Tuesday, January 7, 2025

வியாழன் 09-01-26 "துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்" (மாற்கு நற்செய்தி 6:50)

வியாழன் 09-01-26 

 "துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்" 
(மாற்கு நற்செய்தி 6:50)

சீடர்கள் படகில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இயேசு கடல் மேல் நடந்து வருகிறார்.

சீடர்கள் அவரை அடையாளம் காணாமல் பேய் என நினைத்துப்
பயப்படுகிறார்கள்.

இயேசு அவர்களை நோக்கி,

 "துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்"  என்கிறார்.

இயேசு திட்டம் போட்டே சீடர்களை படகில் அனுப்பிவிட்டு,

அவர்கள் போய்க் கொண்டிருக்கும் போது பின்னால்  கடல் மேல் நடந்து வருகிறார்.

அவர் எதைச் செய்தாலும் அதற்கு ஒரு நோக்கம் இருக்கும்.

ஒரு முறை படகில் சீடர்களோடு பயணித்துக் கொண்டிருக்கும் போது தூங்கிக் கொண்டிருந்தார்.

சீடர்கள் புயலைக் கண்டு பயந்தார்கள்.

இப்போது அவரைப் பார்த்தே பயப்படுகிறார்கள்.

ஒரு வேளை சீடர்களை அச்சத்திலிருந்து விடுவித்து, துணிவில் பயிற்சி கொடுப்பதற்காக அவர் இவ்வாறு செய்திருக்கலாம்.

ஆனால் ஒன்று உண்மை.

நமக்கும் அந்த பயிற்சியைக் கொடுக்க விரும்புகிறார்.

நாம் இந்த வசனத்தை வாசிப்போம் என்று அவருக்குத் தெரியும்.

சீடர்களுக்குக் கூறிய வார்த்தைகள் நமக்கும் பொருந்தும்.

நாம் அநேக சமயங்களில் இயேசுவை அடையாளம் காணாமல் பயப்படுகிறோம்.

அவர் எப்போதும் நம் ஆன்மீகப் பயணத்தில் நம்மோடு தான் வருகிறார்.

பயணத்தின் போது நடப்பவை அவரால் திட்டமிடப் பட்டவையாயிருக்கும்.

நாம் அதைப் புரிந்து கொள்ளாமல் நம்மோடு வரும் அவரையும் அடையாளம் காணாமல் பயப்படுவோம்.

நமது எல்லா செயல்களிலும் வெற்றி நமது நோக்கமாக இருக்கும்.

தேர்வு எழுதினால் வெற்றி பெற வேண்டும்.

வேலைக்கு விண்ணப்பித்தால் வேலை கிடைக்க வேண்டும்.

அதிகமான சம்பளம் கிடைக்க வேண்டும்.

திருமணம் முடிக்க வசதியான துணை கிடைக்க வேண்டும்.

முதலில் ஆண் குழந்தை பிறக்க வேண்டும்.

இன்னும் இது போன்ற அநேக ஆசைகள்.

சில சமயங்களில் நமது ஆசைகள் நிறைவேறுவதில்லை.

கட்டப்பட்டு படித்து தேர்வு எழுதியிருப்போம்.

எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் தோல்வி 
அடைந்திருப்போம்.

உடனே நமக்கு வாழ்க்கையே வெறுத்து விடும்.

நமது விசுவாசம் முழுமையாக இருந்தால்,

எப்போது இயேசு நம்மோடு தான் இருக்கிறார் என்று நாம் நம்பினால்,

அவர் தான் நம்மை வழி நடத்துகிறார் என்று நம்பினால்

நாம் தோல்வியிலும் வெற்றியைக் காண வேண்டும்.

ஏதோ ஒரு நன்மைக்காக நம்முடன் வரும் இயேசு தோல்வியை அனுமதித்திருக்கிறார் என்று நம்ப வேண்டும்.

என்ன நேர்ந்தாலும் நன்றி கூற வேண்டும்.

ஒரு முறை நானும் என் நண்பரும் ஒரு முக்கிய வேலைக்காக நெல்லைக்குச் செல்வதற்காக தென்காசி பேருந்து நிலையத்துக்குப் போனோம்.

பேருந்து வெளியே வரும் வாயில் வழியே உள்ளே நுழைந்தோம்.

பேருந்து புறப்பட்டு வாயிலுக்கு வந்து விட்டது.

கையை அசைத்தோம். ஓட்டுநர் பேருந்தை நிறுத்தவில்லை.

பேருந்தில் உட்கார இடம் இருந்தும் நிறுத்தவில்லை.

''என்ன சார் இப்படி ஆகிவிட்டது? 
ஓட்டுநருக்கு பார்வை இல்லையா?" என்று எனது வருத்தத்தைக் கூறினேன்.

'" எல்லாம் நன்மைக்காகத்தான் இருக்கும்."  நண்பர் ஆறுதல்
கூறினார்.

அரை மணி நேரம் கழித்து அடுத்த பேருந்தில் ஏறிப் பயணித்தோம்.

நாங்கள் ஆலங்குளத்தைத் தாண்டிச் சென்ற போது,

எங்களை விட்டு விட்டுப் போன பேருந்து ஒரு ஆல மரத்தில் மோதி விபத்தாகி நின்றது.

அநேகருக்குக் கை கால் முறிவு.

அப்போது புரிந்தது, பேருந்து எங்களை ஏற்றாமல் போனது எங்கள் நன்மைக்கே என்று.

கை கால் முறிவு ஏற்பட்டவர்களுக்கும் அவர்களைப் பொருத்த மட்டில் ஏதாவது நன்மைக்காகத்தான் இருக்கும்.

அது கடவுளுக்குத் தெரியும்; திட்டமிடுபவர் அவர் தானே.

எல்லா நேரமும் இயேசு நம்மோடு இருந்து வழிகாட்டுகிறார் என்று நாம் விசுவசுத்தால் நாம் எதற்கும் பயப்பட மாட்டோம்.

எப்போதும் துணிவாக இருப்போம்.

நமது உள்ளத்திலிருந்து இயேசு சொல்கிறார், 


''துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்."

விசுவசிப்போம்.

நல்லவர்களாக நடப்போம்.

என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment