Tuesday, December 24, 2024

"என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்."(மத்தேயு நற்செய்தி 10:18)


"என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்."
(மத்தேயு நற்செய்தி 10:18)

நேற்று இயேசு பிறந்தார்.

நாம் பிறப்பதில்லை, பெறப்படுகிறோம்.

ஒன்றுமில்லாமல் இருந்த நம்மை இறைவன் திட்டப்படி நம்மை உற்பவிப்பவள் நம் அன்னை, நம்மைப் பெறுவதும் நம் அன்னைதான்.

நாம் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் நம் அன்னை நம்மைப் பெற்றார்கள்.

ஆனால் மரணம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மரியாளின் வயிற்றில் உற்பவித்துப் பிறந்தவர் இயேசு.

மனுக்குலத்தைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக தன்னைச் சிலுவையில் பலியாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பிறந்தவர் அவர்.

நேற்று இயேசு பிறந்த விழாவைக் கொண்டாடிய நாம் இன்னும் 114 நாட்களில்,

18 ஏப்ரல் 2025 ல், புனித வெள்ளிக் கிழமையன்று இயேசுவின் சிலுவை மரணத்தை நினைவு கூறுவோம்.

இயேசுவின் சீடர்கள் அவரைப் போலவே சிலுவையைச் சுமக்க வேண்டும் என்பது அவரது திட்டம்.

ஆகவேதான் தன் சீடர்களைப் பார்த்து,

"என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்."

என்று கூறுகிறார்.

இவ்வார்த்தைகளைக் கூறும்போது அவர் பிலாத்துவின் முன்னும், ஏரோது முன்னும் இழுத்துச் செல்லப்படவிருக்கும் காட்சி அவர் மனதில் ஓடியிருக்கும்.

குருவுக்கு நேர்ந்தது சீடர்களுக்கும் நேரும்.

நாமும் அவருடைய சீடர்கள்தான்.


"என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்."
(மத்தேயு நற்செய்தி 10:22)

முக்காலமும் அறிந்தவர் இயேசு.

இன்று நாம் என்ன சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று இயேசுவுக்கு அன்றே தெரியும்.

அன்று இயேசுவின் காலத்தில் அவருக்கு எதிராகச் செயல்பட்டவர்களில் அவரது இனத்தவர்களும் இருந்தார்கள், அரசும் இருந்தது.

இந்தியாவின் அரசியல் சூழ்நிலை நமக்குத் தெரியும்.

மணிப்பூரில் அரசின் கையில் கிறித்தவம் என்ன பாடு படுகிறது என்பதும் நமக்குத் தெரியும்.

நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்காகவே நம்மை வெறுக்கிறவர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.

திருச்சபையின் 21 நூற்றாண்டு கால வரலாற்றில் இயேசு சொன்ன அத்தனையும் அவரது சீடர்களுக்கு நேர்ந்திருக்கின்றன.

நமக்கும் நேரும்.

ஆனாலும் வேத சாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்து.

நமக்கு நித்திய கால பேரின்ப வாழ்வு காத்துக் கொண்டிருக்கிறது.

அன்று கலிலேயாவிலும், யூதேயாவிலும் நடந்த இயேசு இப்போது நம்மோடு நடந்து கொண்டிருக்கிறார்.

நாம் எதற்கும் பயப்படத் தேவையில்லை.

ஏனெனில் நம்மை வழி நடத்துபவர் சர்வ வல்லவர்.

விசுவாசத்திற்காக நாம் அனுபவிக்கும் துன்பங்கள் நமது நித்திய  பேரின்ப வாழ்வுக்கான விதைகள்.

துன்பங்களுக்கு மத்தியிலும் இயேசுவின் சாட்சிகளாய் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment