Friday, December 6, 2024

அன்னை மரியாளுக்கு நாம் எடுக்கும் விழாக்கள்.


அன்னை மரியாளுக்கு நாம் எடுக்கும் விழாக்கள்.

ஜனவரி 1: கன்னி மரியாள் இறைவனின் தாய்.

பிப்ரவரி 11: லூர்து அன்னை.


மார்ச் 25: இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு.


மே 13: பாத்திமா அன்னை.

மே 31: மரியா எலிசபெத்தை சந்தித்தல்.

ஜூலை 16: கார்மேல் அன்னை.

ஆகஸ்ட் 15: மரியாவின்
 விண்ணேற்பு.


ஆகஸ்ட் 22: கன்னி மரியாள் விண்ணக அரசி.

செப்டம்பர் 8: மரியாவின் பிறப்பு.

செப்டம்பர் 15: வியாகுல அன்னை.

செப்டம்பர் 12: மரியாவின் மிகத்தூய பெயர்.

அக்டோபர் 7: செபமாலை அன்னை.

நவம்பர் 21: மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல்.

டிசம்பர் 8: மரியாவின் அமல உற்பவம்.

டிசம்பர் 12: குவாதலூப்பே அன்னை.

*.   *.    *. *.  *.   *.  *.  *.    *.   *.    *

இன்று டிசம்பர் 8.

அன்னை மரியாள் அவளுடைய தாயின் வயிற்றில் உற்பவித்த நாள் விழா.

அவளுடைய தாயின் வயிற்றில் உற்பவித்ததில் என்ன விசேசம் இருக்கிறது?

நமது முதல் பெற்றோருக்கு வாரிசுகளாகப் பிறந்த அனைத்து மனிதர்களும் 

ஏதேன் தோட்டத்தில் அவர்கள் செய்த பாவத்தின் மாசோடு,
அதாவது சென்மப் பாவத்தோடு உற்பவித்தார்கள், அன்னை மரியாளைத் தவிர.

பரிசுத்தரான இறைமகன் தான் மனுவுரு எடுப்பதற்காக தேர்வு செய்த பெண்ணை,

சென்மப் பாவ மாசின்றி உற்பவிக்கச் செய்தார்.

இது கடவுள் அவளுக்கு அளித்த விசேச வரம்.

இதற்கு இறை வாக்கே ஆதாரம்.


 ''உனக்கும் பெண்ணுக்கும், 

உன் வித்துக்கும் அவள் வித்துக்கும்

 பகையை உண்டாக்குவேன்.

 அவள்  உன் தலையை நசுக்குவாள்."
(தொடக்கநூல் 3:15)

இது பாவத்துக்குக் காரணமான சாத்தானுக்கு கடவுள் கொடுத்த சாபம்,

மரியாளுக்குக் கொடுத்த வரம்.

"உனக்கும் மீட்பரின் தாயாகப் போகும் பெண்ணுக்கும் பகையை உண்டாக்குவேன். 

அவள் உன் தலையை நசுக்குவாள்.

நீ ஏவாளிடம் காட்டிய வேலையை அவளிடம் காட்ட‌ முடியாது.

அவள் வித்தாகிய இறைமகன் உன் வித்தாகிய பாவம் அவளை நெருங்க விடாமல் பாதுகாப்பார்."

மரியாள் பாவ மாசின்றி உற்பவித்தது அவளது சொந்த பலத்தினால் அல்ல.

இறைமகனின் விசேச வரத்தினால்.

இறைமகன் அளித்த வரத்தினால் மரியாள் உற்பவிக்கும்போது மட்டுமல்ல, அவளுடைய வாழ் நாள் முழுவதுமே அவளை அற்பப் பாவ மாசு கூட அணுகவில்லை.

திருமண ஒப்பந்தமான அவளிடம் கபிரியேல் தூதர் மெசியாவின் பிறப்பைப் பற்றி அறிவித்தபோது அவளை

"அருள் நிறைந்தவரே வாழ்க" என்று வாழ்த்தினார்.

கபிரியேல் இறைவனின் தூதர். அவர் சொல்ல வேண்டிய வார்த்தைகளை அவருக்குக் கொடுத்து அனுப்பியவர் கடவுள்.

மரியாளை வாழ்த்துவதற்கு, 

"அருள் நிறைந்த" என்ற வார்த்தைகளைக் கொடுத்து அனுப்பியவர் தந்தை இறைவன்.

மரியாளை அருளால் நிரப்பியவர் அவர்தானே.

தூதர் அருள் மிகுந்த என்று சொல்லவில்லை.

மிகுந்த அதிகமாக என்றுதான் பொருள்படும்.

ஒரு பெட்டியில் நெல் நிறைந்திருந்தால் அதில் நெல்லைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.

முக்கால் பெட்டி நெல் இருந்தால், நெல் மிகுதியாக இருந்தாலும், மீதி கால் பெட்டியில் எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

காற்று கூட இருக்கலாம்.

"அருள் நிறைந்தவரே வாழ்க" என்று கடவுள் கொடுத்து அனுப்பிய வார்த்தைகளால் இறைத்தூதர் வாழ்த்தியதால்

மரியாளிடம் இறை அருளைத் தவிர அதற்கு எதிரான எதுவும் மிகச் சிறிது கூட இல்லை என்பது தெளிவாகிறது.

ஆக இறை வாக்கிலிருந்தே அன்னை மரியாள் மாசு மருவின்றி உற்பவித்து, 

மாசு மருவின்றி வாழ்ந்து, 

மாசு மருவின்றி மரித்தார் என்பது உறுதியாகிறது.

அதாவது அருள் நிறைந்தவளாய் உற்பவித்து,

அருள் நிறைந்தவளாய் வாழ்ந்து,

அருள் நிறைந்தவளாய் மரித்தாள் என்பது உறுதியாகிறது.

எதற்காக மரியாளுக்கு இந்த விசேச வரம்?

ஏனெனில் அவள் கடவுளின் தாய்.

சில பிரிவினை சகோதரர்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இதை மட்டுமல்ல நாம் மாதாவைப் பற்றி என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அவள் ஏன் கடவுளின் தாய்?

ஏனெனில் அவளது வயிற்றில் பத்து மாதங்கள் இருந்து மனிதனாகப் பிறந்தவர் கடவுள்.

கடவுள் தான் மனிதனாகப் பிறந்தார்,

பிறந்தது கடவுள், ஆகவே பெற்றவள் கடவுளின் தாய்.

மனித சுபாவத்துக்குத்தானே தாய் என்பார்கள்.

நமக்கு ஆன்மாவும் உடலும் இருக்கிறது.

நமது அம்மா கருத்தரித்தது நமது உடலை மட்டுமே. ஆன்மா கடவுளால் படைக்கப்பட்டு, உடலோடு சேர்க்கப் பட்டது.

என்னைப் பெற்றவள் என் அம்மா என்கிறோமா?

என் உடலைப் பெற்றவள் அம்மா என்கிறோமா?

மனிதனாகப் பிறந்த இறைமகனுக்கு இரண்டு சுபாவங்கள், தேவ சுபாவம், மனித சுபாவம்.

மனித சுபாவத்துக்கு‌ உரியவர் கடவுள்.

இயேசு கடவுள், ஆகவே இயேசுவின் தாய் கடவுளின் தாய்.

பரிசுத்தரான கடவுள் தன் தாயை பரிசுத்தமானவளாகப் படைத்தார்.

அருளே உருவான கடவுள் தன் தாயை அருள் நிறைந்தவளாகப் படைத்தார்.

ஆகவே நாம் நமது விண்ணகத் தாயை

"அருள் நிறைந்த மரியே வாழ்க." என்று தான் வாழ்த்த வேண்டும்.

நாம் மரியாள் பக்தர்கள்.

குருவைப் போல வாழ்பவன் தான் உண்மையான சீடன்.

தனது பக்திக்கு உரியவர்போல் வாழ்பவன் தான் உண்மையான பக்தன்.

"விண்ணகத் தந்தையைப் போல் நிறைவு உள்ளவர்களாக வாழுங்கள்." என்கிறார் இயேசு.

"Be perfect as your Heavenly  Father is perfect."

விண்ணகத் தந்தை அளவில்லாதவர்.

நாம் அளவுள்ளவர்கள்.

நாம் அளவுள்ளவர்களாக இருந்தாலும் நமது அளவில் நிறைவு உள்ளவர்களாக வாழ வேண்டும்.

மரியாளின் பக்தர்கள் மரியாளைப் போல அருள் வாழ்வு வாழ வேண்டும்.

அவள் அருள் நிறைந்தவள்.

அவள் அளவு நம்மால் வாழ முடியாது.

ஆனால் நம்மால் இயன்ற இறை அருளுக்கு எதிரானவற்றைத் தவிர்த்து இறை அருளில் வளர வேண்டும்.

அவள் தன்னையே இறைவனுக்கு அடிமையாக அர்ப்பணித்தது போல நம்மை நாமே இறைப்பணிக்கு அர்ப்பணித்து வாழ வேண்டும்.

செபமாலையைச் சொன்னால் மட்டும் போதாது.

அதில் தியானிப்பது போல வாழ வேண்டும்.

தாயைப்போல பிள்ளை‌ என்ற பழமொழிக்கு ஏற்ப நாமும் நம் அன்னையைப் போல் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment