புதன் 22
தங்களைத் தாங்களே நேசியாதவர்களால் பிறரை நேசிக்க முடியுமா?
"உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக"
(மாற்கு நற்செய்தி 12:31) என்பது இறைவன் கட்டளை.
"உன்மீது அன்புகூர்வாயாக" என்று இயேசு சொல்லவில்லை.
"உன்மீது நீ அன்புகூர்வது போல்" என்று சொல்கிறார்.
ஏன்?
தன்னைத் தானே அன்பு செய்கிறவர் கடவுள்.
பரிசுத்த தம திரித்துவத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள அன்பைத் தூய ஆவி என்கிறோம்.
தன்னையே அன்பு செய்யும் கடவுள் மனிதனைத் தனது சாயலில் படைத்ததால் அவன் தன்னை அன்பு செய்வது அவனது இயல்பு ஆகிவிட்டது.
ஆகவேதான் "நீ உன்னை அன்பு செய்வாயாக." என்று சொல்லாமலேயே,
"உன்மீது நீ அன்புகூர்வது போல்" என்று சொல்கிறார்.
இப்போது ஒரு கேள்வி எழும்.
கடவுள் அனைவரையும் அன்பு செய்கிறாரே, அவரால் அவருடைய சாயலில் படைக்கப்பட்ட மனிதன் ஏன் அனைவரையும் அன்பு செய்ய மறுக்கிறான்?
உண்மையைப் புரிந்து கொண்டால் இந்தக் கேள்வி எழாது.
கடவுள் தன்னுடைய அனைத்துப் பண்புகளையும் மனிதனோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதன் தனது பாவத்தினால் தன்னிடம் இருந்த இறைச் சாயலைக் பழுது செய்து விட்டான்.
ஆகவே அன்பு இருக்கிறது, பழுதடைந்த நிலையில் இருக்கிறது.
பழுதடைந்த ஒரு பொருளால் அது எதற்காகச் செய்யப்பட்டதோ அதைச் செய்ய முடியாது.
Air போன சைக்கிளில் ஏறிப் பயணிக்க முடியாது.
ஒரு கால் ஒடிந்த நாற்காலியில் உட்கார முடியாது.
கடவுள் அவருடைய படைப்பு என்பதற்காக நம்மை நேசிக்கிறார்.
அதனால் எந்த சூழ்நிலையிலும் அவர் நம்மீது கொண்டுள்ள அன்பு மாறாது.
நாம் நம்மைப் படைத்தவர் என்ற ஒரே காரணத்திற்காக அவரை நேசிக்க வேண்டும்.
அதுதான் உண்மையான அன்பு.
ஆனால் நமது பாவத்தினால் பழுதுபட்ட அன்பு அவரை அவருக்காக நேசியாமல் நமக்கு கேட்பது கிடைக்க வேண்டும் என்பதற்காக நேசிக்கிறோம்.
அது உண்மையான நேசம் அல்ல.
நமது பழுதடைந்த நேசத்தினால் நாம் எப்படி நேசிக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறாரோ அப்படி நேசிக்க முடியாது.
ஆக நம்மையே நம்மால் நேசிக்க முடியாது, விளைவு, நமது அயலானையும் நம்மால் நேசிக்க முடியாது.
கடவுளை உண்மையான அன்பு கொண்டு நேசிக்காததால்தான்
நம்மால் நம்மையும் உண்மையான அன்பு கொண்டு நேசிக்க முடியவில்லை, அயலானையும் அப்படி நேசிக்க முடியவில்லை.
"சர்வேசுரா சுவாமி !.''
தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராகையால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழு மனதோடு நேசிக்கிறேன்."
என்று சொல்கிறோமே!
ஆமா, சொல்கிறோம்.
செபிக்கவில்லை.
உண்மையான செபம் உள்ளத்தில் உதித்து வர வேண்டும்.
மனப்பாடம் செய்து வாயிலிருந்து மட்டும் வரக்கூடாது.
உள்ளத்தில் உண்மையான அன்பை உணர்ந்து
உத்தம மனத்தாபப்பட்டு
பாவ சங்கீர்த்தனம் செய்து
அனைத்துப் பாவங்களுக்கும் மன்னிப்புப் பெற்று விட்டால்
நமது அன்பு பழுது நீங்கும்.
பழுது நீங்கிய அன்புடன் இறைவனை இறைவனுக்காக நேசித்தால்
நம்மையும் இறைவனுக்காக நேசிப்போம்.
நம்மை நாமே இறைவனுக்காக நேசித்தால் நமது அயலானையும்
இறைவனுக்காக நேசிப்போம்.
மூன்று சக்கர வாகனத்தில் மூன்று சக்கரங்களும் ஒரே நேரத்தில் இயங்க வேண்டும்.
ஏதாவது ஒன்று நகர மறுத்தாலும் வாகனம் நகராது.
அதேபோல இறையன்பு, சுய அன்பு, பிறரன்பு மூன்றும் அன்பு என்ற வாகனத்தை இயக்க வேண்டும்.
கடவுள் மீது நமக்குள்ள அன்பும், நம்மீது நமக்குள்ள அன்பும், பிறர் மீது நமக்குள்ள அன்பும் மூன்றறக் கலப்பது தான் உண்மையான அன்பு.
மூன்றும் ஒரே அன்பாக வேண்டும்.
எப்படி?
இறைவனை நேசிக்கும் போது நம்மையும், பிறரையும் நேசிக்கிறோம்.
நமக்குள் இறைவனும், பிறரும் இருப்பதால் நம்மை நேசிக்கும் போது இறைவனையும், பிறரையும் நேசிக்கிறோம்.
மையம் இறையன்பு.
மூன்றும் ஒரே அன்பு என்று எப்படிப் புரிந்து கொள்வது?
அன்பு கொடுக்கிறது.
"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்"
(மத்தேயு நற்செய்தி 25:40)
அன்பின் நிமித்தம் அயலானுக்குக் கொடுப்பதைக் கடவுளுக்கே கொடுக்கிறோம்.
அயலானை அன்பு செய்யும்போது கடவுளையே அன்பு செய்கிறோம்.
இறைவனையும், பிறரையும் நாம் நேசிப்பது அவர் நம்முடன் பகிர்ந்து கொண்ட அன்பினால் தான்.
நம்மை நாமே நேசிக்கா விட்டால் பிறரை நம்மால் நேசிக்க முடியாது.
நம்மை நாமே எதற்காக நேசிக்க வேண்டுமோ அதற்காகத்தான் நாம் நமது பிறரையும் நேசிக்க வேண்டும்.
கடவுள் நம்மை எதற்காக நேசிக்கிறாரோ அதற்காக நம்மை நாம் நேசிக்க வேண்டும்.
நாம் அவருடைய படைப்பு, அதற்காக அவர் நம்மை நேசிக்கிறார்.
நாமும் நாம் கடவுளுடைய படைப்பு என்பதற்காக நம்மை நாம் நேசிக்க வேண்டும்.
அதுபோல நமது பிறனும் கடவுளுடைய படைப்பு என்பதற்காக அவனை நாம் நேசிக்க வேண்டும்.
நாம் இறைவனின் கட்டளைப்படி நடக்க வேண்டும்.
நமது பிறனும் இறைவனின் கட்டளைப்படி வாழ வேண்டும் என்று நாம் ஆசைப்பட வேண்டும்.
அதற்கு நாம் உதவிகரமாய் இருக்க வேண்டும்.
நாம் இறைவனுக்கு பணி செய்ய வேண்டும்.
நமது பிறனும் இறைவனுக்கு பணி செய்ய வேண்டும் என்று நாம் ஆசைப் படுவதோடு அதற்காக அவனுக்கு உதவ வேண்டும்.
நல்ல வாழ்க்கையின் பயனாய் நாம் விண்ணக வாழ்வுக்குள் நுழைய வேண்டும்.
நமது பிறனும் விண்ணகம் வர வேண்டும் என்று நாம் ஆசைப்பட வேண்டும், அதற்கான எல்லா வித உதவிகளையும் அவனுக்குச் செய்ய வேண்டும்.
நாம் இயேசுவுக்காக அர்ப்பண வாழ வேண்டும்.
நமது பிறனும் இயேசுவுக்காக அர்ப்பண வாழ வேண்டும் என்று நாம் விரும்ப வேண்டும்.
காலம் வரும். வரும்போது நமது பிறரோடு விண்ணக வாழ்வு வாழ வேண்டும்.
விண்ணகத்தில் நாமும் நமது பிறனும் இறைவனோடு நித்தியமும் ஐக்கியமாய் வாழ
இவ்வுலகில் நம்மை நாம் தயாரிப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment