Monday, January 27, 2025

புதன்29"ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன."(மாற்கு நற்செய்தி 4:8)

புதன்29

"ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன."
(மாற்கு நற்செய்தி 4:8)

உணவின் பயன் உண்பவரைப்
பொறுத்து மாறும்.

அளவோடு உண்பவன் நோய் நொடி இல்லாமல் வாழ்வாள்.
அதே உணவை அளவுக்கு மீறி உண்பவன் வயிற்று வலியால் அவதிப் படுவான்.

பாடப் புத்தகத்தின் பயன் மாணவர்களைப் பொறுத்து. மாறும்.

வாசிப்பவனை விட படிப்பவன் அதிக மதிப்பெண் பெறுவான்.

உப்பின் பயனும் அளவைப் பொறுத்து மாறும்.

அளவோடு போட்டால் உணவு ருசியாக இருக்கும்.
அளவுக்கு மீறி போட்டால் உணவை உண்ண முடியாது.

விதையின் பயன் நிலத்தைப் பொறுத்து மாறும்.

நல்ல நிலத்தில் விழுந்த விதை முளைத்து, தளிர்த்து, வளர்ந்து, மரமாகிப் பூத்து, காய்த்துப் பழுத்து பலன் தரும்.

மோசமான நிலத்தில் விழுந்த விதை முளைப்பதோடு சரி, அதோடு அதன் ஆயுள் out! 

இப்போது எதற்கு இந்தக் கதையெல்லாம்?

இறைவன் அளவற்ற வல்லவர்,
இறைவாக்கும் அளவற்ற வல்லமை உடையது.

வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்."
(லூக்கா நற்செய்தி 1:35)

இது அன்னை மரியாளுக்குக் கொடுக்கப்பட்ட இறைவாக்கு.

அவள் அதை 

 "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று கூறி ஏற்றுக் கொண்டார்.
(லூக்கா நற்செய்தி 1:38)

இறைவாக்காகிய விதை மரியாள் என்ற நல்ல நிலத்தில விழுந்தது.

மனுக் குலத்தின் மீட்பாகிய பலனைத் தந்தது.

இயேசு " என் பின்னாலே வாருங்கள்" என்று அழைக்க சீமோனையும் அழைத்தார்.

இவ்வாறு தான் பன்னிரு சீடர்களையும், யூதாஸ் உட்பட, அழைத்திருப்பார்.

ஆனால் யூதாஸ் அவர் அழைத்ததன் பலனைத் தரவில்லை.

நிலம் சரியில்லை.

இயேசு நசரேத்தூர் சென்று செபக்கூடத்தில் இறைவாக்கினர் எசாயாவின் சுருளேட்டிலிருந்து
வாசித்து விட்டு மக்களை  நோக்கி, 

"நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" என்றார். 

விளைவு என்ன?

கேட்டுக் கொண்டிருந்தவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். 

காரணம், கேட்டவர்களுடைய மனமாகிய நிலம் சரியில்லை.


மூன்று ஆண்டுகளும் இயேசு மக்களிடையே நற்செய்தி என்னும் விதையை விதைத்தார்.

சாதாரண மக்கள், நோயாளிகள் அவரை மெசியா என்று ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் பரிசேயர்களும், மறை நூல் அறிஞர்களும் எதிர் விளைவைத் தந்தார்கள்.

விதைத்தவரையே கொன்று போட்டார்கள்.

ஆனாலும் தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க வல்ல இயேசு அவர்கள் செய்த தீமையிலிருந்து உலக மீட்பு என்னும் நன்மையை வரவழைத்தார்.

ஞாயிறு திருப்பலிக்குச் செல்லும் போதெல்லாம் குருவானவர் பிரசங்க வேளையில் நமக்குள் நற்செய்தி விதையை விதைக்கிறார்.

நாம் வீட்டில் பைபிள் வாசிக்கும் போதும் நமக்குள் நற்செய்தி விதை விதைக்கப் படுகிறது.

நாம் எப்படிப் பலன் தருகிறோம்?

சிந்தித்துப் பார்க்க அழைக்கப் படுகிறோம்.

நமக்குள்ளும் நற்செய்தி விதை விதைக்கப்படுகிறது.

ஒருமுறை மட்டும் அல்ல தினமும்.

நாம் வாசித்த, கேட்ட இறை வாக்குகளை எல்லாம் நாம் வாழ வேண்டும் என்பது தான் இயேசுவின் ஆசை.

நமக்கு எதிராக குற்றம் செய்தவர்களை எல்லாம் மன்னித்தால் அந்த வினாடியே இன்னொரு இயேசுவாக மாறிவிடுவோம்.

மன்னிக்கிறோமா?

மற்றவர்களுக்கு உதவி செய்யும் போதெல்லாம் அன்னை மரியாளாக மாறிவிடுவோம்.

உதவி செய்கிறோமா?

இயேசுவின் இடத்தில் இருந்து நம்மை வழி நடத்துபவர் நமது பங்குக் குரு. அவரது புத்திமதிக்கு எதிர்க் கேள்வி கேட்காமல் கீழ்ப்படிந்தால் நாம் சூசையப்பராக மாறி விடுவோம்.

கீழ்ப்படிகிறோமா?

ஏழ்மையை நமது தோழனாக ஏற்றுக் கொண்டால் பிரான்சிஸ் அசிசிகளாக மாறி விடுவோம்.

ஏழ்மையை ஏற்றுக் கொள்கிறோமா?

நாம் வணங்கும் புனிதர்களும் நம்மைப் போல குடும்பத்தில் பிறந்தவர்கள் தான். அவர்களின் மனம் நல்ல நிலம். அதனால்தான் அதில் விழுந்த இறைவாக்கு அவர்களைப் புனிதர்களாக மாற்றியது.

இயேசு ஆன்மீக சமாதானத்தை ஏற்படுத்தவே உலகில் பிறந்தார்.

அவர் பிறந்த அன்று வான தூதர்கள்,

"நல்ல மனதோர்க்குச் சமாதானம்" என்று பாடினர்.

நமது மனம் நல்லதாக இருந்தால் அதில் விழும் நற்செய்தி விதைகள் நம்மைப் புனிதர்களாக மாற்றும்.

கடவுள் நல்லவர். அவர் நினைவாகவே இருக்கும் மனது நல்ல மனது.

எப்போதும் கடவுளையே நினைத்து வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment