ஆன்மீக உணவு
,"தாத்தா, வணக்கம்."
"'வணக்கம். புத்தாண்டு எப்படி இருக்கிறது?"
" பிறந்து ஒரு நாள் தானே ஆகிறது. போகப் போகத் தான் தெரியும்.''
"'போகப் போக என்ன தெரியும்? எவ்வளவு தேய்ந்திருக்கிறது என்று தெரியும்.
நேற்றைய கணக்குப் படி
2025க்கு 365 நாட்கள். இன்றைய கணக்குப் படி இன்னும் 364 நாட்கள் தான் உள்ளன."
" மனிதனும் அப்படித் தானே. வயதில் வளர வளர வாழ்நாளில் தேய்ந்து கொண்டு தானே போகிறான்.
பிறந்த வருடமும் ஒரு நாள் முற்றிலும் போய் விடும். பிறந்த மனிதனும் ஒரு நாள் காணாமல் போய் விடுவான்."
"'இப்போ எனது கேள்விகளுக்குப் பதில் சொல்லு."
"பரீட்சையா?"
"'இல்லை, பாடம். எதற்காகச் சாப்பிடுகிறாய்?"
"வளர்வதற்காக"
"'இப்போ கவனி. ஆன்மாவும், உடலும் உள்ளவன் மனிதன். ஆன்மாவும் வளர வேண்டும், உடலும் வளர வேண்டும்.
நாம் சாப்பிடும்போது நமது உடல் வளர்கிறது. நன்கு வளர வேண்டுமென்றால் சத்துள்ள சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும்.
சத்து இல்லாத உணவைச் சாப்பிட்டால் உடல் வளராது.
ஆன்மா வளர என்ன செய்ய வேண்டும்?"
"முதலில் ஆன்மீக வளர்ச்சி என்றால் என்ன என்று சொல்லுங்கள்"
"' நாம் வாழும் பிரபஞ்சத்தையே இயக்கிக் கொண்டிருக்கும் கடவுள் தான் படைத்த மனித உடலை இயக்குவதற்காகத் தன் சாயலில் படைத்த ஜீவன்தான் நமது ஆன்மா.
நமது ஆன்மா கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டது.
கடவுள் தனது பண்புகளை நமது ஆன்மாவோடு பகிர்ந்து கொண்டார்.
கடவுள் தனது பண்புகளில் அளவில்லாதவர்.
ஆகவே அவரால் வளரவோ, தளரவோ முடியாது.
நமது ஆன்மா தனது பண்புகளில் அளவுள்ளது.
நாம் (அதாவது, நமது ஆன்மா) கடவுளால் நம்மோடு பகிரப்பட்ட அன்பு, இரக்கம், நீதி போன்ற பண்புகளில் அளவுள்ளவர்கள்.
நமது பண்புகளில் நாம் வளர வேண்டும் என்பதற்காகத்தான் நம்மை அளவு உள்ளவர்களாகக் கடவுள் படைத்தார்.
நம்மிடம் உள்ள இறை அன்பிலும், பிறர் அன்பிலும், இரக்கத்திலும், நீதியிலும் நாம் வளர வேண்டும்.
முதலில் அந்த பண்புகளை இழந்து விடாதபடி கவனமாக இருக்க வேண்டும்.
நாம் சாவான பாவம் செய்ய நேரிட்டால் அந்த பண்புகளை இழக்க நேரிடும்.
அப்படி நேரிட்டால் பாவங்களுக்காக மனத்தாபப் பட்டு, பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெற்று, இழந்த பண்புகளைத் திரும்பவும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
புரிகிறதா?"
"புரிகிறது. நமது உடல் வளர உணவு உண்கிறோம்.
ஆன்மீகத்தில் வளர என்ன உணவு உண்ண வேண்டும்?"
"'உடல் வளர மண்ணிலிருந்து வந்த சடப் பொருளால் ஆன உணவை உண்கிறோம்.
ஆன்மா வளர விண்ணிலிருந்து வரும், அதாவது, கடவுளிடமிருந்து வரும் ஆன்மீக உணவை உண்ண வேண்டும்."
"ஆன்மீக உணவு என்றால்?"
"'இறைவனுடைய அருள்தான் ஆன்மீக உணவு.
இறையுறவு அருள் (Sanctifying grace) இறைவனோடு நமக்கு உள்ள உறவை வலுப்படுத்தும்.
உதவி அருள் (Actual grace) நற்செயல்கள் செய்ய உதவி செய்யும்.
நமது பாவங்களுக்கு
மனத்தாபப்பட,
பாவ சங்கீர்த்தனம் செய்ய நமக்கு உதவ,
பாவச் சோதனைகளில் வெற்றி பெற,
நமது அயலானை நேசிக்க,
நமது அயலானை மன்னிக்க,
அவனுக்கு வேண்டிய உதவிகள் செய்ய,
இன்னும் இது போன்ற நல்ல செயல்கள் செய்ய
உதவி அருள் உதவும்.
இரண்டு வகை அருள்களும் தான் நமது ஆன்மீக உணவு."
"இந்த உணவுகளை எப்படிப் பெற வேண்டும்?"
"' திருமுழுக்கு மூலமும், பாவ சங்கீர்த்தனம் மூலமும் இறை உறவு அருளைப் பெறுகிறோம்.
இறைவனை வேண்டுவதின் மூலம் உதவி அருளைப் பெறுகிறோம்.
பாவச் சோதனைகள் வரும் போது அவற்றை வெல்வதற்கான அருளை இறைவனிடம் வேண்டிப் பெற வேண்டும்.
"எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்" என்று நாம் விண்ணகத் தந்தையிடம் வேண்டுவது இந்த அருளைப் பெறுவதற்காகத்தான்.
நமக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை மன்னிப்பதற்கும்,
நன்மைகள் செய்வதற்கும் உதவ வேண்டும் என்று இறைவனை வேண்ட வேண்டும்.
நாம் நல்லவர்களாக வாழ உதவ வேண்டும் என்று இறைவனை வேண்ட வேண்டும்.
இறை உதவி இல்லாமல் நம்மால் பிறருக்கு உதவி செய்ய முடியாது.
உதவி அருள் உதவியோடு நற்செபல்கள் புரிந்தால் அவையே நமக்கு இறை அருளைப் பெற்றுத் தரும்.
அந்த அருளின் உதவியோடு தொடர்ந்து நற்செயல்கள் செய்யலாம்.
நமது வாழ்வே நற்செயல்களின் தொடர்ச்சி தான்.
Our spiritual life is an unbroken chain of good acts.
இறைவனுக்காக நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் தற்செயல் தான்.
நாம் மூச்சு விடுவதைக் கூட இறைவனுக்கு ஒப்புக் கொடுத்தால் அதுவும் அருளை ஈட்டும் செயலாக மாறிவிடும்.
நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் "இறைவா, உமக்காக" என்று ஒப்புக் கொடுத்து விட்டால் நமது வாழ்வே நற்செயலாக மாறிவிடும்.
ஒவ்வொரு நற்செயலுக்கும் நமக்கு விண்ணகத்தில் பரிசு உண்டு. அந்தப் பரிசு நிரந்தரமானது.
நற்செயல்கள் இல்லாத விசுவாசம் விசுவாசமே அல்ல.
நமது வாழ்க்கை முழுவதிலும் நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலுமான நமது அத்தனை செயல்களையும் இறைவனுக்காகச் செய்ய வேண்டும் என்பதே இறைவளின் விருப்பம்.
இதைச் செய்ய இறைவனின் அருளுதவி இருந்தால் மட்டும் முடியும்."
"தாத்தா, இன்னும் ஒரு முக்கியமான இறை உணவை மறந்து விட்டீர்களே."
" மறக்கவில்லை தம்பி. அருளின் ஊற்றாகிய இறைவனை விட மகத்தான உணவு இருக்க முடியுமா?
இறைவன் தன்னையே நமது உணவாகத் தருகிறார்.
கவனமாகக் கேள்.
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment