வெள்ளி 24
"தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்."
(மாற்கு நற்செய்தி 3:14)
இயேசு மனிதனாக வாழ்ந்த காலத்தில் நிறைய புதுமைகள் செய்தார்.
நோயாளிகளைக் குணமாக்கினார்,
இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தார்,
அப்பங்ஙளைப் பலுகச் செய்து ஆயிரக்கணக்கான பேருக்கு உணவளித்தார்.
அவர் செய்த புதுமைகளில் மிகப் பெரிய புதுமை எது?
அவர் தேர்வு செய்த பன்னிரு சீடர்கள் தான் அவர் செய்த மிகப் பெரிய புதுமை.
அதில் என்ன புதுமை இருக்கிறது?
ஒரு அலுவலகத்தில் மிகச் சிறிய எழுத்தர் வேலை பார்ப்பதற்கு குறைந்த பட்சம் 12 வருடங்கள் பள்ளியில் படித்திருக்க வேண்டும்.
ஆனால் தனது நற்செய்தியை உலகெங்கும் எடுத்துச் சென்று, போதிப்பதோடு மக்களை நித்திய பேரின்ப வாழ்வுக்குத் தயாரிப்பதற்கு அவர் தேர்வு செய்த சீடர்கள் முறைப்படியான படிப்பறிவு இல்லாதவர்கள்.
வயிற்றுப் பிழைப்புக்காக வேலை செய்து கொண்டிருந்தவர்கள்.
குறைகள் பல நிறைந்தவர்கள்.
இராயப்பர் ஒரு பயந்தாங்கொள்ளி.
இயேசுவின் பாடுகளின் போது தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இயேசுவை மூன்று முறை மறுதலித்தவவர்.
அனைவருமே பயந்தாங்கொள்ளிகள் தான். கெத்சமெனித் தோட்டத்தில் இயேசு கைது செய்யப்பட்ட போது அனைவரும் அவரை விட்டு ஓடி விட்டார்கள்.
ஒருவர் அவிழ்ந்து விழுந்த ஆடையைக் கூட எடுக்காமல் ஓடினார்.
அருளப்பரும் வியாகப்பரும் பதவி ஆசை பிடித்தவர்கள்.
சீமோன் தீவிரவாதிகள் குழுவைச் சேர்ந்தவர். அதாவது அரசியல் புரட்சி செய்து யூதர்களின் அரசியல் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்தவர்.
யூதாசும் அந்தக் குழுவைச் சேர்ந்தவர்தான். அதோடு பண ஆசை பிடித்தவர்.
சீடர்களை மூன்று ஆண்டுகள் தன்னுடனே வைத்திருந்து சுயமாகத் திருந்த கால அவகாசம் கொடுத்தார்.
ஆனால் சுயமாகத் திருந்தவில்லை.
அவர் சிலுவையில் அறையப்பட்டவுடன் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க ஜாண் மார்ட்டின் வீட்டில் பதுங்கிக் கொண்டார்கள். இந்த வீட்டில் தான் இயேசு அவர்களுடன் பாஸ்கா திரு விருந்து அருந்தினார்.
"மரித்த மூன்றாம் நாள் உயிர்ப்பேன்" என்று பல முறை கூறியிருந்தும் அவர்கள் அதை விசுவசிக்கவில்லை.
இயேசு உயிர்த்துவிட்டார் என்று மகதலேன் மரியாள் சொன்னபோது கூட இராயப்பரும் அருளப்பரும் அதை நம்பாமல் அதை உறுதி செய்ய கல்லறைக்கு ஓடினார்கள்.
இரண்டு சீடர்கள் அவர் உயிர்த்ததை நம்பாமல் தமாஸ்கு நகருக்குப் பயணமானார்கள்.
இத்தகைய குறைபாடு உள்ளவர்களை உலகைச் சார்ந்த ஒரு கம்பெனி கூட வேலைக்கு எடுக்காது.
இயேசு தனது ஆன்மீகப் பணிக்கு அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.
இயேசு விண் எய்திய நாற்பதாவது நாள் தூய ஆவி இறங்கி வந்தபோது தான் அவர்கள் குறைகள் நீங்கி வீரர்களாக மாறினார்கள்.
இப்படிப்பட்டவர்களைக் கொண்டு தனது திருச்சபையை உலகின் கடைசி எல்லை வரைக்கும் பரவச் செய்ததுதான் இயேசு செய்த மிகப் பெரிய புதுமை.
இப்போது ஒன்று புரிந்திருக்கும். திருச்சபை உலகெங்கும் பரவியதும், தொடர்ந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதும் மனித சக்தியினால் அல்ல, தூய ஆவியின் வல்லமையால் தான்.
நமது குடும்பங்கள் எப்படிப்பட்டவை என்று நமக்குத் தெரியும்.
இயேசு தனது பணியாற்றினார்களை அவற்றிலிருந்து தான் தேர்வு செய்கிறார்.
அவர்களோடு இருந்து அவர்களை வழி நடத்துகிறார்.
நாம் அவர்கள் மூலமாகத்தான் இயேசுவை அறிந்திருக்கிறோம்.
அவர்கள் உதவியுடன் தான் கிறித்தவர்களாக வாழ்கிறோம்.
இயேசு உலகம் முடியுமட்டும் நம்மோடு வாழ்வதற்காகத்தான் திவ்ய நற்கருணையையும், குருத்துவத்தையும் ஏற்படுத்தினார்.
குருக்கள் தங்கள் சொந்த வல்லமையால் அல்ல,
இயேசு கொடுத்த அதிகாரத்தினால்
நமக்கு நற்செய்தியை அறிவிக்கிறார்கள்,
நமது பாவங்களை மன்னிக்கிறார்கள்,
நமது பாவங்களுக்குப் பரிகாரமாக பலி ஒப்புக் கொடுக்கிறார்கள்,
இயேசுவை நமக்கு ஆன்மீக உணவாகத் தருகிறார்கள்,
நம்மை விண்ணகப் பாதையில் வழி நடத்துகிறார்கள்.
குருக்கள் காட்டும் வழி நடப்போம்.
இயேசுவுக்கு நன்றி கூறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment