"உலகின் மீதும் அதிலுள்ளவை மீதும் அன்பு செலுத்தாதீர்கள். அவ்வாறு அன்பு செலுத்துவோரிடம் தந்தையின்பால் அன்பு இராது."
(1அரு. 2:15)
ஒருவரிடம் இரண்டு பொருட்களைக் காண்பித்து,
"இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்." என்று சொன்னால் அவருக்கு எது நல்லது எனப் படுகிறதோ அதைத் தேர்வு செய்வார்.
இரண்டு பொருட்களின் தன்மையை விளக்கி அதன் பின்
"தேர்வு செய்யுங்கள்." என்று சொன்னால் நல்ல தன்மை உள்ளதைத் தேர்வு செய்வார்.
இறைவன் மனிதனைப் படைக்கும் போதே தனது பண்புகளை அவனோடு பகிர்ந்து கொண்டார்.
அவற்றுள் ஒன்று அன்பு, மிக முக்கிய பண்பு.
இறைவன் அன்பு மயமானவர்.
நம்மோடு அன்பைப் பகிர்ந்து கொண்டதால் நாம் இயல்பிலேயே அன்பு உள்ளவர்கள்.
ஒரு ஒப்புமை.
நாம் உயிர் வாழ சாப்பிடுகிறோம்.
சாப்பாட்டின் நோக்கம் சாப்பிடுவது அல்ல.
சிலர் உயிர் வாழும் நோக்கத்தோடு அல்லாமல் ருசிக்காக மட்டும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்.
அதனால் ஏற்படும் வயிற்றுக் கோளாறுகள் அவர்கள் உயிர் வாழ்வதையே கேள்விக்குறி ஆக்கிவிடும்.
கடவுள் நம்மைப் படைத்து இவ்வுலகில் விட்டது இதைப் பயன்படுத்தி விண்ணக வாழ்வை அடைவதற்காகத்தான்.
இரலில் பயணிப்பது இரயில் மேல் உள்ள ஆசையினால் அல்ல.
போக வேண்டிய ஊருக்குப் போவதற்காக.
நாம் போக வேண்டிய ஊர் மோட்சம்.
நாம் அன்பு செய்ய வேண்டியது மோட்சத்திலுள்ள நமது தந்தை இறைவனை, நாம் பயணித்துக் கொண்டிருக்கும் உலகத்தை அல்ல.
உலகத்தை அன்பு செய்தால் இறைவனை உரிய முறையில் அன்பு செய்ய முடியாது.
இறைவனை அன்பு செய்யாதவர்களுக்கு அவரும் கிடைக்க மாட்டார், அவர்கள் அன்பு செய்த உலகமும் கிடைக்காது.
அதனால் தான் அருளப்பர் சொல்கிறார்,
"உலகின் மீதும் அதிலுள்ளவை மீதும் அன்பு செலுத்தாதீர்கள். அவ்வாறு அன்பு செலுத்துவோரிடம் தந்தையின்பால் அன்பு இராது."
கையில் நூறு ரூபாய் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
சாப்பிட ஹோட்டலுக்குப் போகிறோம்.
சாப்பாடு நூறு ரூபாய்.
சாப்பாடு வேண்டுமென்றால் நூறு ரூபாயை இழக்க வேண்டும்.
நூறு ரூபாய்தான் வேண்டுமென்றால் சாப்பாட்டை இழக்க வேண்டும்.
உலகப் பொருட்களைத் தியாகம் செய்தால்தான் மோட்சம் கிடைக்கும்.
கடவுள் நம்மிடம் உலகப் பொருட்களைத் தந்திருப்பது அவற்றைப் பிறரன்புப் பணிகளில் செலவழிக்க, கையில் பொத்தி வைத்துக் கொள்வதற்காக அல்ல.
இதை நினைவில் வைத்துக் கொண்டு உலகில் இறைவனுக்காக வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment