Friday, January 31, 2025

ஞாயிறு2மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். (லூக்கா நற்செய்தி 2:22)

ஞாயிறு2

மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். 
(லூக்கா நற்செய்தி 2:22)

இயேசு பிறந்த எட்டாவது நாள் அன்னை மரியாளும், சூசையப்பரும் அவரைக் கோவிலுக்கு எடுத்துச் சென்று விருத்த சேதனம் செய்து,
இயேசு என்று பெயரிட்டார்கள்.

ஆண் குழந்தை பிறந்த நாற்வதாவது நாள் தாய் தூய்மைச் சடங்கை நிறைவேற்றி,  குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க வேண்டும்.

குழந்தைப் பேற்றின் போது ரத்தப் போக்கினால் தாய் தீட்டு பட்டிருப்பாள்.  தீட்டு நீங்க தாய் 
தூய்மைச் சடங்கை நிறைவேற்ற வேண்டும் என்பது மோசேயின் சட்டம்.

ஆனால் அன்னை மரியாள்  குழந்தை பேற்றுக்கு முன்னும், குழந்தை பேற்றின் போதும், அதற்குப் பின்னும் முக்காலமும் கன்னியாகவே இருந்தாள்.

அவளுடைய கன்னிமைக்கு பழுது ஏற்படாமல் இயேசு பிறந்தார்.

ஒளி கண்ணாடியை எந்த விதத்திலும் பாதிக்காமல் அதை ஊடுரூவிச் செல்வது போல

இயேசு தாயின் கன்னிமைக்கு சிறிதும் பழுது ஏற்படாமல் அவள் வயிற்றிலிருந்து பிறந்தார்.

ஆகவே அவளுக்கு தீட்டு ஏற்படவில்லை.

ஆகவே அவளுக்கு தூய்மை சடங்கு தேவையில்லை.

ஆனாலும் சட்டப்படி நடக்க வேண்டும் என்பதற்காக தூய்மை சடங்குக்கு உட்பட்டாள்.

இது யூத சட்டத்திற்குத் திருக் குடும்பம் காட்டும் மரியாதையைக் காண்பிக்கிறது.

இயேசு கடவுள். கடவுளையே அவருக்கே ஒப்புக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

 ஆனாலும் சட்டத்துக்கு உட்பட்டு இயேசுவின் பெற்றோர் அவரைக் கடவுளுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தார்கள்.

"ஏனெனில், "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது."
(லூக்கா நற்செய்தி 2:23)

இது இயேசுவே கல்வாரி மலையில் தன்னையே தன் தந்தைக்குப் பலியாக ஒப்புக் கொடுத்ததை ஞாபகப்படுத்துகிறது.

நாமும்  நம்மை படைத்த இறைவனுக்கு நம்மை ஒப்புக் கொடுத்து அவரது திருப்பணிக்கு நம்மையே அர்ப்பணிக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகிறது.

'இதோ ஆண்டவருடைய அடிமை" என்ற வார்த்தைகளால் அன்னை மரியாள் தன்னையே அர்ப்பணித்த பின்பு தான் இறைமகன் அவள் வயிற்றில் மனு மகனாக உருப்பெற்றார்.

இப்போதும் துறவற வாழ்க்கையை தேர்ந்தெடுப்பவர்களும் இதையே செய்கிறார்கள்.

இல்லறவாசிகளாகிய நாம் நமது இல்லறத்தை இறை பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதையும் இயேசு நமக்கு நினைவூட்டுகிறார்.

இயேசு தன்னையே தனது தந்தைக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுத்தது போல நாமும் நம்மை நமது விண்ணகத் தந்தைக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுப்போம்.

காணிக்கை கடவுளுக்கே சொந்தம். ஆகவே நாம் நம்மையே கடவுளுக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுத்தபின்  நாம் வாழ வேண்டியது அவரது விருப்பப்படி, நமது விருப்பப்படி அல்ல.

நமக்கு என்ன நேர்ந்தாலும் அது அவருடைய விருப்பப்படி என்பதால் அதை முழு மனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அன்னை மரியாள் தன்னையே இறைவனுக்கு அடிமையாக ஒப்புக் கொடுத்த பின் தனக்கு ஏற்பட்ட வியாகுலங்களை மனமுவந்து ஏற்றுக்கொண்டது போலவும்,

இயேசு பாடுகளையும் சிலுவை மரணத்தையும் ஏற்றுக் கொண்டது போலவும்

நாமும் நமது வாழ்வில் வரும் சிலுவைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இயேசு தனது சிலுவை மரணத்தால் மாட்சி அமைந்தது போல 

நாமும் நமது சிலுவைகளை மனம் உவந்து சுமப்பதன் மூலம் மகிமை பெறுவோம்.

புனித வெள்ளிக்குப் பிறகுதான் உயிர்த்த ஞாயிறு,

இயேசுவுக்கு என்ன நேர்ந்ததோ அதுவே அவரது காணிக்கை பொருட்களாகிய நமக்கும் நடக்கும்.

அவர் மரித்த மூன்றாவது நாள் உயிர்த்து மகிமை அடைந்தார்.

அவருக்காக மரிக்கும் அனைவருக்கும் உயிர்ப்பின் மகிமை கிடைக்கும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment