"இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்."
(லூக்கா நற்செய்தி 1:68)
பத்து மாதங்களாகப் பேச முடியாமலிருந்த செக்கரியா தன் மகனின் பெயரை எழுதியவுடன் பேசும் திறனைத் திரும்பப் பெற்றார்.
அவர் விசுவசிக்கத் தயங்கியதால் அவரது நாவைக் கட்டிய கடவுள் அவிழ்த்து விட்டார்.
உடனே தூய ஆவி அவரை நிறப்புகிறார்.
இதிலிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்கிறோம். நாம் தவறு செய்யும்போது கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை, திருத்துகிறார்.
பழைய ஏற்பாட்டில் இஸ்ரேல் மக்கள் தவறு செய்யும்போது அவர்களைத் திருத்துவதற்காக அந்நியர் அவர்கள் மீது படையெடுக்க அனுமதித்தார்.
அதன் விளைவு தான் பாபிலோனிய அடிமைத்தனம்.
நாமும் தவறுகள் செய்யும்போது நம்மைத் திருத்துவதற்காக கட்டங்களை கடவுள் அனுமதித்தால் அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு திருந்த வேண்டும்.
பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு செக்கரியா சொன்ன வார்த்தைகள்,
"இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்."
அவரது வார்த்தைகள் அவருக்கும் பொருந்தும், மக்களுக்கும் பொருந்தும்.
அவருக்கு எப்படி?
''என்னைத் தேடி வந்து பேச முடியாமையிலிருந்த என்னை விடுவித்த கடவுளைப் போற்றுவோம்."
இது அவர் விசுவாசத்தில் உறுதிப்படுத்தப்பட்டு விட்டதைக் காண்பிக்கிறது.
அடுத்து, மக்களைப் பாவக்கட்டிலிருந்து அவிழ்த்து விடுவதற்காக மெசியாவின் முன்னோடியை அனுப்பியதற்காக கடவுளைப் போற்றுகிறார்.
நாமும் இறைவனைப் போற்ற வேண்டும். செக்கரியாவுக்குப் பிறந்திருப்பது நம்மைப் பாவத்திலிருந்து நம்மைத் தேடி விண்ணிலிருந்து மண்ணுக்கு வரவிருக்கும் இயேசுவின் முன்னோடி.
அருளப்பர் பிறந்த ஆறாவது மாதத்தில் இயேசு பிறந்தார்.
செக்கரியா சொன்ன அதே வார்த்தைகளை நாம் இயேசுவைப் போற்றப் பயன்படுத்துவோம்.
விண்ணகத்திலிருந்து மண்ணகம் வந்தார் இறைமகன், நமக்காக.
பாவத்தின் விளைவாக அவரை விட்டு பிரிந்து வந்து விட்ட நம்மைத் தேடி விண்ணகத்திலிருந்து மண்ணகம் வந்திருக்கிறார்.
தேடி வந்திருப்பவரை வரவேற்கிறோமா, அல்லது கண்டும் காணாதது போலிருக்கிறோமா?
தேடி வந்த இடத்தில் நமக்காகப் பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்திருக்கிறார்.
நாம் அவருக்காக என்ன செய்திருக்கிறோம்?
நம்மை அவரது பாடுகளால் நமது பாவங்களிலிருந்து விடுவித்திருக்கிறார்.
எதற்காக?
நாம் புண்ணிய வாழ்வில் வளர்ந்து அவரோடு விண்ணகம் செல்வதற்காக.
புண்ணிய வாழ்வில் வளர்கிறோமா?
விண்ணக வாழ்வுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறோமா அல்லது இவ்வுலகே சதம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?
சிந்தித்துப் பார்ப்போம், செயல்படுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment