திங்கள் 06-01-25
3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.
(மத்தேயு நற்செய்தி 2:4)
நமது காலத்தில் சொக்காரன் சண்டைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சொக்காரர்கள் என்றால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் .
ஏரோது மன்னனுக்கும் இயேசுவுக்கும் இருந்த உறவு சொக்காரன் உறவு தான்.
இருவரும் அபிரகாமின் வழி வந்தவர்கள் .
அபிரகாமின் மகன் ஈசாக்கு.
ஈசாக்கின் புதல்வர்கள் ஏசா , யாக்கோபு .
ஏசாவின் வம்சத்தவர்கள் ஏதோமியர்கள் .
ஏசாவின் வம்சத்தில் பிறந்தவர் ஏரோது.
யாக்கோபின் வம்சத்தினர் இஸ்ரேலர்கள்.
யாக்கோபுக்கு பன்னிரு புதல்வர்கள்.
அவர்களில் ஒருவரான யூதாவின் வழிமரபினர் இயேசு.
ஆக, ஏரோதுவும், இயேசுவும் அபிரகாமின் குடும்பத்தினர், சொக்காரர்கள்.
"அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்.
(லூக்கா நற்செய்தி 1:33)
இது கபிரியேல் தூதர் மூலமாக விண்ணகத் தந்தையிடமிருந்து வந்த வாழ்த்துச் செய்தி.
"இயேசு என்றென்றும் ஆட்சி செலுத்துவார்."
இயேசு அரசர்தான், ஆனால் ஆன்மீக அரசர்.
2 2 யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் என்றார்கள்.
(மத்தேயு நற்செய்தி 2:3)
என்ற ஞாளிகளின் வார்த்தைகளைத் தவறாகப் புரிந்து கொண்டு,
தனக்குப் போட்டியாகப் பிறந்திருக்கும் அரசரை நினைத்து கலங்கினான்.
அவன் கலங்கியதற்குக் காரணம் அவனது தவறான புரிதல் தான்.
விளைவு?
ஆயிரக்கணக்கான சிசுக்கள் கொலை செய்யப்பட்டு மரணம்.
ஏரோது மன்னனின் வீரர்கள் ஒரு சிசுவைக் கொல்லும் முயற்சியில் அதன் வயதான தந்தையைக் கொன்றது ஒரு பரிதாபம்.
திருமுழுக்கு அருளப்பர் அப்போது இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தை.
குழந்தைகள் கொல்லப் படுவதைப் பார்த்தவுடன் எலிசபெத் தன் குழந்தையைக் காப்பாற்றுவதற்காக அருளப்பரைக் காட்டுக்கு எடுத்துச் சென்று விட்டாள்.
அந்த உண்மையைச் சொல்ல மறுத்ததற்காக வீரர்கள் அவரின் தந்தை சக்கரியாசைக் கொன்றுவிட்டார்கள்.
அருளப்பர் காட்டிலேயே வளர்ந்தார்.
ஏரோது ஒரு பதவி வெறியன்.
தனது அரச பதவியைக் காப்பாற்றத் தன் மகன்களையே கொன்றுவிட்டதாக வரலாறு கூறுகிறது.
அது மட்டுமல்ல, அவன் ஒரு சந்தேகப் பேர்வழி.
தனது பதவிக்கு ஆபத்து வர யாராவது காரணமாக இருப்பார் எனச் சந்தேகப்பட்டால் உடனே அவனைக் கொன்றுவிடுவான்.
அதற்காக மகன்களையே கொன்ற மாபாவி.
இப்போ எதற்காக இந்த
விபரமெல்லாம்?
ஏரோது உலக மீட்பருக்கு எதிராகச் செயல்பட்டவன்.
அவனது பண்புகள் நமது மீட்புக்கு எதிரானவை.
நமது மீட்பரிடமிருந்து பாடம் கற்றுக் கொள்வது போல அவரின் எதிரியிடமிருந்தும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
எப்படி வாழ வேண்டும் என்பதை இயேசுவிடமிருந்தும்,
எப்படி வாழக்கூடாது என்பதை அவருடைய எதிரியிடமிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டும்.
மாசில்லாக் குழந்தைகளின் மரணத்துக்குக் காரணமான ஏரோதுவிடமிருந்தும் பாடம் கற்றுக் கொள்வோம்.
ஏரோது ரோமானிய படையில் பணியாற்றியவன்.
ரோமை அரசு அவனை யூதர்களின் அரசராக நியமித்தது.
அவன் நல்லவனாக இருந்திருந்தால் தன் இன மக்களின் விடுதலைக்காக பாடுபட்டிருக்க வேண்டும்.
ஆனால் அவன் தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தான்.
அதற்காக பல கொடூர செயல்களைச் செய்ததாக வரலாறு கூறுகிறது.
அதற்குக் காரணமான அவனது எதிர்மறைக் குணங்கள்:
அதிகார மோகம்,
சந்தேக நோய்,
கொடூரத்தன்மை,
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், கருணையின்மை, நேர்மையின்மை,
அதிகார மோகம் :
ஏரோதுவிட விடம் அளவுக்கு மீறிய அதிகார மோகம் இருந்தது.
தனது அதிகாரத்தைப் பாதுகாக்க என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருந்தார். . இதற்காக தனது சொந்த குடும்பத்தினரைக் கூட கொன்றார்.
நமக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தை கடமையாகக் கருத வேண்டும்.
அதிகாரத்தை நமது கடமையை நிறைவேற்றப் பயன்படுத்த வேண்டும். அதைத் தவறாக நிலை நிறுத்தப் பயன் படுத்தக் கூடாது.
சந்தேக நோய்.
மற்றவர்களை எதற்கெடுத்தாலும் சந்தேகப் படுகின்றவர்களால் மகிழ்ச்சியாக வாழ முடியாது.
வயசாகி ஆண்டு கொண்டிருக்கும் மன்னன் பிறந்த குழந்தை தனக்கு போட்டியாக வரும் என்று சந்தேகிப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்.
அவனது சந்தேகம் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பழி வாங்கியது.
சந்தேக நோயில் விழாதபடி நம்மை நாமே பாது காத்துக் கொள்வோம்.
கொடூரத்தன்மை காரணமாக
தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி,
பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.
கருணையே இல்லாத ஏரொதுவைப் போல நாம் வாழ கூடாது.
நமது உயிரை நாம் நேசிப்பது போல மற்றவர்களுடைய உயிரையும் நேசிக்க வேண்டும்.
ஏரோதுவிடம் நேர்மை இல்லை.
ஞானிகளிடம் தனது உண்மையான குணத்தை மறைத்து தானும் பிறந்திருக்கும் அரச குழந்தையை வணங்க
விரும்புவதாகச் சொன்னான்.
கொலைக் காரனிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது.
நாம் இறைவனின் பிள்ளைகள். ஏரோதுவிடம் காணப்பட்ட எந்த தீய குணத்துக்குள்ளும் நாம் விழுந்து விடாதபடி நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
ஏரோது தனது எதிரியாகக் கருதிய இயேசுவிடமிருந்து நாம் ஆன்மீக வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment