வெள்ளி 17-01-25
அதற்கு இயேசு, "நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும்.
அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்றார்.
(மத்தேயு நற்செய்தி 19:21)
"நிலை வாழ்வு பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவரிடம்
இயேசு "கட்டளைகளைக் கடைபிடியும்" என்று சொன்னார்.
"இன்னும் என்ன செய்ய வேண்டும்" என்று கேட்க
இயேசு, "நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்றார்.
இந்த வசனங்களில் நிலை வாழ்வு பெற இரண்டு வழிகளை இயேசு காண்பிக்கிறார்.
1. உலகில் வாழ்ந்து கொண்டு கட்டளைகளைக் கடைப்பிடித்தல்.
2. உலகை முற்றிலும் துறந்து முழுமையான அர்ப்பண வாழ்வு வாழ்தல்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,
1. இல்லறத்தை நல்லறமாக வாழ்தல்.
2. துறவற வாழ்வு வாழ்தல்.
கட்டளைகளைக் கடைப்பிடித்தால் போதும் என்று கருதுபவர்கள்
கட்டளைகளை மீறாத வகையில் செல்வத்தை ஈட்டலாம்.
உலகில் குடும்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டு,
ஈட்டிய செல்வத்தை இறையன்புப் பணிகளிலும், பிறர் அன்புப் பணிகளிலும் செலவழிக்கலாம்.
செல்வத்தை ஈட்டும் போதும், அதைச் செலவழிக்கும் போதும் இறைவன் கட்டளைகளை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இத்தகைய வாழ்வில் முதலிடம் பெறுவது கட்டளைகள், அடுத்த இடம் பெறுவது செல்வம்.
கட்டளைகளைப் பற்றி கவலைப் படாமல் செல்வம் ஈட்டுபவன் நிலை வாழ்வைப் பெற முடியாது.
"ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் செல்வந்தர்கள் இறையாட்சிக்கு உட்பட முடியாது என்று இயேசு கூறுவது கட்டளைகளை அனுசரியாத செல்வந்தர்களைப் பற்றிதான்.
கட்டளைகளைப் பற்றி கவலைப் படாதவன் செல்வம் சேர்க்க ஏமாற்றுவான், திருடுவான், லஞ்சம் வாங்குவான், இன்னும் இது போன்ற சட்டவிரோத செயல்களைச் செய்வான். இப்படிப்பட்டவன் எப்படி விண்ணகம் செல்ல முடியும்?
சீடர்கள் "அப்படியானால் யார்தாம் மீட்புப் பெறமுடியும்?" என்று கேட்டபோது
இயேசு , " கடவுளால் எல்லாம் இயலும்" என்றார்.
அதாவது கடவுளின் வழிநடத்துதலின் படி செல்வத்தை ஈட்டி, அவர் விருப்பப்படியே செலவழிப்பவன் உறுதியாக விண்ணகம் செல்வான்.
கடவுளின் வழிநடத்துதலின் படி செல்வத்தை ஈட்டுபவன் அவரது கட்டளைகளை மீற மாட்டான்.
செல்வத்தைச் செலவழிக்கும் போது இயேசுவின் இரண்டாவது கட்டளை அவனுக்கு வழிகாட்டும்.
" உன்னை நீ நேசிப்பது போல உன் அயலானையும் நேசி.''
அயலானைத் தன்னைப் போல் நேசிப்பவன் அயலானைப் பட்டினி போட்டு விட்டு தான் மட்டும் சாப்பிடுவானா?
அயலானுக்கு உடை உடுத்தாமல் தான் மட்டும் உடுத்துவானா?
தன்னைப் போல் அயலானை நேசிப்பவன் தனக்குச் செய்வதை எல்லாம் அயலானுக்கும் செய்வான்.
கட்டளைகளின்படி நடக்கும் செல்வந்தர்களால் விண்ணகமே மண்ணகத்துக்கு வந்து விடும்.
அவர்கள் மூலமாக விண்ணகத் தந்தையின் சித்தம் நிறைவேறும்.
விண்ணகத் தந்தை நல்லவர்களுக்கும் உதவி செய்கிறார், கெட்டவர்களுக்கும் உதவி செய்கிறார்.
கட்டளைகளின் படி நடக்கும் செல்வந்தர்களும் அப்படியே செய்வார்கள்.
இறைவன் தந்த செல்வத்தை இறைவனின் கட்டளைகளின் படியே செலவழிப்பார்கள்.
"கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்;
அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள்.
நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்."
(லூக்கா நற்செய்தி 6:38)
இந்த இறை வாக்கு இறைவனின் விருப்பம்.
இருப்பதைப் பகிர்ந்து வாழ்பவர்கள் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்கள்.
அவர்களுக்கு நிலை வாழ்வு உறுதி.
அடுத்தது துறவறம்.
தன்னிடம் இருக்கும் செல்வத்தை முற்றிலும் ஏழைகளுக்குக் கொடுத்து விட்டு,
உலகச் செல்வம் இல்லாத ஏழையாய்
விண்ணகக் செல்வமாகிய அருட் செல்வத்துடன் மட்டும்
இறைவனுக்காக மட்டும் வாழ்பவர் துறவி.
இறைவனின் கட்டளைகள் அனைவருக்கும் பொதுவானவை.
ஆகவே துறவிகளும் இறைவனின்
கட்டளைகள்படிதான் வாழ வேண்டும்.
அதோடு உலகச் செல்வங்கள் இன்றி ஏழைகளாய் வாழ வேண்டும்.
ஏழை என்ற வார்த்தையைச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
இல்லாதிருப்பவன் ஏழை.
இல்லாமை இரண்டு வகைப்படும்.
1. செல்வம் இல்லாமை.
2. செல்வத்தின் மீது பற்று இல்லாமை. (Poor in spirit)
செல்வம் இல்லாதிருந்து அதன் மேல் பற்று இருந்தால் அது செல்வம் இல்லாமை ஆகாது.
பிச்சைக்காரன் கூட மனதளவில் செல்வந்தனாக வாழ்ந்து கொண்டிருப்பான்.
லட்சாதிபதி கூட மனதளவில் ஏழையாக வாழ்ந்து கொண்டிருப்பான்.
துறவிகள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களுக்குச் சொந்தம் கொண்டாடக் கூடாது.
புகை வண்டியில் பயணிப்பவர்கள் அதற்குச் சொந்தம் கொண்டாட முடியுமா?
எளிய உள்ளத்தோராக இருக்க வேண்டும்.
திருக்குடும்பம் இல்லறத்துக்கும், துறவறத்துக்கும் எடுத்துக் காட்டு.
மரியும், சூசையும் திருமணமானவர்கள்.
இயேசு, மரி, சூசை ஆகிய மூவரும் துறவிகள்.
மூவரும் உலகில் தச்சு வேலை செய்து பொருள் ஈட்டி வாழ்ந்தார்கள்.
மூவரும் உலகப் பொருட்கள் மீது பற்று இல்லாமல் வாழ்ந்தார்கள்.
"நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்"
(மத்தேயு நற்செய்தி 19:21)
இயேசுவின் இந்த அழைப்பை ஏற்று உலகப் பொருட்கள் எதுவும் இல்லாமல் வாழ்பவர்கள் துறவிகள்.
இவர்களும் இரண்டு வகையினர்.
1. துறவர சபைகளைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் கற்பு, கீழ்ப்படிதல், தரித்திரம் ஆகிய வார்த்தைப் பாடுகளின் அடிப்படையில் வாழ்கிறார்கள்.
2. மேற்றிராசனக் குருக்கள். இவர்கள் கற்பு
வார்த்தைப்பாடு கொடுப்பதோடு தங்கள் ஆயருக்குக் கட்டுப்பட்டு உழைக்கிறார்கள்.
ஒருவர் உலகப் பொருட்கள் மீது பற்றில்லாதவர் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
ஒருவர் ஒரு பொருளை
அதற்காகவே விரும்பினால் அது பொருளாசை.
அதன் பயன்பாட்டுக்காக மட்டும் அதை வைத்திருக்க வேண்டும்.
அதற்காகவே விரும்புபவர்கள் அது கிடைக்காவிட்டாலும், கிடைத்தது தொலைந்து விட்டாலும் அதற்காக வருத்தப் படுவார்கள்.
பொருளை அதன் பயன்பாட்டுக்காக மட்டும்
வைத்திருப்பவர்களும், அது தங்கள் கையை விட்டுப் போனால் அதைப் பற்றிக் கவலைப் படாதவர்களும் பொருள் பற்று இல்லாதவர்கள்.
பற்றில்லாதவர்கள் ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்கள்.
உலகையே படைத்த இயேசுவே எந்தப் பொருள் மீதும் பற்றில்லாமல் தான் வாழ்ந்தார்.
அவர் பிறந்த மாட்டுத் தொழுவம் கூட உலக ரீதியாக அவருடையது அல்ல.
பொது வாழ்வின் போது தலை சாய்க்கக் கூட அவருக்கு சொந்த இடம் இருந்ததில்லை.
கிடைத்தால் சாப்பாடு, கிடைக்கா விட்டால் பட்டினி.
ஒரு முறை பசியின் காரணமாக அத்திமரத்தில் பழம் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தார்.
பழம் இல்லை. பட்டினிதான்.
அவரது சீடர்களின் கதியும்
அப்படித்தான். ஒரு முறை பசி தாங்க முடியாமல் தானியக் கதிர்களைக் கசக்கித் தின்றார்கள்.
அவர் அறையப்பட்ட சிலுவையும் அவருடையதல்ல,
அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையும் அவருடையதல்ல.
வள்ளுவர் பாடிய "பற்றற்றான்" அவர் தான்.
"பற்றுக பற்றற்றான் பற்றினை."
உலகப் பற்றற்ற இயேசுவின் பாதங்களை நாம் பற்றிக் கொண்டால் நாமும் உலகப் பற்றில்லாமல் வாழலாம்.
இறைவன் மீது மட்டும் பற்று கொள்வோம்.
உலகப் பொருட்களை இறைவன் புகழுக்காகப் பயன்படுத்துவோம்.
"பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு." (350)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment