19-01-25 ஞாயிறு
இயேசு அவரிடம், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்றார்.
(யோவான் நற்செய்தி 2:4)
கானாவூரில் நடந்த திருமண விழாவுக்கு அழைப்புதலின் பேரில் அன்னை மரியாளும், இயேசுவும், சீடர்களும் செல்கிறார்கள்.
அருளப்பர் கானாவூரில் நடந்த திருமணத்தைப் பற்றி எழுதவில்லை. அங்கு இயேசு செய்த புதுமையைப் பற்றி எழுதுகிறார்.
இது இயேசு பொது வாழ்வில் செய்த முதல் புதுமை.
இயேசு திருமுழுக்கு அருளப்பரிடம் திருமுழுக்குப் பெற்றதைத் தொடர்ந்து சீமோன், அந்திரேயா, அருளப்பர், யாகப்பர் பிலிப்பு, நத்தானியேல் ஆகியோர் அவரது சீடர்களாகப்
பின்பற்றினர்.
இவர்கள் திருமண வீட்டுக்கு இயேசுவோடு சென்றிருக்க வேண்டும்.
அங்கு இயேசுவின் முதல் புதுமைக்கு முந்திய நிகழ்வை முதலில் தியானிப்போம்.
1. திராட்சை இரசப் பற்றாக்குறை
2. அன்னை மரியாளின் வார்த்தைகள்.
3. இயேசுவின் பதில்.
4. அதைத் தொடர்ந்த அன்னையின் வார்த்தைகள்.
முதலில் திராட்சை இரசத்தை எடுத்துக் கொள்வோம்.
முதல் புதுமையில் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றுகிறார்.
பாடுகள் ஆரம்பிப்பதற்கு முன்பு செய்த கடைசிப் புதுமையில் திராட்சை இரசத்தை தனது இரத்தமாக மாற்றுகிறார்.
இரண்டு இடங்களிலும் திராட்சை இரசம் இடம் பெறுகிறது.
ஆரம்பத்திலேயே உலகம் முடியும் மட்டும் ஒவ்வொரு வினாடியும் உலகில் நடைபெறவிருக்கும் திருப்பலி என்னும் புதுமைக்கு கானாவூர் திராட்சை இரசம் முன் அடையாளமாக மாறிவிட்டது.
பாடுகளுக்கு முந்திய கடைசி புதுமை என்றேன், ஏனெனில், பாடுகளின் போதும் புதுமைகள் செய்தார்.
கைது செய்யப்படும் போது இராயப்பரால் வெட்டப்பட்ட
ஒருவனுடைய காதை ஒட்ட வைத்தார்.
சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது, செந்தூரியன் விலாவைக் குத்தும் போது சிந்திய இரத்தத்தால் அவனுடைய கண்ணைக் குணமாக்கினார்.
திராட்சை இரசம் பற்றாக்குறையானதை அறிந்த அன்னை மரியாள் மகனிடம் வந்து,
"திராட்சை இரசம் தீர்ந்து விட்டது" என்கிறாள்.
அன்னையின் வார்த்தைகளை ஆழ்ந்து தியானித்தால் அது ஒரு செபம் என்பது புரியும்.
எப்படி செபிக்க வேண்டும் என்பதும் புரியும்.
செபத்தில் கடவுளுக்கு நாம் உத்தரவு போடக்கூடாது. அவரிடம் நமது நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும். என்ன செய்வது என்று அவருக்குத் தெரியும்.
மரியாள் திருமண வீட்டினரின் சார்பாக திருமண வீட்டின் நிலையை ஏற்றுக் கொள்கிறாள்.
அவள் விரும்புவது அவள் சொல்லாமலேயே இயேசுவுக்குத் தெரியும்.
அன்னையின் வார்த்தைகளில் அவளுடைய நம்பிக்கை வெளிப்படுகிறது.
இரசம் இல்லாமையை இயேசு எப்படி சமாளிப்பார் என்று அவளுக்கு உறுதியாகத் தெரியும்.
அன்னைக்கு இயேசு அளித்த பதிலில் ஒரு முக்கிய மறையியல் உண்மை அடங்கியிருக்கிறது.
"அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே"
நமது சாதாரண உரையாடலில் நாம் "அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்?" என்று சொன்னால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று அர்த்தம்.
ஆனால் சொன்னவர் எல்லாம் வல்ல கடவுள். ஆகவே நமது அர்த்தம் அவருக்குப் பொருந்தாது.
அதற்கான பொருள் அவரது அடுத்த வார்த்தைகளில் அடங்கியிருக்கிறது.
"எனது நேரம் இன்னும் வரவில்லையே."
அதாவது,
"எனது நேரம் வரும் போது நாம் இதைச் செய்ய முடியும்.''
எனது நேரம் என்றால்?
நான் செய்வதற்கு முன் குறித்து வைத்திருக்கும் நேரம்.
எதைச் செய்வதற்கு?
பாஸ்கா திருவிருந்துக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு இயேசு சீடர்களைப் பார்த்து,
"மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
(அரு.12:23,24)
இயேசு எதற்காக உலகிற்கு வந்தாரோ அது நடைபெற வேண்டிய நேரம்,
அதாவது அவர் பாடுகள் பட்டு மரிக்க வேண்டிய நேரம்,
இதைத்தான் இயேசு "மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம்" என்கிறார்.
பாடுகள் எப்போது ஆரம்பிக்கின்றன?
பாஸ்கா திருவிருந்தின் போது. அதாவது புனித வியாழனன்று.
பாஸ்கா திருவிருந்துக்கு
திருமண விருந்து முன் அடையாளம்.
பாஸ்கா திருவிருந்துக்கு மட்டுமல்ல,
ஆட்டுக்குட்டியின் விண்ணக திருமண விருந்துக்கும்
(திருவெளிப்பாடு 19:9)
அது முன் அடையாளம்.
( மணவாளன் - -ஆட்டுக் குட்டியாகிய இயேசு.
மணவாட்டி -- நமது ஆன்மா)
கானாவூர்த் திருமண விருந்தில் தண்ணீர் திராட்சை இரசமாக மாறும்.
பாஸ்கா திருவிருந்தில் திராட்சை இரசம் இயேசுவின் இரத்தமாக மாறும்.
இயேசு தண்ணீரில் இறங்கி திருமுழுக்கு பெற்ற பின்தான் மீட்புப் பணியை ஆரம்பித்தார்.
தண்ணீர் --> திராட்சை இரசம்---> இயேசுவின் இரத்தம்.
தண்ணீர் - திருமுழுக்கு.
இயேசுவின் இரத்தம் - திருப்பலி .
இதுதான் இயேசுவின் வாழ்க்கை.
இதுதான் நமது வாழ்க்கையும்.
கானாவூர் திருமணம் இதற்கு முன் அடையாளம்.
இயேசுவுக்குத் தண்ணீரை இரமாக்கப் போவது தெரியும்.
தெரிந்தும் ஏன் "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே"
என்று சொல்கிறார்.
கிடைக்கிற சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி ஆரம்பத்திலேயே தான் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தை அம்மாவுக்கு ஞாபகப் படுத்துகிறார்.
"எனது நேரம் இன்னும் வரவில்லை. வந்தவுடன் நீங்கள் கேட்டது நிறைவேறும்." என்று நினைத்துக் கொண்டு தான் அதைச் சொல்லியிருப்பார்.
என்ன கேட்டது நிறைவேறும்?
திராட்சை இரசம் சம்பந்தமாகக் கேட்டது
இயேசுவின் மனதில் இருந்த எண்ணத்தில்
நிறைவேறும்.
அதாவது திராட்சை இரசம் அவரது இரத்தமாக மாறும்.
இயேசு வெளிப்படையாகச் சொல்லவில்லை.
ஆனால் அம்மாவுக்குப் புரிந்திருக்கும்.
அதனால்தான் அதற்கான விளக்கத்தைக் கேட்காமல்,
பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார்.
(அரு. 2:5)
பெற்று வளர்ந்த தாய்க்கு மகனைப் பற்றித் தெரியாதா?
நசரேத் ஊரில் வாழ்ந்த போதே விண்ணகத் தந்தையின் விருப்பத்தைப் பற்றி அன்னையிடம் உறுதியாகச் சொல்லியிருப்பார்.
யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம்
தண்ணீர்கொள்ளும்.
(அரு 2:6)
ஆறு கல்தொட்டிகள் நிறைய நீரால் நிரப்ப சொல்லி அதை திராட்சை இரசமாக மாற்றினார்.
கல் தொட்டிகளிலும் ஒரு முன் அடையாளம் இருக்கிறது.
அவை தூய்மைச் சடங்குகளுக்காக வைக்கப் பட்டிருந்தவை.
"அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, "இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை."
(லூக்கா நற்செய்தி 22:20)
திராட்சை இரசத்தை அவரது இரத்தமாக மாற்றியபோது இயேசு சொன்ன வார்த்தைகள் இவை.
இயேசு இரத்தம் சிந்தியது நமது ஆன்மாவின் தூய்மைக்காக.
இதற்கு முன் அடையாளமாகவே
தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகளில் தண்ணீர் ஊற்றப் பட்டு, அது திராட்சை இரசமாக்கப் பட்டது.
நாமும் தூய்மையான உள்ளத்தோடு தான் இயேசுவின் திரு உடலையும், திரு இரத்தத்தையும் உட்கொள்ள வேண்டும்.
நாம் இயேசுவின் வசனங்களை வாசிக்கும் போது அவர் உலகுக்கு எதற்காக வந்தாரோ அதை மையமாக வைத்தே தியானிக்க வேண்டும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment