ஞாயிறு 05-01-25
ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை.
(அரு.1:10)
"உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்"
(அரு. 8:12)
இது நமது ஆண்டவரின் வாக்கு.
இருளில் உள்ள பொருளை யாராலும் பார்க்க முடியாது.
எந்தப் பொருள் மீது ஒளி படுகிறதோ அதைத்தான் பார்க்க முடியும்.
இருள் அறியாமைக்கு அடையாளம்.
ஒளி அறிவுடைமைக்கும், ஞானத்துக்கும் அடையாளம்.
கடவுள் முதலில் ஒளியைப் படைத்துவிட்டு தான் உலகின் மற்ற பொருட்களைப் படைத்தார்.
எந்தப் பொருளையும் பார்க்க வேண்டும் என்றாலும் அதைப் பற்றி ஆராய வேண்டும் என்றாலும் முதலில் ஒளி வேண்டும்.
ஆன்மீகம் சார்ந்த விடயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் இயேசுவாகிய ஒளி வேண்டும்.
இயேசுவின் ஒளி அவருடைய நற்செய்தியின் மூலமாகத் தான் பிரகாசிக்கிறது.
இயேசுவின் வார்த்தைகளை வாசித்துத் தியானிப்பவர்களுக்கு தான் விண்ணை நோக்கிய ஆன்மீகப்பாதை வெளிச்சம் உள்ளதாக இருக்கும்.
ஒளியாம் நற்செய்தியை அறியாதவர்கள் ஆன்மிக இருளில் பயணிக்க வேண்டியிருக்கும்.
இருளில் பயணித்தால் நோக்கத்தை அடைய முடியாது.
ஒளியான இயேசு உலகிற்கு வந்திருந்தாலும் அநேகர் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
அவரை அறியாதவர்களும், அறிந்தும் ஏற்றுக் கொள்ளாதவர்களும் அறியாமை என்னும் இருளில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கோவிலில் மின் விளக்கு எறிந்து கொண்டிருக்கலாம்.
ஆனால் அறியாமை என்னும் இருளில் வாழ்பவர்களுக்கு மின் விளக்கில் பீடம் தெரியும்,
.
குருவின் உருவில் நின்று கொண்டிருக்கும் இயேசு தெரிய மாட்டார்,
அப்பமும் ரசமும் தெரியும், அப்பரசக் குணங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசு தெரிய மாட்டார்.
இயேசுவின் ஒளியில் வாழாதவர்களுக்கு குருவானவருடைய பிரசங்கம் கேட்கும், பொருள் புரியாது.
இயேசுவின் ஒளியில் வாழ்பவர்களுக்கு துன்பங்கள் ஆசீர்வாதங்களாகத் தெரியும்.
இருளில் வாழ்பவர்களால் ஆசீர்வாதங்களை அனுபவிக்கத் தெரியாது.
இயேசுவாகிய ஒளியில் வாழ்பவர்களுக்கு தான் தங்கள் பார்வையில் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பது தெரியும்.
இருளில் வாழ்பவர்களுக்குத் தாங்கள் யார் என்பதே தெரியாது.
நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது.
(மத்தேயு நற்செய்தி 5:14)
என்ற இறை வாக்குக்கு ஏற்ப இயேசுவின் ஒளி நம்மில் பிரகாசிக் கட்டும்.
ஒளியில் நம்மைப் பார்ப்பவர்கள் நம்மில் வாழும் இயேசுவை அறியட்டும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment