சனி1
"அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?" என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.
(மாற்கு நற்செய்தி 4:38)
நாம் இயேசுவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் இயேசு சர்வ வல்லமை உள்ள கடவுள் என்ற நினைவு அடி மனதில் இருக்க வேண்டும்.
இவ்வுலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அவருக்கு நித்திய காலமாகத் தெரியும்.
அன்று சீடர்களோடு படகில் பயணிக்கப் போவது அவருக்கு நித்திய காலமாகத் தெரியும்.
அப்போது வீசிய புயலைப் பற்றி?
அவரின்றி அணுவும் அசையாது.
அப்போது புயல் வீச வேண்டும், தான் அப்போது நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்ற
திட்டத்தையும் நித்திய காலமாகப் போட்டவர் அவர் தான்.
எதற்காக அந்தத் திட்டம்?
தனது சீடர்களுக்குப் பாடம் கற்பிப்பதற்காக ஒரு சூழ்நிலையை உருவாக்கத்தான்.
ஆசிரியர் பாடம் நடத்த வகுப்புக்குள் போகு முன்பே பாடத் திட்டத்தை வகுத்து விடுவார்.
எந்த சூழ் நிலையில் பாடம் கற்றுக் கொடுத்தால் மாணவர்களுக்குப் புரியும் என்பதை உணர்ந்து,
அந்த சூழ் நிலையை உருவாக்கி பாடம் கற்பிப்பார்.
இயேசு ஒரு நல்லாசிரியர்.
நம்பிக்கை என்னும் பாடத்தை அவருடைய மாணவர்களாகிய சீடர்களுக்குப் போதிப்பதற்காக அவர் வகுத்த நித்திய காலத் திட்டம் தான் புயலும், தூக்கமும்.
சீடர்கள் சரியான பயந்தாங்கொள்ளிகள் என்று அவருக்குத் தெரியும்.
அவர்களது பயத்தைப் போக்கவும், நம்பிக்கையை ஏற்படுத்தவுமே இந்தத் திட்டம்.
அவர் திட்டப்படி புயல் வீசியது, அவர் தூங்கிக் கொண்டிருந்தார்.
சீடர்களும் கத்தினார்கள்,
"போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?"
அவர் எழுந்து காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி, "இரையாதே, அமைதியாயிரு" என்றார்.
காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.
பின் அவர் அவர்களை நோக்கி, "ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" என்று கேட்டார்.
அவர்கள் பேரச்சம் கொண்டு, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ!" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.
சீடர்களின் விசுவாசக்
குறைவைப் பாருங்கள்.
இயேசு மெசியா என்பதை ஏற்றுக் கொண்டு தான் அவரைப் பின்பற்றினார்கள்.
ஆனால் அவர் செய்த புதுமையைப் பார்த்து,
"காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ!" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்!
அவரைப் பின்பற்றியபோது விசுவாசத்தின் அடிப்படி நிலையில் தான் இருந்திருக்கிறார்கள்.
அவர்களை படிப் படியாக ஏற்றி உச்சப் படிக்குக் கொண்டு வரவேண்டும்.
அதற்கான பயிற்சி வகுப்புகளைத் தான் பொதுவாழ்வின் போது இயேசு நடத்தினார்.
அந்த வகுப்புகளில் கடல் புயலில் பயணமும் ஒன்று.
இந்தப் பயிற்சி அன்றைய சீடர்களுக்கு மட்டுமல்ல, இன்று அவரைப் பின்பற்றும் நமக்கும் சேர்த்து தான்.
நமது வாழ்க்கை அனுபவங்களைச் சிறிது சிந்தித்துப் பார்த்தால் இது புரியும்.
ஒவ்வொரு முறையும் விசுவாசப் பிரமாணம் சொல்லும் போதும் கடவுள் எல்லாம் வல்ல சர்வ வல்லவர் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால் நடை முறையில்?
சர்வ வல்லபக் கடவுளை நமது தந்தை என்று ஏற்றுக் கொள்ளும் நாம் வாழ்க்கையில் தந்தை நம்ப வேண்டிய அளவுக்கு நம்புகிறோமா?
தந்தையின் தோளில் அமர்ந்து பயணிக்கும் குழந்தை வழியில் எதிர்ப்படும் நாயைப் பார்த்துப் பயப்படுமா?
ஆனால் நாம் பயப்படுகிறோமே!
நாம் பயத்திலிருந்து விடுபட வேண்டுமானால் தந்தையோடு நெருக்கமாக இருக்க வேண்டும்.
ஆனால் வாயால் தந்தையே என்று சொன்னாலும் மனமார அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
நம்மை ஏற்றுக் கொள்ள வைப்பதற்காக நமக்கு நோய் நொடிகள் போன்ற துன்பங்களை அனுமதித்து விட்டு அவர் தூங்குவது போல் நடிக்கிறார்.
அவர் தூங்குவது போல் நடிப்பது நாம் அவரைத் தட்டி எழுப்ப வேண்டும் என்பதற்காகத்தான்.
தாங்க முடியாத துன்பம் வரும் போது தான் நாம் வேறு வழியில்லாமல் "விண்ணகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே" என்று உண்மையான பக்தியுடன் கூப்பிட ஆரம்பிக்கிறோம்.
நமது விசுவாசத்தை அதிகப் படுத்தும்படி வேண்ட ஆரம்பிக்கிறோம்.
செப நேரத்தை அதிகரிக்கிறோம்.
செபம் அதிகமாக அதிகமாக விசுவாசம் அதிகரிக்கிறது.
விசுவாசம் உறுதிப்பட்டவுடன் துன்பமும் நீங்குகிறது.
துன்ப வேளையில் இறைவனை நெருங்க வேண்டும் என்ற பாடத்தை அனுபவம் மூலம் கற்கிறோம்.
துன்ப அனுபவங்களின் போது நமது விசுவாசமும் அதிகரிக்கிறது.
விசுவாசம் அதிகரிக்க அதிகரிக்க பாவங்கள் குறையும், புண்ணியங்கள் அதிகமாகும்.
நமது மீட்பும் உறுதியாகும்.
ஆண்டவர் புயலை அனுமதித்து விட்டுத் தூங்குவது நாம் அவரை எழுப்ப வேண்டும் என்பதற்காகத்தான்.
புத்தகம் மூலம் கற்கும் கல்வியை விட அனுபவம் மூலம் கற்கும் கல்வி வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
நாம் துன்ப அனுபவங்கள் மூலம் பெறும் விசுவாசம் நமது ஆன்மீக மீட்புக்கு உதவிகரமாக இருக்கும்.
நமது வாழ்க்கையை முற்றிலும் இறைவன் கையில் ஒப்படைத்து விடுவாேம்.
இறைவன் கையில் இருக்கும் போது நாம் எதற்கும் பயப்படத் தேவையில்லை.
"சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்."
(லூக்கா நற்செய்தி 12:32)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment