Saturday, December 21, 2024

அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். (லூக்கா நற்செய்தி 1:64)

அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். 
(லூக்கா நற்செய்தி 1:64)


எலிசபெத்தின் கணவராகிய செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்த குரு.

எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார்.     ஆகவே முதிர்ந்த வயதிலும் அவர்களுக்கு குழந்தை இல்லை.

 கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கிய அவர்களுக்கு குழந்தை ‌பாக்கியம் கொடுக்க இறைவன் ‌சித்தமானார்.


குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, செக்கரியா ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் சென்று

தூபம் காட்டி செபித்துக் கொண்டிருந்தபோது

கடவுளால் அனுப்பப்பட்ட கபிரியேல் அவருக்குத் தோன்றினார்.


அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார். 


வானதூதர் அவரை நோக்கி, "செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு அருளப்பர் எனப் பெயரிடுவீர் என்றார்.

ஆனால் செக்கரியாவால் அதை நம்ப முடியவில்லை.

அவர் வானதூதரிடம், "இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே" என்றார். 


அதற்கு வானதூதர் அவரிடம், "நான் கபிரியேல்; கடவுளின் திருமுன் நிற்பவன்; உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன். 


இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்; உம்மால் பேசவே இயலாது" என்றார். 

அதுமுதல் அவரால் பேச இயலவில்லை.

எலிசபெத் வானதூதர் கூறியபடி கருத்தரித்தார்.

உரிய காலம் வந்தபோது எலிசபெத் குழந்தை பெற்றார்.

குழந்தைக்கு பெயரிடும் நாள் 
வந்தபோது உறவினர்கள் குழந்தைக்கு அதன் தந்தையின் பெயரையை சூட்ட விரும்பினார்கள்.

எலிசபெத் அருளப்பர் என்று பெயரிட விரும்பினார்.

பேச முடியாத‌ செக்கரியா ஒரு கரும்பலகையில் அருளப்பர் என்று எழுதிக் காட்டினார்.

அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

செக்கரியா நல்லவரதான்.   ஆனால் அவருடைய விசுவாசம் கடவுள் எதிர்பார்த்த அளவு இல்லை.

அன்னை மரியாள், சூசையப்பர் ஆகியோருடைய விசுவாசத்தின் அளவுக்கு அவரது விசுவாசம் இல்லை.

அவருக்குப் பாடம் கற்பிப்பதற்காக குழந்தைக்குப் பெயர் சூட்டும் நாள் வரை அவரது நாவைக் கடவுள் கட்டிப் போட்டார்.

செக்கரியா திருமுழுக்கு அருளப்பரின் தந்தை, ஆலயத்தில் பணிபுரிந்த குரு.

அவரே கபிரியேல் தூதர் அருளப்பரின் பிறப்பு பற்றி அறிவித்தபோது விசுவசிக்கத் தயக்கம் காட்டியதால் 

அவரது நாவைக் கடவுள் பத்து மாதங்கள் கட்டிப் போட்டார்.

‌ஆண்டவர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் விசுவாசத்தோடு நமது விசுவாசத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் நம்மிடம் விசுவாசமே இல்லை.

இறைவனிடம் கேட்டால் கொடுப்பார் என்ற விசுவாசத்தோடு தான் கேட்கிறோம்.

ஆனால் நமது விசுவாசத்தின் அளவு? 

 அதற்கு ஆண்டவர் கூறியது; "கடுகளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, "நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்" எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்."
(லூக்கா நற்செய்தி 17:6)

உண்மையில் நம்மிடம் கடுகளவு விசுவாசம் கூட இல்லை.

நாம் கேட்பது உடனடியாகக் கிடைக்காவிட்டால் நமது விசுவாசத்தை நாம் அதிகரிக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்கள் என்று அர்த்தம்.

"ஆண்டவரே, என் விசுவாசத்தை அதிகப்படுத்தும்" என்பதுதான் நமது முதல் விண்ணப்பமாக இருக்க வேண்டும்.

அது நிறைவேறி விட்டால் வேறு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மாட்டோம்.

"படைத்தவருக்குப் பாதுகாக்கத் தெரியும்" என்ற விசுவாசத்தில் அவரது அன்பில் வளர்வதற்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுப்போம்.

அன்பில் வளர்வோம்.

நமது வாழ்வின் நோக்கமே அது ஒன்றுதான்.

"ஆண்டவரே, என் விசுவாசத்தை அதிகப்படுத்தும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment