உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா? ஆண்டவரே என்றுமுள கடவுள்; அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்; அவர் சோர்ந்து போகார்; களைப்படையார்; அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது.
(எசாயா 40:28)
நாம் நமது வீட்டில் வாழ்கிறோம்.
நமது வீடு ஒரு நாட்டில் இருக்கிறது.
நாடு உலகில் இருக்கிறது.
உலகம் சூரியனைச் சுற்றி வரும் நவகிரகங்களுள் ஒன்று.
நமது சூரியன் ஒரு நட்சத்திரம்.
சூரிய நட்சத்திரம் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்ட நட்சத்திரக் குடும்பத்தில் (Galaxy) ஒரு நட்சத்திரம்.
ஏறத்தாழ 200பில்லியன் நட்சத்திரக் குடும்பங்களைக் கொண்டதுதான் நாம் வாழும் பிரபஞ்சம்.
நட்சத்திரக் குடும்பங்களை ஒவ்வொன்றாக எண்ணினால் அவற்றை எண்ணி முடிக்க 6000 ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தோடு ஒரு மனிதனை ஒப்பிட்டால் மனிதன் எவ்வளவு சிறியவன்!
இந்த சிறியவனுக்காக கடவுள் இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தைப் படைத்தார்!!
கடவுள் நமது முதல் பெற்றோரைப் படைக்குமுன் அவர்களுக்காக, அவர்கள் ஆட்சி செய்வதற்காக இந்த பிரபஞ்சத்தைப் படைத்தார்.
நமது குடும்பங்களில் நமது குழந்தைகள் விளையாடுவதற்காக அவர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கிறோம்.
குழந்தை பிறப்பதற்கு முன்பே தாய் அது அணிவதற்கான உடைகளைத் தைக்க ஆரம்பித்து விடுகிறாள்.
தகப்பன் வெளியூர் போகும் போதெல்லாம் பிறக்கவிருக்கும் குழந்தைக்காக விளையாட்டுப் பொருட்களை வாங்க ஆரம்பித்து விடுகிறார்.
இவ்வாறுதான் கடவுள் மனிதனைப் படைக்கும் முன் அவன் விளையாடுவதற்காக இம்மாபெரும் பிரபஞ்சத்தைப் படைத்தார்.
முதலில் கடவுள், "மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள்,
பழமரங்கள் ,
எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள்,
நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்கள், பசுமையான செடிகள்
ஆகியவற்றைப் பயன்படுத்தக் கொடுத்தார்.
மனிதன் இவற்றை எல்லாம் பயன்படுத்தி முடித்து விட்டு, அதில் திருப்தி கொள்ளாமல் இப்போது பிரபஞ்சத்தின் மற்ற கோள்களையும், நட்சத்திரங்களையும் பயன்படுத்தும் நோக்கோடு அவற்றை ஆராய ஆரம்பித்து விட்டான்.
அவனது விண்வெளிப் பயணங்கள் அதைத்தான் காட்டுகின்றன.
ஆக, ஒரு உண்மை மனித உள்ளத்தில் ஆழப் பதிந்திருக்கிறது.
உலகம் மட்டுமல்ல, உலகம் அமைந்துள்ள பிரபஞ்சமே தனது விளையாட்டு மைதானம் தான் என்ற உண்மை தான் அது.
மனிதன் தன்னையே புத்தியுள்ள விலங்கு
(Rational animal)என்று அழைத்துக் கொள்கிறான்.
உடலளவில் அவனுக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசம் இல்லை.
ஆனால் புத்தி என்ற தத்துவம் மனிதனிடம்தான் உள்ளது.
மனிதனால் மட்டும் தான் சிந்திக்க முடியும், மற்ற விலங்குகளால் சிந்திக்க முடியாது.
புத்தியைக் கொண்டு மட்டுமே சிந்திக்க முடியும்.
காரண காரிய தொடர்புகளைக் கண்டறிவது சிந்தனையின் விளைவு.
சிந்தனையின் விளைவு தான் மனிதனுடைய அறிவியல் முன்னேற்றம்.
மற்ற மிருகங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது போலவே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றில் மனிதன் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறான் என்று நமக்குத் தெரியும்.
நாம் சிறுவர்களாக இருந்தபோது நமது வாழ்க்கை முறை எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பது நமக்குத் தெரியும்.
இதற்கெல்லாம் காரணம் நமது விஞ்ஞான வளர்ச்சி என்பதுவும் நமக்குத் தெரியும்.
ஆனால் ஒன்று நமக்குத் தெரியவில்லை.
விஞ்ஞான வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கிற நமது புத்தி ஏன் மெஞ்ஞான வளர்ச்சிக்கு காரணமாக இருக்க மறுக்கிறது?
விஞ்ஞானம் = விண்+ஞானம்.
மெய்ஞ்ஞானம் = மெய்+ஞானம்.
விஞ்ஞானம்
விண்வெளியில் (Space) இருக்கும் நட்சத்திரங்கள், கிரகங்கள் பற்றிய அறிவு. சடப்பொருட்களைப் பற்றிய அறிவு.
சடப்பொருட்களில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிய அறிவு.( Material knowledge)
இவற்றுக்கு அப்பாற்பட்ட மெய்ப் பொருளாகிய இறைவனைப் பற்றிய அறிவு மெஞ்ஞானம்.
மெய் = உண்மை.
நம்மைப் படைத்த இறைவனை எப்படி அடைவது என்பது பற்றிய ஆன்மீக அறிவு. (Spiritual knowledge)
பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றி தங்கள் புத்தியைக் கொண்டு ஆராய்ந்த விஞ்ஞானிகள் பெரு வெடிப்புக் கோட்பாட்டை (Big Bang theory) கண்டு பிடித்திருக்கிறார்கள்.
இந்தக் கோட்பாட்டின்படி, பிரபஞ்சம் ஒரு காலத்தில் மிகச் சிறிய, மிகவும் அடர்த்தியான மற்றும் மிகவும் வெப்பமான ஒரு புள்ளியாக இருந்தது. பின்னர், ஒரு பெரிய வெடிப்பில், அது விரைவாக விரிவடைந்து இன்றைய பிரபஞ்சமாக மாறியது.
ஆனால் "அந்த மிகச் சிறிய, மிகவும் அடர்த்தியான மற்றும் மிகவும் வெப்பமான புள்ளி" எப்படித் தோன்றியது என்பதற்கான பதில் விஞ்ஞானிகளிடம் இல்லை.
காரணமில்லாமல் காரியம் இல்லை.
விஞ்ஞானத்தில் இல்லாத பதில் மெஞ்ஞானத்தில் இருக்கிறது.
நாம் வாழும் பிரபஞ்சம் தோன்றுவதற்கான ஆதிகாரணர் கடவுள்.
ஆதி காரணர் என்றால் முதல் காரணர்.
அவருக்குக் காரணர் இருக்க முடியாது.
நட்சத்திரங்களுக்கு மனிதனைப் போல புத்தி இல்லை என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியும்.
புத்தியுள்ள மனிதனே தவறு செய்யும்போது
புத்தியில்லாத சடப்பொருளாலான நட்சத்திரங்களும், கோள்களும் அததன் பாதையில் இயற்கை விதிகளுக்குக் கட்டுப் பட்டு சுற்றி வருவதே
அவற்றை இயக்கும் அளவுகடந்த புத்தியுள்ள சக்தியால்தான் என்பது விஞ்ஞானிகளின் புத்திக்கு ஏன் எட்டவில்லை?
அந்த சக்திதான் எல்லாவற்றுக்கும் ஆதி காரணமான கடவுள்.
பெருவெடிப்பு கோட்பாடு பற்றி மெஞ்ஞானிகள் கவலைப் படவில்லை.
அவர்கள் புத்தியில் படுவதெல்லாம் உலகம் எப்படித் தோன்றியிருந்தாலும் அதற்கு முதல் காரணர் கடவுள் என்பதுதான்.
என்றும் வாழும் கடவுள்தான் விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர் என்பதுதான் உண்மையிலேயே உண்மை.
"ஆண்டவரே என்றுமுள்ள கடவுள்; அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்; அவர் சோர்ந்து போகார்; களைப்படையார்; அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது."
(எசாயா 40:28)
என்று எசாயா இறை வாக்கினர் கூறுகிறார்.
"படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவைப் படைத்தான் தன்னை வணங்க."
என்ற தமிழ்ப் பழமொழி நமது பைபிளின் ரத்தினச் சுருக்கம்.
இதை உணர்ந்து விஞ்ஞானிகளும் மெஞ்ஞானத்தை ஏற்றுக் கொள்ள உதவும்படி இறைவனை வேண்டுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment