 27:60)"
" ஆக இயேசு பிறக்கக் கிடைத்தது மற்றவர்களுடைய மாட்டுத் தொழுவம்.
அடக்கம் செய்யப்பட கிடைத்தது மற்ற ஒருவருக்காக வெட்டப்பட்ட கல்லறை."
"'இதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம்?"
"பகிர்ந்து வாழ்பவன் தான் உண்மையான கிறிஸ்தவன்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment