Sunday, December 15, 2024

"யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு." (மத்தேயு நற்செய்தி 1:16)

"யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு." 
(மத்தேயு நற்செய்தி 1:16)

இயேசுவின் தலைமுறைப் பட்டியலில் கீழிருந்து மேல் நோக்கிப் பயணித்தால் அது ஆதாமில் போய் முடியும்.

லூக்கா நற்செய்திப்படி சூசையப்பரில் தொடங்கி ஆதாமைப் படைத்த கடவுளோடு முடிகிறது.

"ஏனோசு சேத்தின் மகன்; சேத்து ஆதாமின் மகன்; ஆதாம் கடவுளின் மகன்."
(லூக்கா நற்செய்தி 3:38)

மத்தேயு தலைமுறைப் பட்டியலை ஆபிரகாமிலிருந்து ஆரம்பிக்கிறார்.

இயேசுவை அபிரகாமின் மகன் என்கிறார்.

இருவரிடமும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.

தலைமுறைப் பட்டியல் சூசையப்பரோடு நின்று விடுகிறது.

ஏனேனில் இயேசு சூசையப்பரின் மகன் அல்ல.

ஆகவே பழைய ஏற்பாடு சூசையப்பரோடு முடிகிறது.

புதிய ஏற்பாடு சூசையப்பரின் மனைவியாகிய மரியாளிடமிருந்து ஆரம்பிக்கிறது.

பழைய ஏற்பாட்டை ஆரம்பிப்பவர் ஆதாமைப் படைத்த கடவுள்.

லூக்கா "ஆதாம் கடவுளின் மகன்." என்று சொல்கிறார்.

புதிய ஏற்பாட்டை ஆரம்பிப்பவர்  கடவுளின் தாய் மரியாள். 

இப்போது எதற்காக இந்த விளக்கம்?

ஒரு முக்கியமான இறை உண்மையைப் புரிய வைக்க.

நம் பிரிவினை சகோதரர்களுக்கு எவ்வளவு சொல்லியும் அன்னை மரியாளின் முக்கியத்துவத்தை உணர மறுக்கிறார்கள்.

மனுக்குலம் பாவத்தில் விழுந்தது ஆதாம் செய்த பாவத்தினால்.

மனுக்குலம் பாவத்திலிருந்து
எழுந்தது (மீட்பு பெற்றது) மரியாளின்  மகன் இயேசுவால். 

மீட்பின் வரலாறு மரியாளிடமிருந்து தான் ஆரம்பிக்கிறது.


"ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். 

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 1:26,28)

பழைய ஏற்பாட்டை முடித்து வைத்தவர் சூசையப்பர்.

புதிய ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தவர் மரியாள்.

மரியாளுக்கு இந்த பெருமையைக் கொடுத்தவர் கடவுள்தான்.

கடவுளே தன் தாயாகப் பெருமைப் படுத்திய மரியாளுக்கு,
 நமது பிரிவினை சகோதரர்கள் ஒரு சாதாரணப் பெண்ணுக்குரிய மரியாதையைத் தான் கொடுத்திருக்கிறார்கள்.

மரியாள் மீட்பரின் தாய்.

பைபிள் வரலாற்றில் ஒரு வானதூதரால்

"அருள் நிறைந்தவரே வாழ்க" என்று வாழ்த்தப்பட்ட ஒரே பெண்மணி மரியாள் தான்.

அநேகருக்கு வான தூதர்கள் காட்சி அளித்திருக்கிறார்கள், ஆனால் மரியாளைத் தவிர வேறு யாரையும் அவர்கள் வாழ்த்தவே இல்லை. 

வான தூதர் மரியாளை வாழ்த்துவதற்கு உரிய வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தவர் அவரை அனுப்பிய கடவுள்தான்.

ஆகவே மரியாள் அருளால் நிறைந்தவள் என்ற உண்மையை நமக்கு முதன்முதலில் அறிவித்தவர் கடவுள்தான்.

நமது தாயை நாம் தேர்ந்தெடுக்க முடியாது, ஏனெனில் தாயின் வயிற்றில் உற்பவிப்பதற்கு முன் நாம் இல்லை. 

ஆனால் நித்திய காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுள் பூமியில் மனித உரு எடுக்க அவரே தன் தாயைத் தேர்ந்து கொண்டார்.

அவள் கடவுளின் தாயாக இருந்தாலும் கடவுளுக்குக் கொடுக்கக் கூடிய ஆராதனையை அவளுக்குக் கொடுக்க முடியாது.

நாம் இயேசுவை ஆராதிக்கிறோம்.

மரியாளை வணங்குகிறோம்.

எல்லா புனிதர்களையும் வணங்குகிறோம்.

மரியாள் மற்றவர்களை விட மேலான புனிதையாக இருப்பதால் அவளை மேலான விதமாய் வணங்குகிறோம்.

ஆராதிப்பதில்லை.

இயேசுவுக்கு மட்டுமே ஆராதனை.

கடவுளுக்கு உரியதைக் கடவுளுக்குக் கொடுக்கிறோம்.

புனிதர்களுக்கு உரியதைப் புனிதர்களுக்குக் கொடுக்கிறோம்.

பிரிவினை சபையினர் மரியாள் பக்தியை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் மற்றவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

கடவுளின் தாயால் தன் மகனிடம் வேண்ட முடியாதாம்.

இது வேடிக்கையாக இல்லை!!!

ஒரு சிறு அனுபவம்.

ஒரு முறை சில பிரிவினைச் சகோதரர்கள் ஆலயம் கட்ட நன்கொடை வாங்க வந்திருந்தார்கள்.

நான் அவர்களிடம்,

"என்னோடு சேர்ந்து ஒரு செபம் சொல்லுங்கள். செபம் முடிந்தவுடன் நன்கொடை தருகிறேன்" என்றேன்.

சரி என்றார்கள்.

நான் "அருள் நிறைந்த மரியே வாழ்க"  என்று ஆரம்பித்தேன்.

உடனே "நன்கொடை வேண்டாம்" என்று சொல்லிக்கொண்டே எழுந்து போய் விட்டார்கள்.

என்ன பிடிவாதம்!!

"அருள் நிறைந்த மரியே, எங்களுக்காகவும், நம்மை விட்டுப் பிரிந்து சென்றவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள்."

பிரிந்து சென்றவர்கள் தாய்த் திருச்சபைக்குத் திரும்ப வந்து சேர வேண்டும்.

இயேசுவை ஏற்றுக் கொள்ளும் அனைவரும் அவரது தாயையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பிரிந்து சென்றவர்கள் தாயிடம் திரும்பி வரும்படி அவர்களுக்காக வேண்டிக்கொள்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment