Thursday, December 12, 2024

ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; "எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிட மகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்" என்றார். (மத்தேயு நற்செய்தி 17:12)

ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; "எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிட மகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்" என்றார். 
(மத்தேயு நற்செய்தி 17:12)

உயிரோடு விண்ணகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட எலியா இயேசுவின் இரண்டாவது வருகைக்கு முன் உலகுக்கு வந்து மக்களைத் தயாரிப்பார் என்பது நமது நம்பிக்கை.

இயேசுவின் இரண்டாவது வருகை எப்போது இருக்கும் என்று கடவுளுக்கு மட்டும் தான் தெரியும்.

மனிதர் யாருக்கும் தெரியாது.

ஆகவே எலியா‌ எப்போது வருவார் என்பதும் யாருக்கும் தெரியாது.

"ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; "எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை."

என்று இயேசு கூறுகிறார்.

இங்கே இயேசு குறிப்பிடுவது திருமுழுக்கு அருளப்பரை.

திருமுழுக்கு அருளப்பர் எலியா அல்ல என்பது இயேசுவுக்குத் தெரியும்.

தெரிந்தும் இயேசு ஏன் அப்படிச் சொன்னார்?

எலியா இயேசுவின் இரண்டாவது வருகைக்கு முன் வருவார், அதற்கு ஆயத்தம் செய்வதற்காக.

இயேசுவின் முதல் வருகைக்கு முன் அதற்கு ஆயத்தம் செய்வதற்காக முன்னோடியாக வந்தவர் அருளப்பர்.

எலியாவின் நோக்கமும், அருளப்பரின் நோக்கமும் ஒன்றுதான், இயேசுவின் வருகைக்காக ஆயத்தம் செய்வது.

அதற்காகத்தான் இயேசு மரியாளின் வயிற்றில் உற்பவிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே அருளப்பர் எலிசபெத்தின் வயிற்றில் உற்பவித்து விட்டார்.


'ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்."
(லூக்கா நற்செய்தி 1:26)

இயேசு போதிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே அருளப்பர் போதிக்க ஆரம்பித்தார்.

இயேசுவும் அருளப்பரிடம் வந்து திருமுழுக்குப் பெற்ற பின்பு தான் தனது பொது வாழ்க்கையை ஆரம்பித்தார்.

ஆக,  எலியா செய்யவிருக்கும் தயாரிப்பு வேலையை அருளப்பரும் செய்ததால்தான் இயேசு அவரை எலியா என்று அழைத்தார்.

"மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிட மகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்" என்றார்."

இயேசு தன்னுடைய வருகைக்கு தயாரிக்க வந்தவருக்கு என்ன நேர்ந்தது என்பதைச் சுட்டிக்காட்டி விட்டு தனக்கும் அவ்வாறே நேரும் என்பதைத் தன் சீடர்களிடம் கூறுகிறார்.

"அவ்வாறே மானிட மகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்"

என்று தனது பாடுகளை முன்னறிவிக்கிறார்.

இது தனது பாடுகளுக்காகச் சீடர்களைத் தயாரிப்பதற்காக.

சீடர்களுக்கு இயேசு இறைமகன் என்பது தெரியும்.

சீடர்கள் அவரை யூதர்களின் அரசர் என்ற ரீதியில் அவரைப் பற்றி நிறைய கற்பனைகள் வைத்திருந்தார்கள்.

அந்த கற்பனையின் அடிப்படையில் தான் யாக்கோபும், அருளப்பரும் அவரிடம் பதவிகள் கேட்டார்கள்.

''செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், "போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்" 

நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்" என்று வேண்டினர். 
(மாற்கு நற்செய்தி 10:35,37)

ஆகவே தான் உலகுக்கு வந்ததன் நோக்கத்தைப் புரிய வைப்பதற்காக அப்பப்போ தனது பாடுகளைப் பற்றி அவர்களுக்கு நினைவு படுத்திக் கொண்டிருந்தார்.

ஆனால் அவர்கள் அதைச் சரியாகப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

புரிந்து கொண்டிருந்தால் பாடுகளின்போது அவரை விட்டு ஓடிப் போயிருக்க மாட்டார்கள்.

இயேசு சொன்ன பதில் சீடர்கள் கேட்ட கேள்விக்கு.

இயேசுவின் பதிலிலிருந்து நாம் என்ன அறிந்து கொள்ள வேண்டும்?

எலியா ஒரு இஸ்ரேல் இறைவாக்கினர். இஸ்ரேல் மக்களுக்கு இறைச் செய்தியை அறிவித்தவர்.

ஆனால் இறைச்செய்தி அனைத்து மக்களுக்கும் பொதுவானது.

யூத மரபில் பிறந்த இயேசு யூதேயா, கலிலையா, சமாரியா பகுதிகளில் நற்செய்தியை அறிவித்து விட்டு 

உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்க தனது சீடர்களை அனுப்பினார்.

இன்று சகல நாட்டவரும் நற்செய்திப் பணியைச் செய்து வருகிறார்கள்.

இயேசுவின் இரண்டாம் வருகை அனைவருக்கும் பொதுவானது.

இஸ்ரேல் மக்களுக்கு இறைச் செய்தியை அறிவித்த எலியா இயேசுவின் இரண்டாம் வருகையின்போது உலகின் எந்தப் பகுதியில் தோன்றுவார்?

நாம் இப்படி நினைத்து சங்கடப்படக் கூடாது என்பதற்காகத்தான் இயேசு திருமுழுக்கு அருளப்பரை எலியா என்று கூறியிருப்பார் என்று நினைக்கிறேன்.

இயேசுவின் வருகைக்கு யார் தயாரிக்கிறார்களோ அவர்களெல்லாம் எலியா தான்.

எலியாவின் வேலையைச் செய்பவர்களை எலியாவாக நினைத்து அவர்கள் சொற்படி நடப்போம்.

நாம் இப்போது இயேசுவின் இரண்டாவது வருகைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

இரண்டாவது வருகை நாம் நினையாத நேரத்தில் வரும்.

நாம் ஒவ்வொரு வினாடியும் தயாராக இருக்க வேண்டும்.

நம்மைத் தயாரிப்பவர்கள் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த நமது குருக்கள்.

அன்று இயேசு திருமுழுக்கு அருளப்பரை எலியாவாகக் கருதியது போல,

நாம் நமது ஆன்மீக வழிகாட்டிகளை எலியாவாகக் கருதி,

அவர்கள் சொற்படி நடப்போம்.

இயேசு வரும்போது நம்மைத் தயார் நிலையில் காண்பர்.

அவரோடு நமது சந்திப்பு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment