Friday, January 10, 2025

தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. (லூக்கா நற்செய்தி 3:22)

ஞாயிறு 12 -01-25

 தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. 
(லூக்கா நற்செய்தி 3:22)

திரு முழுக்கு அருளப்பர்,

 "பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்" என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார். 
(லூக்கா நற்செய்தி 3:3)


எருசலேமிலும் யூதேயாமுழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகளனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்று 

 தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.

மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற வந்தார்.


அருளப்பர், "நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?" என்று கூறித் தடுத்தார். 

இயேசு, "இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை" எனப் பதிலளித்தார்.

பாவிகளை மனம் திருப்பும் நோக்கத்தோடு அருளப்பர் திருமுழுக்குக் கொடுத்து வந்தார்.

பாவமே செய்ய முடியாத இயேசு திருமுழுக்கு பெற வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் மனுக்குலம் முழுவதும் துவக்கம் முதல் இறுதி வரை செய்த, செய்கிற, செய்யப்போகிற 
அத்தனை பாவங்களையும் தானே சுமந்து அவற்றுக்குப் பரிகாரம் செய்யும் நோக்கோடு மனிதனாய்ப் பிறந்த இயேசு,

மற்றவர்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக தானே திருமுழுக்குப் பெற முன் வந்தார்.

இது  குற்றவாளியின் குற்றங்களுக்கு நீதிபதித் தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்வது போல.

குற்றவாளிகள் நாம், 
நீதிபதி கடவுளாகிய இயேசு.

''தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கினார். 

அப்பொழுது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது."
(லூக்கா நற்செய்தி 3:22)

பரிசுத்த தம திரித்துவக் கடவுள் இவ்வசனத்தில் காட்சி தருகிறார்.

"என் அன்பார்ந்த மகன் நீயே," என்று குறல் கொடுப்பவர் தந்தை.

திரு முழுக்கு பெறுபவர் மகன்.

புறா வடிவில் தோன்றியவர் தூய ஆவி .

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் திரு முழுக்கு பெற்று இயேசு தனது பாவப் பரிகாரப் பணியை ஆரம்பிக்கிறார்.

இன்று ஆரம்பிக்கும் பாவப் பரிகாரப் பணி,  சிலுவையில்,

"தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் "என்ற வார்த்தைகளுடன்  நிறைவு பெறும்.

இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வை ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தோமென்றால் நமது மொத்த வாழ்வே தலை கீழாக மாறிவிடும்.

சர்வத்தையும் படைத்த சர்வ வல்லப கடவுள்

ஒன்றுமில்லாமையிலிருந்து அவரால் படைக்கப்பட்ட நம்மை

எல்லாம் வல்ல அவருடைய இருப்பிடத்துக்கு உயர்த்த 

எந்த அளவுக்கு தன்னையே தாழ்த்தியுள்ளார் நமக்குப் புரியும்.

நாம் பாவிகள் திரு முழுக்குப் பெற வேண்டும்.

பரிசுத்தராகிய அவர் ஏன் திரு முழுக்குப் பெற வேண்டும்?

தேவையில்லை.

ஆனாலும் நமக்காக அதைச் செய்தார்.

நாம் அவருக்காக என்ன செய்திருக்கிறோம்?

நமக்காக உண்கிறோம்.
அவருக்காக ஒரு நேர 
உணவையாவது ஒறுத்திருக்கிறோமா?

கட்டளைக்குப் பணிந்து அல்ல, நாமாகவே .

விதவிதமாக உடுக்கிறோம்.
அவருக்கு எத்தனை முறை உடை வாங்கிக் கொடுக்கிறோம்?

ஏழைகளுக்குக் கொடுக்கும் போது அவருக்குக் கொடுக்கிறோம்.

நாம் வசதியான இல்லங்களில் வாழ்கிறோம்.

நமது இதயத்தையாவது அவர் தங்க முழுமையாகக் கொடுத்திருக்கிறோமா?.

மணிக்கணக்காக எதையெல்லாமோ நினைத்துப் பார்க்கிறோம்.

இயேசுவைப் பற்றி ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் சிந்திக்கிறோம்?  காலை மாலை செப நேரம் தவிர்த்து.

ஒவ்வொரு வினாடியும் நமக்காக வாழ்கிறோம்.  நமக்காக வாழ அவரை உதவிக்கு அழைக்கிறோம்.

அவருக்காக வாழ நமக்கு உதவ அவரை அழைக்கிறோமா?

அவர் நமக்காகச் செய்திருப்பதைக் கொஞ்ச நேரமாவது சிந்தித்துப் பார்த்தால் நாம் அவருக்காக, அவருக்காக மட்டும் வாழ ஆரம்பிப்போம்.

ஒவ்வொரு செயலையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் செய்தால் அவருக்கு எதிராக எதையும் செய்ய மாட்டோம்.

அவர் குழந்தையாய்ப் பிறந்தது நாம் பாவம் செய்யாமலிருக்க,

அவர் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடந்தது,     நாம் பாவம் செய்யாமலிருக்க.

அவர் திருமுழுக்குப் பெற்றது  நாம் பாவம் செய்யாமலிருக்க.

அவர் நற்செய்தியை அறிவித்தது
நாம் பாவம் செய்யாமலிருக்க.

அவர் பாடுகள் பட்டது,   நாம் பாவம் செய்யாமலிருக்க.

அவர் சிலுவையில் அறையப்பட்டு மரித்தது,    நாம் பாவம் செய்யாமலிருக்க.

ஒவ்வொரு வினாடியும் இதை நாம் நினைத்துப் பார்த்தால் நாம் பாவமே செய்ய மாட்டோம்.

இயேசு மனிதனாய்ப் பிறந்ததன் நோக்கமும் நிறைவேறும்.

இயேசு நமக்காகப் பிறந்து, நமக்காக வாழ்ந்து நமக்காக மரித்தார்.

நாம் இயேசுவுக்காக வாழ்ந்து, இயேசுவுக்காக மரிப்போம்.

நிலையாய் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment