இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.
(லூக்கா நற்செய்தி 2:52)
தந்தை, மகன், தூய ஆவி பரிசுத்த தம திரித்துவத்தில் மூன்று ஆட்கள், மூவரும் ஒரே கடவுள்.
இறைமகன் மனுவுறு எடுக்கும் வரை
அவர் ஒரே ஆள் -- இறைமகன்
ஒரே சுபாவம் --தேவ சுபாவம்.
மரியாளின் வயிற்றில் இறைமகன் மனுவுறு எடுத்த வினாடியிலிருந்து
அவர் ஒரு ஆள்-- இறைமகன்.
இரண்டு சுபாவங்கள் --தேவ சுபாவம், மனித சுபாவம்.
இயேசு யார்?
கடவுள். தேவ சுபாவமும், மனித சுபாவமும் கொண்ட கடவுள்.
முழுமையாகக் கடவுள்.
முழுமையாக மனிதன்.
தேவ சுபாவத்தில் துவக்கமும் முடிவும் இல்லாதவர். மாறாதவர்.
மனித சுபாவத்தில் பிறப்பும் இறப்பும் உள்ளவர். மாற்றத்துக்கு உட்பட்டவர். குழந்தையாயிருந்து பையனாகவும், வாலிபனாகவும், பெரிய ஆளாகவும் வளர்ந்தார். 33 வயதில் இறந்தார்.
தேவ சுபாவத்தில் கடவுளுக்கு உரிய அத்தனை பண்புகளும் உரியவர்.
மனித சுபாவத்தில் பாவம் தவிர மற்ற அனைத்து மனிதப் பண்புகளும் உள்ளவர்.
இயேசு திருக்குடும்பத்தில் ஒரு உறுப்பினர்.
பெற்ற அன்னைக்கும், வளர்த்த தந்தைக்கும் கீழ்ப்படிந்து நடந்தார்.
தந்தையுடன் தச்சுத் தொழில் செய்தார்.
உழைத்து தான் உணவை ஈட்டினார்.
கடவுளாகியஅவர் நினைத்திருந்தால் உணவை ஒரே வார்த்தையில் படைத்துப் பெற்றோருக்குக் கொடுத்துத் தானும் சாப்பிட்டிருக்கலாம்.
ஆனால் அப்படிச் செய்யவில்லை.
பெற்றோருடன் அவரும் வியர்வை சிந்த உழைத்தார்.
மனிதன் என்ற முறையில் ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தார்.
30 ஆண்டுகள் குடும்பத்தில் வாழ்ந்தார். தான் யாரென்று யாருக்கும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
அவருடைய பெற்றோருக்கு மட்டும் அவர் யாரென்று தெரியும்.
அவர் சர்வ வல்லவக் கடவுள் என்று தெரிந்திருந்தும் அவருடைய பெற்றோர் சுய நன்மைக்காக அவரைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
அவர் 12 வயது சிறுவனாக இருந்த போது கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து யூதேயாவிலுள்ள
எருசலேமிலிருந்த ஆலயத்துக்கு நடந்து தான் சென்றார்கள்.
அவர் காணாமல் போன போது "கடவுள் தானே, எப்படியும் வீட்டுக்கு வந்து விடுவார்" என்று மரியாளும், சூசையப்பரும் வீட்டுக்குப் போய் விடவில்லை.
மூன்று நாட்கள் தேடி அலைந்தார்கள்.
மூன்றாம் நாள் அவரைக் கோவிலில் கண்டார்கள்.
அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார்.
அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே" என்றார்.
அவர் அவர்களிடம் "நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்றார்.
அப்போது அவருடைய விண்ணகத் தந்தையை அவர்களுக்கு ஞாபகப் படுத்தி,
"தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்டதிலிருந்து
ஏற்கனவே தன் பணியைப் பற்றி பெற்றோருடன் பேசியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.
ஆனாலும் அப்போது அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
30 ஆண்டு காலம் தனது உலக வரவின் நோக்கத்தைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்க வேண்டும்.
தனது அன்னை அமல உற்பவம், தான் மூன்று ஆண்டுகள் செய்யவிருக்கும் நற்செய்திப் போதனை, தனது பாடுகள், மரணம், உயிர்ப்பு போன்றவை பற்றித் தனது பெற்றோருடன் பேசியிருக்க வேண்டும்.
தான் குடும்பத்தில் வாழும் போதே சூசையப்பரின் மரணம் பற்றி பேசியிருக்க வேண்டும்.
சூசையப்பர் இறைவன் சித்தத்துக்கு முற்றிலும் பணிந்து நடப்பவர்.
தன் மகனின் மடியில் தலை வைத்து பாக்கிமமான மரணம் அடைந்தார்.
இயேசுவும் மரியாளும் அழுதிருப்பார்களா?
எனக்கு அப்படித் தோன்றவில்லை.
மண்ணக துன்ப வாழ்வை விட்டு இறைவன் அடி சேர்ந்ததற்காக நாம் அழுவது நமது விசுவாசப் பற்றாக்குறை.
ஆன்மீக ரீதியாகப் பார்த்தால் உலகை விட்டு மோட்சத்துக்குச் செல்வது மகிழ்ச்சியான விடயம்.
விடயம் புரிந்தவர்கள் மகிழ்ச்சியை நினைத்து அழுவார்களா?
30 வது வயது வரை பெற்றோருடன் வாழ்ந்துவிட்டு
அடுத்த மூன்று ஆண்டுகள் மட்டும் தான் இயேசு பொது வாழ்வில் ஈடுபட்டார்.
இதன் மூலம் குடும்ப வாழ்வின் மகத்துவத்தை நமக்கு இயேசு அறிவிக்கிறார்.
ஒரு பாப்பரசர், (பெயர் ஞாபகமில்லல) தனது பாப்பரசர் பட்டமளிப்பு விழாவிற்கு தன் பெற்றோரை அழைத்திருந்தார்.
விழாவின்போது தனது விரலில் அணிந்திருந்த பாப்பரசருக்குரிய மோதிரத்தை மகிழ்ச்சியோடு தன் பெற்றோருக்குக் காண்பித்தார்.
அப்போது அவரது அம்மா தனது திருமண மோதிரத்தை அவருக்குக் காண்பித்து,
"இதை நான் அணிந்திருக்கா விட்டால் அதை நீங்கள் அணிந்திருக்க முடியாது." என்றார்.
மரியாள் இல்லாவிட்டால் இயேசு இல்லை.
பெற்றோர் இல்லாவிட்டால் குருக்கள் இல்லை.
குருக்கள் இல்லாவிட்டால் இல்லாவிட்டால் ஆயர்கள் இல்லை.
ஆயர்கள் இல்லாவிட்டால் பாப்பரசர் இல்லை.
குடும்பங்கள் இல்லாவிட்டால் திருச்சபையே இல்லை.
இதிலிருந்து குடும்ப வாழ்வின் முக்கியத்துவத்தை உணரலாம்.
ஆன்மீக வாழ்வில் ஒவ்வொரு குடும்பமும் திருக்குடும்பம் போல செயல்பட வேண்டும்.
பெற்றோர் அன்னை மரியாளையும், சூசையப்பரையும் போல விசுவாசத்திலும், பரிசுத்தத் தனத்திலும் சிறந்து விளங்க வேண்டும்.
பிள்ளைகள் இயேசுவைப் போல்
ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ வேண்டும்.
குடும்ப வாழ்வு குருத்துவ வாழ்வுக்கு நிகரானது.
இதை உணர்ந்து பெற்றோரும், பிள்ளைகளும் செயல்படுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment