இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.
(மாற்கு நற்செய்தி 16:19)
இரண்டு வினாக்களுக்கு விடையாக இந்த தியானம் இருக்கும்.
1.இயேசு எப்போது விண்ணேற்றம் அடைந்தார்.
2. எப்போது விண்ணேற்ற விழாவைக் கொண்டாடுகிறோம்.
புனித வெள்ளிக் கிழமையன்று இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது, நல்ல கள்ளன் அவரை நோக்கி,
"இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்றான்.
இயேசு மறுமொழியாக,
"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார்.
இன்று என்றால் என்று?
இயேசு சிலுவையில் மரணம் அடைந்த அன்று.
"தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் "என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்த வினாடியில் .
இறக்கும் வினாடியில் உடலை விட்டுப் பிரியும் ஆன்மா அநித்திய வாழ்வை விட்டு நித்திய வாழ்வுக்குள் நுழையும் என்பது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது.
இயேசு முழுமையாகக் கடவுள்,
முழுமையாக மனிதன்.
Jesus is fully God and fully man.
முழுமையாக மனிதனான இயேசுவின் ஆன்மா இறந்தவுடன் இவ்வுலக வாழ்வை நீத்து விண்ணக வாழ்வுக்குள் நுழைந்தது.
அதே வினாடி மனுக்குலத்துக்கு மீட்பு கிடைத்தது.
அதே வினாடியில் நல்ல கள்ளனும், பாதாளத்தில் மீட்புக்காகக் காத்துக் கொண்டிருந்த அனைத்து ஆன்மாக்களும் மீட்பருடன் விண்ணகத்துக்குள் நுழைந்தார்கள்.
புனித வெள்ளிக் கிழமை தான் இயேசு விண்ணகம் எய்திய நாள்.
புனித வெள்ளியன்று இயேசுவின் ஆன்மா விண்ணகம் எய்தியது.
மரித்த மூன்றாம் நாள் உயிர்த்த விநாடியில் இயேசு ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் எய்தினார்.
விண்ணிலிருந்து தான் உயிர்த்த பின் தனது அன்னை மரியாளுக்கும், சீடர்களுக்கும் காட்சி கொடுத்தார்.
அன்னை மரியாளுக்குக் காட்சி கொடுத்த விபரம் நற்செய்தி நூல்களில் இல்லை.
அன்னை மரியாள் இயேசு உயிர்த்தபின் அவரைப் பார்க்க கல்லறைக்கு வரவில்லை
அவளது விசுவாசம் நூற்றுக்கு நூறு முழுமையானது.
இயேசு முதன் முதலில் தனது அன்னைக்குதான் தோன்றினார் என்று உறுதியாக நம்பலாம்.
2.எப்போது விண்ணேற்ற விழாவைக் கொண்டாடுகிறோம்?
இயேசு உயிர்த்த நாற்பதாம் நாள்.
"இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்." என்ற வசனத்தின் பொருள் என்ன?
''இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார்."
(திருத்தூதர் பணிகள் 1:3)
இயேசு எத்தனை முறை தோன்றினார் என்ற விபரம் நற்செய்தி நூல்களில் இல்லை.
நாற்பது நாட்களும் பூமியில் தங்கவில்லை.
அப்பப்போ தோன்றி மறைந்து விடுவார்.
"அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள்.
உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார்."
(லூக்கா நற்செய்தி 24:31)
தோன்றியது மண்ணுலகில்.
மறைந்தது விண்ணுலகுக்குள்.
அவர் மண்ணுலகில் தோன்றினாலும், தோன்றிய போது அவர் இருந்தது விண்ணுலகில் தான்.
நாற்பது நாட்களும் ஒவ்வொரு முறையும் தோன்றி மறைந்தது போல்தான் நாற்பதாவது நாளில் மறைந்தார்.
அதன்பின் அவர் சீடர்களுக்குக் காட்சி அளிக்கவில்லை.
நாற்பதாவது நாளில் விண்ணில் மறைந்து அதன்பின் தோன்றாததால்
நாற்பதாவது நாளை அவரது விண்ணேற்பு விழாவாகக் கொண்டாடுகிறோம்.
ஆனால் திவ்ய நற்கருணை மூலமாக அவர்களோடு தங்கினார், இன்றும் நம்மோடு தங்குகிறார்.
உலகம் முடியும் வரை நம்மோடு தங்குவதற்காகத்தான் தான் பாடுகள் படுமுன்பே திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.
அதோடு குருத்துவத்தையும் ஏற்படுத்தினார்.
சீடர்களுக்கு நாற்பது நாட்கள் அப்பப்போ தோன்றினார்.
ஒரு வகையில் நாம் சீடர்களை விட பேறு பெற்றவர்கள்,
அவர்களுக்குத் தோன்றி, மறைந்தார்.
ஆனால் நமக்குத் தோன்றவில்லை.
நம்மோடு வாழ்கிறார்.
இரவும் பகலும், நமது பெற்றோர் நம்மோடு வாழ்வது போல நம்மோடு வாழ்கிறார்.
உலகமாகிய நமது வீட்டில் அவர் தங்கும் அறை திவ்ய நற்கருணைப் பேழை.
நமது இல்லங்களில் நாம் வெவ்வேறு அறைகளில் தங்கினாலும் காலையில் எழுந்தவுடன் நமது பெற்றோருக்கு வணக்கம் கூறுகிறோம்.
வேண்டியதைக் கேட்கிறோம்.
அம்மா நமக்கு உணவு தருகிறார்கள்.
காலையில் எழுந்ததும் இயேசுவின் அறைக்குச் சென்று அவரை ஆராதித்து விட்டு மற்ற வேலைகளைச் செய்தால் இயேசுவுக்கு மகிழ்ச்சி.
அம்மா உணவு தருகிறார்.
இயேசு தன்னையே நமக்கு உணவாகத் தருகிறார்.
நமது உள்ளமாகிய அறையில் வந்து, நம்மோடு மட்டுமல்ல, நமக்குள்ளேயே தங்குகிறார்.
நாம் எங்கு சென்றாலும் நம்மோடு வருகிறார்.
இயேசு விண்ணிலும் இருக்கிறார்.
மண்ணிலும் இருக்கிறார்.
நம்மிலும் இருக்கிறார்.
விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்ததே நமக்குள் தங்குவதற்காகத் தான்.
நாம் பாக்கியசாலிகள்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment