Wednesday, December 25, 2024

"உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக.''


"உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக.''

நமது ஆண்டவராகிய இயேசு நமக்குக் கற்பித்த செபத்தில் நாம் செய்ய வேண்டும் என்று அவர் விரும்பும் முதல் மன்றாட்டு.


விண்ணுலகத்தில் இருக்கின்ற எங்கள் தந்தையே!  

"உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக."

கர்த்தர் கற்பித்த செபத்தில் மொத்தம் ஏழு மன்றாட்டுக்கள் அடங்கியுள்ளன.

மன்றாட்டுக்களை ஆரம்பிக்கும் முன் இயேசு தனது தந்தையை நமது தந்தையாக அழைக்கச் சொல்கிறார்.

தந்தை இறைவன் நித்திய காலமாகப் பெறுவது ஒரே மகனைத்தான்.

அந்த ஒரே மகனை அருளப்பர் வார்த்தை என்று அழைக்கிறார்.

உரிமையின் அடிப்படையில் வார்த்தைக்கு மட்டும் தான் இறைவன் தந்தை.

மனுவுறு‌ எடுத்த வார்த்தையானவர் அவரது தந்தையை  "எங்கள் தந்தையே" என்று அழைக்கும் உரிமையை நமக்குத் தந்திருக்கிறார்.

அதன் மூலமாக அவரது இல்லமாகிய விண்ணகத்திற்கு நம்மையும் உரிமையாளர்கள் ஆக்கியிருக்கிறார்.

இறைவன் நமக்குத் தந்தை.
விண்ணகம் நமது வீடு.

இறைவன் நமது தந்தை என்று அறிந்தபின் பிள்ளைகள் என்ற உரிமையோடு நமக்கு வேண்டியதை அவரிடம் கேட்கலாம்.

இனி முதல் மன்றாட்டுக்கு வருவோம்.

"உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக.''

1. உமது பெயர் 
2. தூயது எனப் போற்றப் பெறுக.

நமது விண்ணகத் தந்தையின் பெயர் என்ன?

எதற்காக நமது பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுகிறோம்?

அழைப்பதற்காக.

ஒருவர் தனியே ஆளே இல்லாத காட்டில் வசிக்க நேர்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

அவருக்குத் பெயர் தேவையில்லை, ஏனெனில் அவரை அழைக்க காட்டில் யாருமில்லை.

துவக்கமும் முடிவும் இல்லாதவர் கடவுள்.

அவர் நம்மைப் படைக்கும் முன் அவரைத் தவிர யாரும் எங்கும் இல்லை.

அவர் மட்டும் இருக்கிறார்.

அவரை அழைக்க யாருமில்லை.

நாம் படைக்கப்பட்ட பின் நாம் அவரை அழைப்பதற்கு அவருக்கு பெயர் பெயர் தேவை.

மோசே கடவுளிடம்,

"உமது பெயர் என்ன?" என்று கேட்டபோது 

"இருக்கின்றவர் நானே" என்று பதில் சொன்னார்.

இது பள்ளிக்கூடத்தில் ஒரு பையனைப் பார்த்து, "நீ யார்?"
என்று கேட்டால், "நான் ஒரு மாணவன்" என்று சொல்வது போல.

நாம் செயலை வைத்து அவரை அழைக்கிறோம்.

தமிழர்களாகிய நாம் நம்மைப் படைத்தவர் அனைத்தையும் "கடந்து", அனைத்தின் "உள்ளும்" இருப்பதால் அவரை,

"கட+உள்=  கடவுள்" என்று அழைக்கிறோம்.

ஒவ்வொரு மொழி மக்களும் அவர்கள் மொழியில் அவருக்குப் பெயர் வைத்திருப்பார்கள்.

நம்மைப் பொறுத்த மட்டில் நம்மைப் படைப்பால் பெற்றவர் நமது தந்தை.

ஒரு சிறு பிள்ளையிடம், " உன் அப்பாவின் பெயர் என்ன?" என்று கேட்டால் "அப்பா" என்று தான் சொல்லும்.

"தூயது" என்றால் பரிசுத்தமானது.

"பெயர் தூயது" என்றால் பெயருக்கு உரியவர் தூயவர், அதாவது பரிசுத்தமானவர், அதாவது ஒரு சிறு தவறு கூட இல்லாதவர்.

"போற்றப் பெறுக" என்றால் புகழப் படுக.

நமது தந்தை அவரது எல்லாப் பண்புகளிலும் அளவில்லாதவர்.

அவர் அளவில்லாத அன்பு உள்ளவர்.

அளவில்லாத வல்லமை உள்ளவர்.

அளவில்லாத விதமாய் பரிசுத்தமானவர்.

அளவில்லாத புகழ் உடையவர்.

அளவில்லாத ஒன்றை நம்மால் கூட்ட முடியாது.

நம்மால் அவரது புகழைக் கூட்ட முடியாது.

நாம் அவரைப் போற்றாவிட்டால் அவரது புகழ் மங்கி விடுமா?

நம்மால் அவரது புகழைக் கூட்டவும் முடியாது, குறைக்கவும் முடியாது.

நம்மால் செய்ய முடியாத ஒன்றை ஏன் செய்க என்கிறோம்?

இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவில் ஒரு அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கடவுள் நம்மைப் படைத்தது நமது நன்மைக்காக, அவரது நன்மைக்காக அல்ல.

அவர் இயல்பாக இருக்கிறார்,
நாம் அவரால் இருக்கிறோம்.

நாம் அவரை விட்டுப் பிரிந்தால் நமக்கு தான் நட்டம், அவருக்கல்ல.

அவரை நேசிக்கும் போது பயன் பெறுவது நாம் தான்.

அவரை நேசிக்காவிட்டால் இழப்பு நமக்கு தான்.

அவரது புகழை அதிகரிக்க முடியா விட்டால் ஏன் " உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக.'' என்கிறோம்?

அதுவும் நமது நன்மைக்குதான்.

நமக்கு என்ன நன்மை?

நாம் எதற்காகப் படைக்கப் பட்டிருக்கிறோம்?

"இறைவனை அறிந்து, அவரை நேசித்து, அவரோடு வாழ விண்ணகம் செல்ல."

விண்ணகம் செல்வதற்கே மண்ணகத்தில் படைக்கப் பட்டிருக்கிறோம்.

நாம் விண்ணகம் செல்ல வேண்டும் என்றால் கடவுளை அறிந்து அவரை நேசித்து அவருக்கு சேவை செய்து வாழ வேண்டும்.

இவ்வாறு வாழ வரம் கேட்பதுதான் முதல் மன்றாட்டு.

அதெப்படி?

அதற்கான வார்த்தைகள் எதுவும் மன்றாட்டில் இல்லையே!

வார்த்தைகள் இல்லை, ஆனால் கருத்து இருக்கிறது.

ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறார்.

அவர்களைப் பொதுத்தேர்வுக்குத் தயாரிக்கிறார்.

மாணவர்கள் தங்களது வெற்றிச் சதவீதத்தால் ஆசிரியரின் உழைப்பைப் போற்றுகிறார்கள்.

மகன் சான்றோனாக வாழ்ந்தால் பெற்றோரை எல்லோரும் போற்றுவார்கள்.

இயேசுவை அறியாத மக்களிடையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்ந்தால் அதுதான் இயேசுவை மக்களிடம் கொண்டு செல்லும்.

தந்தையின் பெயர் மற்றவர்களால் போற்றப்பட வேண்டுமென்றால் பிள்ளைகள் நல்லவர்களாக வாழ வேண்டும்.

''தந்தையே, உமது மக்களாகிய நாங்கள் நல்லவர்களாக வாழ்ந்தால் அது உமது பெயரைப் போற்றுவதற்குச் சமம்.

உமது பெயர் தூயது எனப் போற்றப் படுக.

அதாவது நாங்கள் உமது மக்களுக்குரிய தரத்தோடு வாழ எங்களுக்கு வரம் தாரும்.

உமது உதவியின்றி நாங்கள் நல்லவர்களாக வாழ முடியாது.

நல்லவர்களாக வாழ எங்களுக்கு உதவும்."

நாம் நமது நல்ல வாழ்க்கையின் மூலம்தான் நமது தந்தையின் பெயரைப் போற்ற வேண்டும்.

"உமது பெயர் பெயர் தூயது எனப் போற்றப் படுக.

உமது பெயர்  தூயது என மக்களால் போற்றப் படும் வகையில் நல்லவர்களாக வாழ எங்களுக்கு வரம் தாரும்.''

இதுதான் நமது முதல் மன்றாட்டு.

நாம் கர்த்தர் கற்பித்த செபம் சொல்லும் போதெல்லாம் நாம் தந்தையின் விருப்பப்படி நல்லவர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும்.

அந்த எண்ணம் செயலாக மாற வேண்டும்.

நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் தந்தையின் பெயர் போற்றப்படும் படி வாழ வேண்டும்.

நாம் தூயவர்களாக வாழ்ந்தால் நம்மைச் சுற்றி வாழ்பவர்கள் நம்மை வழி நடத்தும் கடவுள் தூயவர் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

நம்மைப் பார்ப்பவர்கள் நம்மில் வாழும் இறைவனையும் பார்க்க வேண்டும்.

தந்தையின் சித்தப்படி வாழ்வதன் மூலம் அவர் பெயரைப் போற்றுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment