மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.
(லூக்கா நற்செய்தி 1:41)
எலிசபெத் கருத்தரித்திருந்தது கபிரியேல் தூதர் சொல்லித்தான் மரியாளுக்குத் தெரியும்.
மரியாள் கருத்தரித்திருந்தது வேறு யாருக்கும் தெரியாது.
மரியாளின் அம்மாவும், எலிசபெத்தும் சகோதரிகள்.
எலிசபெத் கருத்தரித்திருப்பதை இறைத்தூதர் வழியாகக் கேள்விப் பட்ட மரியாள் தன் சித்தியைப் பார்ப்பதற்காக அவள் ஊருக்குச் செல்கிறாள்.
சென்று செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்துகிறார்.
மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று.
எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.
தூய ஆவியின் உள்தூண்டுதலால் மரியாள் இறைமகனை மனுமகனாகக் கருத்தரித்திருப்பதை உணர்கிறாள்.
உணர்ச்சி வசப்பட்டு அவர் உரத்த குரலில்,
"பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! "
என்று வாழ்த்துகிறார்.
நால்வருள் யார் யார் முதலில் சந்தித்துக் கொள்கிறார்கள்?
மரியாள் எலிசபெத்தை வாழ்த்திய போது அவளுக்கு மரியாள் உண்டாகியிருப்பது தெரியாது.
முதலில் சந்தித்துக் கொண்டவர்கள் இயேசுவும் அருளப்பரும் தான்.
இயேசு அருளப்பரைச் சந்தித்தவுடன் அவர் இருந்த எலிசபெத்தை தூய ஆவியானவர் நிறப்ப,
இரண்டு நிகழ்வுகள் நடக்கின்றன.
1.தூய ஆவியானவர் அருளப்பருக்கு சென்மப் பாவத்திலிருந்து விடுதலை கொடுக்கிறார்.
அந்த மகிழ்ச்சியில் அவர் துள்ளுகிறார்.
2. தூய ஆவியானவர் இறைமகன் மனுவுரு எடுத்த செய்தியை எலிசபெத்துக்குத் தெரிவிக்கிறார்.
அந்த மகிழ்ச்சியில் அவர்,
"பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே." என்று வாழ்த்தியதோடு,
"என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?" என்கிறார்.
இயேசுவின் முன்னோடியின் தாயாக இருக்க இறைவன் எலிசபெத்தைத் தேர்வு செய்திருக்கிறார்.
அதுவே பெருமைக்குரிய விடயம்.
ஆனால் அவர் தாழ்ச்சியுடன்,
"என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?"
என்கிறார்.
இவ்வளவுக்கும் எலிசபெத் வயதானவர். மரியாள் 14 வயது பெண்.
ஆனாலும் தாழ்ச்சியில் மரியாள் எலிசபெத்துக்கும் முந்தி விட்டாள்.
தான் கடவுளின் தாய் என்று தெரிந்திருந்தும் ஒரு சாதாரணப் பெண்ணுக்கு மூன்று மாதங்கள் பணிவிடை செய்தாள்.
இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள்.
இருவரிடமிருந்தும் நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம்?
1.தாழ்ச்சி.
இறைமகனையே தன் மகனாக வயிற்றில் சுமந்து கொண்டிருந்த மரியாள் தன்னை ஆண்டவரின் அடிமை என்று ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் அடிமை போல் உதவிகரமாக இருக்க மலை நாட்டுக்கு ஏறி வந்திருக்கிறாள்.
வயது முதிர்ந்த எலிசபெத் 14 வயது பெண்ணை மரியாதை குறையாமல் வரவேற்கிறார்.
புண்ணியங்களின் அரசியாகிய தாழ்ச்சியை இருவரிடமிருந்தும் கற்றுக் கொள்வோம்.
2. அன்னை மரியாளிடமிருந்த பிறரன்புப் பணி ஆர்வம்.
எலிசபெத் வாழ்ந்த மலை நாடு நாசரேத்திலிருந்து ஏறத்தாழ 80 மைல் தொலைவில் உள்ளது.
இப்போதுள்ள போக்குவரத்து வசதிகள் அப்போது இல்லை.
குழந்தை உண்டானவர்கள் அதிக தூரம் பயணிக்கக் கூடாது என்று சொல்வார்கள்.
மரியாள் வயிற்றில் குழந்தையோடு 80 மைல்கள் தனியாக நடந்து சென்று எலிசபெத்துக்குச் சேவை செய்தாள் என்றால்
அவளிடம் எவ்வளவு பிறரன்புப் பணி ஆர்வம் இருந்திருக்க வேண்டும்!
அதில் பாதி ஆர்வமாவது நம்மிடம் இருக்க வேண்டாமா?
3. இவ்வளவு ஆர்வத்தை அவளுக்குக் கொடுத்தது யார்?
அவள் வயிற்றில் இருந்த குழந்தை இயேசு.
அதே இயேசுவை நாமும் நமது உள்ளத்தில் ஏற்று, நிரந்தரமாகக் குடியமர்த்தினால் நமக்கும் அந்த ஆர்வம் தானாக வந்து விடும்.
அடிக்கடி திருப்பலியில் பங்கேற்று நற்கருணை ஆண்டவரை வரவேற்பவர்களுக்கு உறுதியாக பிறர் அன்புப் பணியில் ஆர்வம் இருக்கும்.
ஏனெனில் அன்புப் பணி இயேசுவுக்கு உயிர்.
தன் உயிரைப் சிலுவையில் பலியாக்கி நமக்குப் பணியாற்றியவர்.
இயேசுவின் வாழ்வை நமதாக்கிக் கொண்டாலே நாம் பிறரன்புப் பணியாளர்களாக மாறிவிடுவோம்.
திருமுழுக்குப் பெற்றவுடனே நாம் தூய ஆவியின் ஆலயமாக மாறி விடுகிறோம்.
தூய ஆவி தனியாக குடியிருக்க மாட்டார். தந்தையும் மகனும் சேர்த்துதான் இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் மூவரும் ஒரே கடவுள்.
திருமுழுக்கு பெற்றபோது நாம் அடைந்த பரிசுத்தத்தனத்தை நாம் இழக்காமல் இருந்தாலே நமக்குக் கடவுளோடு உறவு இருக்கும்.
கடவுளோடு உறவு இருந்தாலே நம்மிடம் பிறரன்புப் பணி ஆர்வம் இருக்கும்.
அதற்குப் பாவத்தை விலக்கி, புண்ணிய வாழ்வில் வளர வேண்டும்.
அன்னை மரியாளையும், எலிசபெத்தையும் போல இறையன்பிலும், பிறரன்பிலும் வளர்வோம்
பிறருக்குப் பணி புரிவதன் மூலம் இறைவனுக்குப் பணி புரிவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment