Saturday, January 18, 2025

திங்கள் 20-01-25"அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்" என்றார்."(யோவான் நற்செய்தி 3:30)

திங்கள் 20-01-25

"அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்" என்றார்."
(யோவான் நற்செய்தி 3:30)

இவை திருமுழுக்கு அருளப்பர் தனக்கும் இயேசுவுக்கும் உள்ள உறவைப் பற்றி கூறிய வார்த்தைகள்.

அருளப்பரது வார்த்தைகள் இயேசுவுக்கும் நமக்கும் உள்ள உறவுக்கும் பொருந்தும்.

நாம் உலகில் வாழ்கிறோம்.

நம்மை ஆட்கொள்ள இயேசு விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்திருக்கிறார்.

வந்திருப்பது நம்மை ஆட்கொள்ள.

ஆட்கொள்ள என்றால் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை விண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர் விண்ணக வாழ்வுக்கு ஏற்றவர்களாக மாற்ற.

அதாவது நம்மை அவரைப் போல் மாற்ற.

நாம் சமவெளியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நமக்கு மலைப் பிரதேசத்தில் வேலை கிடைத்திருக்கிறது.

சமவெளியில் வாழ்வது போல மலைப் பகுதியில் வாழ முடியாது.

சமவெளியில் வெப்பம் அதிகமாக இருக்கும். மலையில் குளிர் அதிகம் இருக்கும்.

சமவெளியில் நாம் சாப்பிடும் உணவைச் சாப்பிட்டு, சமவெளியில் அணியும் உடையை அணிந்து மலையில் வாழமுடியாது.

குளிர் தாங்க‌ முடியாமல் படுத்து விடுவோம்.

நமது , உடை, உணவு, நடை பாவனைகள் அனைத்தும் மாற வேண்டும்.

இவ்வுலக வாழ்வு மறுவுலக வாழ்வுக்கு நேர் எதிரானது.

பொருள் இருந்தால் இவ்வுலகில் வாழலாம்.

அருள் உள்ளவர்கள் மட்டுமே மறு உலகில் வாழ முடியும்.

"பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை, அருள் இல்லார்க்கு மறுவுலகு இல்லை.

விண்ணிலிருந்து வந்திருக்கும் இயேசுவோடு இணைந்து நாமும் ‌விண்ணகம் செல்ல வேண்டும் என்றால் நாம் இயேசுவைப் போல் மட்டுமல்ல மறு இயேசுவாகவே மாற வேண்டும்.

உலகைச் சார்ந்த குணங்கள் அனைத்தும் நம்மிடமிருந்து விடை பெற வேண்டும்.

இயேசுவின் பண்புகள் அனைத்தும் நமது பண்புகளாக மாற வேண்டும்.

உலகப் பொருட்கள் மீது நமக்குள்ள பற்று நீங்கி,

இறைப்பற்று உள்ளவர்களாக மாற வேண்டும்.

உலகில் எளிய உள்ளத்தவராய் வாழ வேண்டும்.

இயேசு அனைவரையும் நேசிக்கிறார்.

நாமும் இறைவனை நேசிப்பதோடு, நம்மை நேசிப்பது போல நமது பிறனையும் நேசிக்க வேண்டும்.

இயேசு அவரை நேசியாதவர்களையும் நேசிக்கிறார்.

நாம் நம்மைப் பகைப்பவர்களையும் நேசிக்க வேண்டும்.

இயேசு பாவிகளையும் பராமரிக்கிறார்.

நாமும் நமக்குத் தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும்.

இயேசு தனது பாடுகளின் போது தன்னை அடித்தவர்களைத் தடுக்கவில்லை.

அடிபட்டார், உதைப்பட்டார், துப்பப்பட்டார், கேலி செய்யப்பட்டார்,

மரிக்கு முன் தன்னை அடித்த, உதைத்த , துப்பிய, கேலி செய்த அனைவரையும் மனதார மன்னித்து விட்டார்.

நமக்கும் இந்தக் குணம் இருந்தால் தான் நாம் மறு இயேசுவாக மாற முடியும்.

இது எவ்வளவு கடினம் என்று அடிபடும் போது தான் தெரியும்.

ஆனாலும் இயேசு வாக மாற வேண்டுமென்றால் பட்டுதான் ஆக வேண்டும்.

இயேசுவாக வாழ்வது தேன் குடிப்பது போன்றதல்ல.

கசப்பான மருந்தைக் குடிப்பது போன்றது.

நோய் குணமாக வேண்டுமென்றால் மருந்து கசப்பாக இருந்தாலும் குடித்து தான் ஆக வேண்டும்.

இயேசுவின் அனைத்துப் பண்புகளையும் தங்கள் பண்புகளாக ஏற்றுக் கொண்டவர்கள் தான் இயேசுவோடு விண்ணக பேரின்ப வாழ்வு வாழ முடியும்.

நாம் தேய்வோம். நம்மில் இயேசு முழுமையாக வளர்வாராக.

இறுதி நாளில் நாம் விண்ணகம் செல்லும்போது தந்தை நம்மை பார்த்து,

"நான் ஒரு மகனைத் தான் உலகுக்கு அனுப்பினேன். இப்போது கோடிக்கணக்கான மக்கள் விண்ணகத்துக்கு வந்திருக்கிறீர்கள்.

மட்டற்ற மகிழ்ச்சி."

என்று பூரிப்படைய வேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment