சனி. 18-01-25
"இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்."
(மாற்கு நற்செய்தி 2:17)
வரி தண்டும் தன் தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்த லேவியின் வீட்டில் அவர் விருந்து உண்ண அமர்ந்திருந்தார்.
அப்போது பரிசேயர்களால் பாவிகளாக் கருதப்பட்டவர்களும், வரிதண்டுபவர்களும் அவரோடும் அவருடைய சீடரோடும் அமர்ந்து விருந்துண்டனர்.
ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள்.
அதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு,
அவருடைய சீடரிடம்,
"இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?" என்று கேட்டனர்.
அவர்கள் தாங்கள் மட்டும் திருச் சட்டத்தை அனுசரிப்பதாக. எண்ணிக் கொண்டு தங்களுக்குப் பிடிக்காதவர்களைப் பாவிகள் என நினைத்தார்கள்.
இயேசு, அவர்கள் சொன்னதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி,
"நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை.
நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்.
இயேசு தான் மனிதனாகப் பிறந்ததன் நோக்கத்தைச் சொல்லிவிட்டார்.
வரிதண்டுபவர்கள் மட்டுமல்ல,
பரிசேயர்கள், மறை நூல் அறிஞர்கள் உட்பட, மனிதர்கள் அனைவருமே பாவிகள்.
இயேசு யார் நேர்மையாளர்கள், யார் பாவிகள் என்று சொல்லவில்லை.
நமது முதல் பெற்றோர் செய்த பாவத்தின் விளைவாக மனிதர்கள் அனைவருமே பாவிகள் தான்.
இயேசு தான் தனது சிலுவை மரணத்துக்கு முன் பயன் (Retrospective effect) கொடுத்து தனது தாயைச் சென்மப் பாவம் இன்றி உற்பவிக்கச் செய்தார்.
அன்னை மரியாள் சென்மப் பாவ மாசின்றி உற்பவித்தது இயேசுவின் பாடுகளின் பலனாகத் தான்.
மரியாளும் ஆதாம், ஏவாளின் வாரிசுதான். ஆனாலும் அவள் தனது தாயாக வேண்டியிருந்ததால் கடவுள் அவளுக்கு விதி விலக்குக் கொடுத்து, சென்மப் பாவத்தில் விழாமல் காப்பாற்றினார்.
மனுக்குலத்தில் மூன்று பேருக்கு சென்மப் பாவம் இல்லை.
ஆதாம், ஏவாள் உற்பவிக்கவில்லை, பாவம் இன்றி படைக்கப் பட்டார்கள். அவர்கள் செய்தது கர்மப் பாவம்.
அன்னை மரியாள் சென்மப் பாவம் இன்றி உற்பவித்தாள்.
ஆகவேதான் புனிதர்களுள் அவளுக்கு முதலிடம்.
இறைவனை ஏற்கிறோம் என்று சொல்லும் சிலர் அவர் தன் அன்னைக்குக் கொடுத்த வரத்தை ஏற்க மறுக்கிறார்கள்.
யார் மறுத்தாலும் உண்மை பொய்யாகி விட முடியாது.
நாம் பாவிகள். நம்மைத் தேடித்தான் பரிசுத்தர் வந்தார்.
இயேசு பாவிகள் கூடவே இருக்கிறார் என்று சொல்வது,
ஒரு மருத்துவரைப் பார்த்து,
"இவர் என்ன படித்து பட்டம் பெற்றவர் என்கிறார்கள். ஏன் எப்போதும் நோயாளிகள் கூடவே இருக்கிறார்?" என்று சொல்வது போல் இருக்கிறது.
Fail ஆகும் நிலையில் உள்ள மாணவர்களுக்குதான் ஆசிரியர் அவசியம் தேவை.
படும் நிலையில் உள்ள பயிர்களுக்கு தான் மழை உடனே தேவை.
பாவிகளான நம் அனைவருக்கும் இயேசு அவசியம் தேவை.
நமக்காகத்தான் இயேசு விண்ணகம் எய்திய பின்னும் திவ்ய நற்கருணையிலும், குருக்கள் வடிவிலும் தொடர்ந்து நம்மோடு இருக்கிறார்.
இப்போது ஒரு கேள்வி.
இயேசு குருவின் உருவிலும் இருக்கிறார்,
திவ்ய நற்கருணையிலும் இருக்கிறார்.
நமக்கு இயேசுவின் இடத்தில்
இருந்து கொண்டு பாவ மன்னிப்புக் கொடுப்பவரும் குருவானவர்தான்,
நமது ஆன்மாவுக்கு உணவாக திவ்ய நற்கருணையைத் தருவதும் குருவானவர்தான்.
நாம் விண்ணை வாழ்வை அடைவதற்கு குருவானவர் தரும் பாவ மன்னிப்பு முக்கியமா, அவர் தரும் திவ்ய நற்கருணை முக்கியமா?
இதே கேள்வியை வேறு உருவத்தில் கேட்கிறேன்.
நமது உடல வாழ, வளர, சக்தி பெற உயிர் முக்கியமா, உணவு முக்கியமா?
இரண்டும் முக்கியம்தான், எது அதிக முக்கியம்?
உடலில் உயிர் இல்லா விட்டால் உணவால் என்ன பயன்?
குழந்தை உயிரோடு பிறந்தால் தான் தாய் அதற்குப் பால் கொடுப்பாள்.
இயேசு இறந்து விட்ட சிறுமியை உயிரோடு எழுப்பிய பின்புதான்
அவளுக்கு உணவு கொடுக்கச் சொன்னார்.(மாற்கு .5:43)
சாவான பாவம் செய்யும் போது ஆன்மா மரணம் அடைகிறது.
மரணம் அடைந்த ஆன்மாவுக்கு, அதாவது பாவ நிலையில் உள்ள ஆன்மாவுக்கு திவ்ய நற்கருணையால் என்ன பயன்?
சாவான பாவ நிலையில் திவ்ய நற்கருணை உட்கொண்டால் அதுவே ஒரு சாவான பாவம்.
சாவான பாவம் இல்லாத நிலையில் உள்ள ஒருவர் திவ்ய நற்கருணை வாய்ப்பு இல்லாத சூழ்நிலையிலும் இறக்க நேரிட்டால் உறுதியாக விண்ணகம் செல்வார்.
ஆனால் சாவான பாவ நிலையில் உள்ள ஒருவர் பாவமன்னிப்பு பெறாமல், திவ்ய நற்கருணை உட்கொண்டு இறந்தால் விண்ணகம் செல்ல முடியாது.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
விண்ணகம் செல்ல ஒரே வழி பாவ மன்னிப்பு மட்டும்தான்.
இயேசு உலகுக்கு வந்ததன் நோக்கமே நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காகத்தான்.
அப்படியானால் இயேசுவின் இடத்திலிருக்கிற குருவானவரின் முக்கிய பணி என்ன?
இயேசு உலகில் மனிதனாக வாழ்ந்த போது
1. நற்செய்தியை அறிவித்தார்.
2. பாவங்களை மன்னித்தார்.
3.தன்னையே பலி கொடுத்தார்.
4. திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.
அனைத்தையுமே குருவானவரும் செய்ய வேண்டும்.
ஆனாலும் மிக முக்கியமான பணி பாவமன்னிப்புதான்.
ஒருவர் திருமுழுக்கு பெற்று, சென்மப் பாவம் மன்னிக்கப் படும்போது தான் அவர் கிறிஸ்தவர் ஆகிறார்.
திருமுழுக்கு பெற்ற பின் நாம் பெற வேண்டிய முக்கிய திருஅருட் சாதனம் பாவசங்கீர்த்தனம்.
அதற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தான் உண்மையான கிறித்தவர்கள்.
பாவமின்றி வாழ்ந்தால் தான் ஆன்மீக வாழ்வு வாழ முடியும்.
வாருங்கள். இயேசு பாவ சங்கீர்த்தனத் தொட்டியில் அமர்ந்திருக்கிறார். அவரிடம் சென்று பாவ மன்னிப்புப் பெறுவோம்.
உற்சாகத்துடன் விண்ணகப் பயணத்தைத் தொடர்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment