Saturday, January 11, 2025

திங்கள் 13-02-25 "உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்."(மாற்கு நற்செய்தி 1:18)

திங்கள் 13-02-25

"உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்."
(மாற்கு நற்செய்தி 1:18)

பெத்லகேமில் பிறந்து, நசரேத்தில் திருக் குடும்பத்தில் வளர்ந்த இயேசு,

30 வயது நிரம்பியவுடன் தனது பொதுவாழ்வுப் பணியை ஆரம்பிக்கிறார்.

பொதுவாழ்வுப் பணியின் மையம் கலிலேயாக் கடலின் கரையில் அமைந்துள்ள கப்பர்நாகும் .

மீன் பிடிக்கும் தொழிலாளர்களாக சீமோன், அந்திரேயா, யாகப்பர், அருளப்பர் ஆகியோரும் இவ்வூரினர் தான்.

கடற்கரை ஓரமாக நடந்து வந்த இயேசு மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர்களை தன் பின்னால் வரும்படி அழைக்கிறார்.

அவர்களும்  வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

தேவ அழைத்தலை ஏற்றுத் தங்கள் பரம்பரைத் தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.

அவர்களுடைய பரம்பரைத் தொழிலுக்கு ஆதாரம் வலைகள்.

வலைகளை விட்டு விட்டார்கள் என்றால் தங்கள் வாழ்வாதாரத் தொழிலையே விட்டு விட்டார்கள் என்று அர்த்தம்.

மீன் பிடிக்கும் பணி லௌகீகப் பணி.

இயேசுவைப் பின்பற்றுவது ஆன்மீகப் பணி.

ஆன்மீகத்தைப் பின்பற்ற வேண்டுமென்றால் லௌகீகத்தைக் கைவிட வேண்டும்.

ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது.

ஒரே நேரத்தில் இறைவனுக்கும், உலகத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது.

இப்போது ஒரு கேள்வி எழும்.

இறைவன் நம்மைப் படைத்து வாழ விட்டிருப்பது உலகில் தானே.

உலகக் காரியங்களைச் செய்யாமல் எப்படி உலகில் வாழ முடியும்?

சாப்பிடாமல் வாழ முடியாது.

சாப்பிட வேண்டுமென்றால் பயிர்த் தொழில் செய்ய வேண்டும்.

பயிர்த் தொழில் உலகைச் சார்ந்தது.

அதைச் செய்யாமல் வாழ முடியாது.

அப்படியானால் பயிர்த் தொழில் செய்பவர்கள் இறைவனுக்கு ஊழியம் செய்ய முடியாதா?

இப்படிக் கேட்பது, "வகுப்பில் அமைதியாக இருக்க வேண்டும்" என்று ஆசிரியர் சொன்னால்,

"அமைதியாக இருந்து கொண்டு எப்படி சார் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லுவது? " என்று கேட்பது போல் இருக்கிறது.

"வகுப்பில் அமைதியாக இருக்க வேண்டும்" என்று சொன்னால் பாடம் கற்பதற்கு ஊறு விளைவிக்கும் வகையில் எதுவும் செய்யக் கூடாது என்று அர்த்தம்.

லௌகீகம் கூடாது என்றால் நமது உலக வாழ்வு ஆன்மீக வாழ்வுக்கு ஊறு விளைவிக்கக் கூடாது என்று அர்த்தம்.

ஆன்மாவுக்கு உதவிகரமாக இருக்கவே உடல்.

ஆன்மீக வாழ்வுக்கு உதவியாக நமது உடல் என்ன செய்தாலும் அது ஆன்மீகச் செயல் தான்.

அப்படியானால் ஏன் இயேசுவின் சீடர்கள்  மீனவத் தொழிலை முற்றிலுமாக துறந்து விட்டு இயேசுவின் பின் சென்றார்கள்?

ஒரு அடிப்படை உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

திரு முழுக்கு பெற்ற அனைவரும் இயேசுவின் சீடர்கள்தான்.

திருச்சபை  அனைவரையும் குருத்துவத்தினர் என்று தான் அழைக்கிறது.

தேவத் திரவிய அனுமானங்களை நிறைவேற்றுதல், 
திருப்பலி நிறைவேற்றுதல், 
பாவ மன்னிப்பு அளித்தல் போன்ற இயேசுவின் பணிகளைச் செய்ய அழைக்கப் படுபவர்கள் பணிக் குருத்துவத்தினர்.

இவர்கள் திருச்சபையின் நிர்வாகிகள்.

மற்றவர்கள் பொதுக் குருத்துவத்தினர்.

பொதுக் குருத்துவத்தினர் தாங்கள் வாழ்வதற்காகச் செய்யும் எந்தத் தொழிலையும் இறைவனுடைய மகிமைக்காகச் செய்தால் அவர்கள் வாழ்வது ஆன்மீக வாழ்க்கை.

இறைவனுடைய மகிமைக்காகச் செய்யாமல் தாங்கள் வசதியாக வாழ்வதற்காக மட்டும் செய்தால் அது லௌகீக வாழ்க்கை.

லௌகீகத்துக்காக மட்டும் வாழ்பவர்களுக்கு விண்ணக வாழ்வில் இடமில்லை.

பணிக் குருத்துவ வாழ்வுக்கு அழைக்கப் படுபவர்கள் உலகைச் சார்ந்த வாழ்க்கையை முற்றிலும் துறந்து, குருத்துவப் பணியை மட்டுமே செய்ய வேண்டும்.

இயேசுவின் பன்னிரு சீடர்களும் பணிக் குருத்துவப் பணிக்காக அழைக்கப் பட்டவர்கள்.

ஆகவேதான் சீமோனும், அந்திரேயாவும், யாகப்பரும், அருளப்பரும் மீனவத் தொழிலுக்குரிய வலைகளை விட்டு விட்டு இயேசுவைப் பிள்பற்றினார்கள்.

ஒரு விவசாயி நிலத்தைப் பண்படுத்தி பயிர் செய்யும் போது மட்டும்தான் விவசாயப் பணியைச் செய்கிறார்.

மற்ற நேரங்களில் அவர் சுதந்திரப் பறவை. 

ஒரு ஆசிரியர் பள்ளியில் மாணவர்களுக்குப் போதிக்கும் போது மட்டும்தான் ஆசிரியப் பணி செய்கிறார்.

மற்ற நேரங்களில் அவர் சுதந்திரப் பறவை. 

அலுவலங்களில் பணி புரிவோர் மாலையில் வீட்டுக்கு வந்த பின் சுதந்திரப் பறவைகள்.

ஆனால் ஒரு குருவானவர் குருப்பட்டம் பெற்ற வினாடியிலிருந்து வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வினாடியும் கடமையை ஆற்ற வேண்டியவர்.

சுதந்திரம் கிடையாது.

ஒரு நாளில் 24 மணி நேரமும் ஒவ்வொரு வினாடியும் பணிக்குத் தயாராக இருக்க வேண்டும்.

இரவு 12 மணிக்கு நல்ல தூக்கத்தில் இருக்கும்போது அவஸ்தைப் பூசுதல் கொடுக்க அழைப்பு வந்தால் உடனே போயாக வேண்டும்.

வேலை நேரம் கிடாயாது.
No working hours.

எந்த நேரத்தில் பாவ சங்கீர்த்தனம்
 செய்ய ஆள்வந்தாலும் உடனே சங்கீர்த்தனம் கேட்டாக வேண்டும்.

ஏனெனில் பிரச்சினையில் இருப்பது கடவுளால் படைக்கப்பட்ட ஆன்மா.

குரு ஆண்டவர் செய்ய வேண்டிய பணியைச் செய்கிறார்.
ஆண்டவர் ஒவ்வொரு வினாடியும் தயாராக இருப்பது போல குருவும் இருக்க வேண்டும்.

இயேசு நமது மீட்பர்.

குருவானவர் இயேசுவின் பிரதிநிதி.

  பங்கிலுள்ள அனைத்து ஆன்மாக்களின் ஆன்மீக மீட்புக்கும் 
பங்குக் குருவானவர்தான் பொறுப்பு.

பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கடவுளுக்கு மட்டும்தான் உண்டு.

கடவுள் தன் அதிகாரத்தைக் குருக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

நாம் மீட்புப் பெற குருவானவருடைய உதவி கட்டாயம் தேவை.

நாம் கேட்கும் ஆன்மீக உதவிகளை குருவானவரால் மறுக்க முடியாது.

24 மணி நேரமும் ஒவ்வொரு வினாடியும் அவருக்குக் குருத்துவப் பணி இருப்பதால் வேறு எந்தப் பணியையும் பொறுப்பேற்கக் கூடாது. 

"இவரோ, என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார்."
(எபிரேயர் 7:24)

இயேசு தனது சீடர்களிடம்,

''நிலம் வாங்கி மேற்பார்வையிடுங்கள், பள்ளிக்கூடங்கள் கட்டி
நடத்துங்கள்'" என்று கட்டளை கொடுக்கவில்லை.

இப்பொறுப்புக்களைக் குருக்களிடம் கொடுக்கும் போது அவர்களது ஆன்மீகப் பணி பாதிக்கப் படும்.

இப்பொறுப்புக்களை பொதுக் குருத்துவத்திடம் ஒப்படைத்து விட்டால் குருக்கள் தங்கள் ஆன்மீகப் பணியை இன்னும் சிறப்பாகச் செய்யலாம்.

திவ்ய நற்கருணை மூலம் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசு நமது குருக்கள் மூலமும் நம்மோடு வாழ்கிறார்.

குருக்கள் வழியே இயேசுவை அடைவோம்.

நமது விண்ணக வாசல் நமது குருக்கள் தான்.

விண்ணக வாசல் வழியாக விண்ணக பேரின்ப வாழ்வுக்குள் நுழைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment