Thursday, January 9, 2025

சனி11-01-25 "ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" (லூக்கா நற்செய்தி 5:12)

சனி11-01-25
 "ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" 
(லூக்கா நற்செய்தி 5:12)

 தொழுநோயாளி ஒருவர் இயேசுவின் காலில் விழுந்து,

 "ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என மன்றாடுகிறார். 


இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, 

"நான் விரும்புகிறேன்" உமது நோய் நீங்குக!" என்கிறார். 

உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்குகிறது.


இயேசு அவரிடம், "இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும்."
என்று கட்டளையிடுகிறார். 


நோயாளி, "என்னைக் குணமாக்கும்." என்று வேண்டவில்லை.

"உம்மால் குணமாக்க முடியும்" என்று தான் சொல்கிறான்.

செபத்தின் அடிப்படையைக் கவனிக்க வேண்டும்.

கோரிக்கைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட இயேசுவின் வல்லமையை ஏற்றுக் கொள்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறான்.

இறைவனோடு நமக்கு இருக்க வேண்டிய உறவின் அடிப்படையே அதுதான்.

"இறைவா, நான் உமது அடிமை. நீர சர்வ வல்லவர் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்."

சர்வ வல்லப கடவுளிடம் நம்மை ஒப்புக் கொடுத்தாலே போதும்.

நாம் அவருக்கு உரியவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் நமது கடமை.

அவருக்கு உரியதை எப்படி கவனித்துக் கொள்வது என்று அவருக்குத் தெரியும்.

அவருக்கு நாம் ஆலோசனை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

நமக்கு என்ன வேண்டும் என்று நமக்குத் தெரிவதை விட கடவுளுக்கு நன்றாகத் தெரியும்.

நாம் செய்ய வேண்டியது எல்லாம் அவரது அன்பை முழுமையாக அனுபவிப்பதுதான்.

அன்பை அனுபவிக்கத்தான் அதை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

இறைவனின் அன்பில் வாழ்வது தான் வாழ்க்கை.

''இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்."

தான் அவனைக் குணமாக்கியதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கட்டளையிடுகிறார்.

ஏன்?

மூன்று ஆண்டுகள் வாழ்ந்த பொது வாழ்வில் அவர் சென்ற இடமெல்லாம் நோயாளிகளைக் குணமாக்கினார்.

ஆனால் அதை யாரிடமும் சொல்லக் கூடாது என்றார்.

ஏன் என்பதற்கான விடையைத் தேடினால் அதை "மெசியானிய இரகசியம்" (Messianic secret) என்கிறார்கள்.

 இரகசியம் என்றாலே அது ஒருவருக்கு மட்டும் தான் தெரிந்திருக்க வேண்டும்.

"மெசியானிய இரகசியம்" என்றால் இயேசுவுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும்.

இயேசுவின் இரண்டாம் வருகை எப்போது இருக்கும் என்று கேட்கப்பட்ட போது,

இயேசு, "அது தந்தையைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது." என்கிறார்.

அது சொல்லக் கூடாத இரகசியம் என்பது பொருள்.

ஆனாலும் இரகசியத்தை அறிய ஆசைப் படுவது நமது சுபாவம்.

சொல்லப் பட முடியாததை யூகிப்பது நமது பழக்கம்.

யூதர்கள் மெசியாவைப் பற்றித் தவறாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். 

மெசியா தங்களுக்கு அந்நியர் ஆட்சியிலிருந்து அரசியல் விடுதலையைப் பெற்றுக் கொடுப்பார் என்று எண்ணினார்கள்.

ஆனால் மெசியா வந்தது மனுக் குலத்திற்கு பாவத்திலிருந்து விடுதலை பெற்றுத்தர.

இயேசு ஆன்மீக விடுதலையாளர், அரசியல் விடுதலையாளர் அல்ல.

அவரைத் தேடி வருபவர்கள் அவரது நற்செய்தியைக் கேட்டு ஆள்மீகப் பயன் பெற வர வேண்டும்.

ஆன்மீகப் பயனோடு உடல் சார்ந்த நோய்களிலிருந்தும் குணம் பெற வேண்டும்.

அவரது புதுமைகளை விளம்பரப் படுத்தினால் அரசியல் விடுதலை பெற்றுத்தர மெசியா வந்து விட்டார் என்ற தவறான எண்ணத்தோடு அவரைப் பார்க்க வருவார்கள்.

இதைத் தவிர்க்கதான் தாங்கள் புதுமையாக குணம் பெற்றதை வெளியே சொல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டார்.

தான் மெசியா என்பது அதற்குரிய நேரம் வரும் போது வெளிப்பட வேண்டும்.

அவர் பாடுகள் படும் நேரமே அதற்குரிய நேரம்.

அதனால்தான் பாடுகளுக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு "தாவீது மைந்தனுக்கு ஓசன்னா" என்று பாடி ஊர்வலமாக அழைத்துச் செல்ல சம்மதித்தார்.

நாம் அதைப் புனித வாரத்தின் ஆரம்பத்தில் குருத்து ஞாயிறாகக் கொண்டாடுகிறோம்.

இது வரை சொன்னது விவிலிய அறிஞர்களின் யூகம்.

நம்மைப் பொருத்த மட்டில் நாம் யூகிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இயேசு ஆன்மீக மீட்பர் என்று தெரிந்து தான் கிறித்தவர்களாக வாழ்கிறோம்.

நாம் இயேசு நமது மீட்பர் என்ற விசுவாசத்தில் உறுதியாக இருப்போம்.

நாம் மீட்பர் சொன்னபடி நடக்க வேண்டியது நமது கடமை.

கடவுளின் அளவில்லாத பண்புகளைப் பற்றிய உண்மையை அளவுள்ள நம்மால் ஆராய்ந்து கண்டு பிடிக்க முடியாது.

 தான் குணமாக்கியதை மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம் என்று கூறியிருந்தும்

 குணம் அடைந்தவர்கள் அவர் செய்த புதுமையைப் பற்றி சென்ற இடமெல்லாம் பேசினார்கள்.

அப்படிப் பேசுவார்கள் என்று இயேசுவுக்குத் தெரியும். அவர் முக்காலமும் அறிந்த கடவுள்.

இப்போது நமக்கு அந்தப் பிரச்சினை இல்லை.

அவர் வந்த நோக்கத்தை நிறைவேற்றி விட்டார்.

மெசியாவின் புகழைப் பரப்ப வேண்டியது நமது கடமை.

அவருடைய நற்செய்தியை உலகெங்கும் அறிவிப்பதோடு அவரது புகழைப் பரப்புவோம்.

அவர்தான் உலகை மீட்ட மெசியா என்று அனைவருக்கும் சொல்வோம்.

உலகோர் அனைவரும் அவர் மனித குல மீட்பர் என்பதை அறிய வேண்டும்.

அனைவருக்காகவும் தான் அவர் பாடுபட்டு மரித்தார்.

வாழ்க இயேசுவின் புகழ்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment