Thursday, January 9, 2025

வெள்ளி10-01-25அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, "இவர் யோசேப்பின் மகன் அல்லவா? "எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர். (லூக்கா நற்செய்தி 4:22)


வெள்ளி10-01-25

அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, "இவர் யோசேப்பின் மகன் அல்லவா? "எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர். 
(லூக்கா நற்செய்தி 4:22)

இயேசு பிறந்தது பெத்லகேமில் .

வளர்ந்தது,

 முதல் 3 ஆண்டுகள் எகிப்தில்,

27 ஆண்டுகள் நசரேத் ஊரில்.

பொது வாழ்வின் போது தங்கியது கப்பர்நாகுமில் .

இயேசு அருளப்பரிடம் திருமுழுக்கு பெற்று,

40 நாட்கள் நோன்பு இருந்து,

பசாசினால் சோதிக்கப்பட்ட பின்பு

'
 நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்."
(மத்தேயு நற்செய்தி 4:13)

கப்பர்நாகும் தான் அவருடைய நற்செய்தி போதனையின் மைய இடமாக விளங்கியது.

கப்பர்நாகும் ஒரு கடற்கரை நகரம், மக்களின் தொழில் மீன்பிடிப்பு.

சீமோன், அந்திரேயா,
அருளப்பர், வியாகப்பர் 
 ,ஆகியோர்  இவ்வூரினர். நால்வரும் மீனவர்கள்.

 சீமோனுடைய  மாமியார் ஊரும் இதுதான்.

கப்பர்நாகுமிலிருந்து நற்செய்திப் பணியை ஆரம்பித்தார்.

அதுமுதல் இயேசு, "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றத் தொடங்கினார். 
(மத்தேயு நற்செய்தி 4:17)

கப்பர்நகுமை ஒட்டிய கலிலேயாப் பகுதியில் நற்செய்தியை அறிவித்ததோடு, அங்குள்ள மக்களின் நோய்களைப் புதுமைகள் செய்து குணமாக்கினார்.

அங்கிருந்து இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார்.

   தொழுகைக் கூடத்திற்குச் சென்று   இறைவாக்கினர் எசாயாவின் சுருளேட்டிலிருந்து அவரைப் பற்றி முன்னறிவித்திருந்த வசனங்களை வாசித்தார்.

கப்பர்நாகுமில் அவர் செய்த புதுமைகளைப் பற்றி மக்கள் கேள்விப்பட்டிருந்தனர்.

அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, "இவர் யோசேப்பின் மகன் அல்லவா? "எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.

பாராட்டி என்ன பயன்?

 கப்பர்நாகும் மக்கள் அவரை மெசியாவாகப் பார்த்தார்கள்.

ஆனால் நசரேத் மக்கள் அவரை தச்சனின் மகனாகத் தான் பார்த்தார்கள்.

அவரைப் பற்றி அவர்களுக்கு அவ்வளவுதான் தெரியும்.

அவர் அங்கு வாழ்ந்திருந்தது திருக் குடும்ப வாழ்க்கை.

தச்சுத் தொழில் செய்து வந்த வாழ்க்கை.

அவருடைய உறவினர்களும் அங்குதான் வாழ்ந்தார்கள்.

ஒரு வகையில் அங்கு இயேசு வாழ்ந்தது மறைவு வாழ்க்கை.

பொது மக்களுக்கு அவர் யார் என்று தெரியாத வாழ்க்கை.

இயேசுவும், மரியும், சூசையும் அவ்வூர் மக்களோடு மக்களாக வாழ்ந்தார்கள்.

ஆகவே அவ்வூர் மக்களுக்கு அவர் மேல் விசுவாசம் ஏற்படவில்லை.

''இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?" என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள். 


 இயேசு அவர்களிடம், "சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்" என்றார். 


அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. 

 அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். 
(மாற்கு நற்செய்தி 6:3-6)

ஆகவே அங்கு இயேசு அதிகமாக புதுமைகள் செய்யவில்லை.

மக்கள் அவரை விசுவசிப்பதற்குப் பதில் அவரை மலையிலிருந்து உருட்டிவிட்டு கொல்ல முயன்றார்கள். ஆனால் முயற்சி வெற்றி பெறவில்லை.

நசரேத் ஊர் மக்களிடமிருந்து  நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம்?

அவர்களைப் பொறுத்த மட்டில் இயேசு அவர்களைப் போல்  ஒரு சாதாரண மனிதர்.

ஒரு சாதாரண மனிதரின் அசாதாரணமான பேச்சு அவர்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது, ஆகவே பாராட்டினார்கள்.

ஆனால் அவர் அங்கு வந்தது அவர்களுடைய      பாராட்டைப் பெறுவதற்காக அல்ல,    நற்செய்தி அறிவிப்பதற்காக.

நாமும் அநேக சமயங்களில் அவர்களைப் போல் தானே நடந்து கொள்கிறோம்.

ஞாயிற்றுக் கிழமை திருப் பலிக்குச் செல்கிறோம்.

திருப்பலியின் போது 
பக்தி உணர்வோடு 
பலி பீடத்தையும், குருவானவரையும் பார்க்கிறோம்.

ஆனால் குருவானவரில் நம்மைப் போன்ற மனிதரைப் பார்க்கிறோமா?  பரம பிதாவுக்குத் தன்னையே பலியாக ஒப்புக் கொடுக்கும் இயேசுவைப் பார்க்கிறோமா?

நசரேத் மக்கள் இயேசுவில்  மெசியாவைப் பார்க்கவில்லை, தச்சனின் மகனைத் தான் பார்த்தார்கள்.

குருவானவர் அப்பத்தை இயேசுவாக மாற்றவும், நமது பாவங்களை மன்னிகவும் இயேசுவின் அதிகாரத்தைப் பெற்றவர் என்பதை உணர்கிறோமா?

அவர் பிரசங்கம் வைக்கும் போது அவரது மொழி நடையைப் பாராட்டுகிறோமா? அல்லது ஆன்மீக வழிகாட்டும் இறை வார்த்தையாக எடுத்து, அதன் வழி நடக்கிறோமா?

அநேகர் " பிரசங்கம் Super" என்று பாராட்டுவதோடு சரி.

என்ன சொன்னார் என்பதை விட எப்படிச் சொன்னார் என்று கவனிப்பவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்.

பிரசங்கத்தைக் கேட்டு விட்டு அதன்படி நடப்பவர்களை விட,

அதைப் பற்றி விமர்சனம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடத்தைக் கவனிக்காமல் அவரின் அசைவுகளை விமர்சனம் செய்யும் மாணவர்களைப் போல,

குருவானவர் கூறும் புத்திமதியைக் கவனிக்காமல் அவரை விமர்சனம் செய்பவர்களுக்கு அவரது பிரசங்கத்தால் எந்தப் பயனும் இல்லை, அவர்கள் கோவிலுக்கு வருவதில் அர்த்தமும் இல்லை.

ஆண்டவர் நமது ஆன்மீக நன்மைக்காக அவ்வப்போது சிலுவைகளை அனுமதிக்கிறார்.

அவற்றைப் பற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்காமல் 

நல்ல மனதுடன் ஏற்றுக் கொண்டு, 
பொறுமையுடன் சுமந்து,
 நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

என்ன நடந்தாலும் நமது நன்மைக்காகவே நடக்கும்.

நடப்பதை விமர்சிக்காமல் இறைவனுக்காக ஏற்றுக் கொள்வதுதான் நமது மீட்புக்கான வழி.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment